ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

சொந்த ஊருக்கு ஒரு நடை போயிட்டு வாங்க..

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், கடைசி வரை சொந்த ஊரிலேயே வாழ்வது   என்பது முடியாத காரியம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம், வேலையில் பணி மாற்றம் என்றால் மட்டும், சொந்த ஊரை விட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த நிலை  கொஞ்சம் மாறி, வேலை என்றாலே வெளியூர் தான் னு ஆரம்பிச்சு இப்பவெல்லாம் ஐந்தாம் வகுப்புக்கே வெளியூரில் விடுதி வாழ்க்கை தான். 

இன்றைய காலகட்டத்தில் எல்லாருமே, புதியவற்றை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். புதிய தேடல், புதிய வாழ்க்கை முறை, புதிய நண்பர்கள்.. இன்னும் பல. ஒரு நாள் ஒரே ஒரு நாள் மட்டும் நாம் தவற விட்ட விஷயங்களை நினைவு கூர்ந்தோம் என்றால், பல நினைவுகள் இறக்கை கட்டி நம் கண் முன்னே வரும்.


வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருப்பவர்கள் ஊருக்கு வரும் வழியைபார்த்தாலே நிறைய மாற்றங்கள். புதுப்பிக்கப்பட்ட அல்லது மிகவும் பழுதடைந்த சாலை, புதிய தெரு விளக்குகள், ஊராட்சி மன்ற கட்டிடத்தில் பெயர் பலகை மாற்றம், புதிய குடிநீர்க் குழாய்கள், வண்ணம் பூசி ஈர்க்கும் ஆரம்பப்பள்ளி, இன்னும் கொஞ்சம் தொப்பையோடு கெத்தாக சிரிக்கும் பிள்ளையார், பளிச்சென்று இருக்கும் வாய்க்கால்கள், புதிக முளைத்துள்ள வீடுகள், வெட்டப்பட்ட மரங்கள், உள்ளூர் சினிமா பட போஸ்டர் கள், வழியெங்கும் சிரிக்கும் சிநேகமான முகங்கள், ஐஸ்வர்யா ராய் சிரிக்கும் ப்ளெக்ஸ் போர்டுகள் இன்னும் எக்கச்சக்கமாய் பல. 

இதில் உறவுகளைத் தான் ரொம்பவே மிஸ் பண்றோம். சொந்த ஊரில் ஏதேனும் விசேஷம்  என்றால் எல்லாம் பார்த்த முகங்களாவே இருக்கும். ஆனால், யாரு பெரியம்மா, யாரு அத்தை முறைன்னே தெரியாது. அதுவும் நிறைய பேர், வாலண்டியரா வந்து, "கண்ணு.., நல்லாருகறியா?? நான் யாருன்னு தெரியுதா?" னு கேட்பாங்க. இன்னார் நீங்க, நல்லாறுகறிங்களா? னு திருப்பிக் கேட்டோம் னா, அவங்க முகம் மலரும் பாருங்க, நமக்கே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
இன்னும் சில பாட்டிகள், "சின்ன புள்ளயா இருக்கும் போது, உங்க அப்பன் (??!!) கூட வண்டியில் காட்டுக்கு வரும் போது பாத்தது, துளியூண்டு இருப்ப, இப்ப நல்ல வளந்துட்ட" னு சொல்லும்போது, பேரரசு படத்தில் வர மாதிரி பிளாஷ் பேக் நமக்குள்ளயே ஓடும்.


அதுவும் விசேஷ வீட்டில் சாப்பிடறது இருக்கே, வாழை இலை போட்டு வரிசையா உட்காந்தால், விசேஷ கவனிப்பு நமக்கு கண்டிப்பா இருக்கும். "ஏம்மா, ஒரம்பறைய கவனிங்க","மாப்பிள்ளைக்கு இனிப்பு சேத்து வைங்க" னு ஆளாளுக்கு உத்தரவு போடுவாங்க. அதுவும் எங்க ஊர் பக்கம் பந்தியில் அப்பளம் போட்டு பழம், சர்க்கரை போட்டு நொறுக்கி பிசைந்து சாப்பிடுவோம். ரொம்ப நல்லாருக்கும். எங்க கல்லூரியில் அதை சொன்னால் சிரிக்கிறாங்கப்பா. நீங்க பப்ஸ் க்கு சாஸ் ஊத்தி சாப்பிடுவதற்கு இது ஒன்னும் மோசம் இல்லை.

அம்மா வோட பருப்பு சாம்பார், அத்தையோட புளிக்கொழம்பு, சித்தி வீட்டில் சிக்கன், அம்மாயி வீட்டில் வடை, பாயசம், பெரியம்மா வீட்டில் முட்டை குருமா ' ன்னு ஸ்பெஷல் சுவை நம்ம ஊர் சாப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
வாகன நெரிசலே இல்லாத ரோட்டில் குட்டி பசங்களுக்கு சைக்கிள் கத்துக் குடுப்பதாகட்டும், சுரை புருடை கட்டி நீச்சல் கத்துக்குடுப்ப தாகட்டும், நுங்கு இல் வண்டி ஓட்டுவ தாகட்டும், கோவைக்காய்க்கு கண், மூக்கு, மீசை வைத்து விளையாடுவதாகட்டும், தென்னை ஓலையில் கடிகாரம் செய்து கட்டிக்கரதாகட்டும், இளநீர்க்கு பப்பாளி த் தண்டு போட்டு குடிப்பதாகட்டும், நம்ம ஊருக்கு நிகர் நம்ம ஊர் தான்..

இனி இவ்வளவையும் மிஸ் பண்ணுவிங்க?? விடு ஜூட்...........2 கருத்துகள்:

 1. இனி இவ்வளவையும் மிஸ் பண்ணுவிங்க??
  I missed it..
  But Enjoyed in your words...

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பொண்ண யாராவது ஒரு புது இயக்குனர்கிட்ட உதவியாளரா சேர்த்து விடுங்கப்பு. கிராமத்துப் படம் எடுக்க நிறை.ய் .ய குறிப்புகள் கிடைக்கும்!!.
  நல்ல சாப்பாடுக் கிடைக்காம இங்கக் காய்ஞ்சி கெடக்கோம். தலை வாழை இலை விருந்தப் படத்துலக் காமிச்சு வெறுப்பேத்துறாங்க....!!!

  பதிலளிநீக்கு