வியாழன், மே 02, 2013

எனதறுமை நாட்காட்டியே..

இனி, அதிகாலையில் சுதந்திரமாய் காலை நடை போக முடியாது
இரண்டடிக்கு ஒரு தரம், பரிவான விசாரிப்புகளும் தட்டிக்கழிக்க முடியாத பயண அழைப்புகளும்...
என் தனிமை பறிபோகிறது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..

இனி, ஒரு வேளை கூட சாப்பிடாமல் அசால்டாக தப்பித்துக்கொள்ள முடியாது
வயற்காட்டு கீரையும், பக்கத்து வீட்டு சுரைக்காயும் மிரட்டியேனும் சாப்பிட வைத்து விடுமே.. 
என் வறட்டு கவுரவம் உடைத்தெறியப்படுகிறது -  ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..

இனி, 24 மணி நேரம் இணைய இணைப்பு இல்லை
ஏன், சரியான கைபேசி கோபுரம் கூட கிடையாது 
எனக்கான என் நேரத்தை இழக்கிறேன் - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..

இனி, நடு இரவு வரை வெட்டியாக படம் பார்த்தும் 
அரட்டை அடித்தும் கழிக்க முடியாது
என் சந்தோஷ வட்டங்கள் இறுக்கப்படுகின்றன - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்.


இனி, சுற்றுப்புரம் மறந்து பாடல்களை அலர விட்டு பாடித்திரிய முடியாது
என் சுதந்திரம் பறிபோகிறது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..


இனி, தலைக்கு மேல் சுழழும் மின்விசிறி கிடையாது, பயமுறுத்தும்  கரும்பலகையும், அறிவிப்பு பலகையும் கிடையாது
என் கற்றல் வாழ்க்கை முடிந்துவிட்டது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..


இனி, என் தம்பியுடனான தொலைபேசி வாதங்கள், செல்ல சண்டைகள் கிடையாது, நேரடி வன்முறைகள் தான்
மாதமொருமுறை வீட்டிற்கு போகும் விதிமுறைகள் கிடையாது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..


என் தனிமையை கொண்டாடும் மாமர நிழல், 
என் நேரத்தை பங்கு போடத்துடிக்கும் தென்னந்தோப்பு, 
என் சந்தோஷ வட்டங்களுக்குள் வரும் எங்கள் மக்களின் வெகுளியான வெள்ளத்திப் பேச்சுகள், 
ஆட்டுக்குட்டிகளோடும் கன்றுக்குட்டிகளோடும் ஓடித்திரியும் என் சுதந்திரம், 
தாத்தாவின் பழைய/புதிய புத்தகங்கள் கற்றுக் கொடுக்கும் பாடம், 
தோல்வியுடனேயே முடிந்துபோகும் என் தம்பியுடனான சண்டைகள்,

நாட்காட்டிகளை கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்..
எனக்கான என் வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டியதற்காக..

1 கருத்து: