திங்கள், ஆகஸ்ட் 22, 2011

வணக்கம் தமிழகம்...

சன் டிவி இல் 'வணக்கம் தமிழகம்' னு ஒரு நிகழ்ச்சி வருமே, அதன் நேரடி ஒளிபரப்பை பார்த்து இருக்கீங்களா? எங்க ஊருக்கு வாங்க, நான் நேர்லயே காட்றேன். 
காலைல 5.30 க்கு பால் சொசைட்டி க்கு பால் கொண்டுட்டு போனால், கோவில் திண்ணை, பயணிகள் நிழல்குடை, ஆலமரத்து திண்ணை, வாய்கால் பாலம் நு மேடை ஏதாவது கிடைச்சுறும். முதல் 2 நிமிஷம் எதுவுமே பேசாமல், தொண்டையை செருமிகிட்டு இருப்பாங்க. அப்புறம் பாருங்க, சர வெடி தான்..
பெரும்பாலும் ஆரம்பிக்கின்ற முதல் விஷயம், 'நேத்து மார்க்கெட் ல மஞ்சள் என்ன விலை?', அப்புறம் பால், தக்காளி, தவிடு  னு போய் தங்கம், பெட்ரோல் ல வந்து நிக்கும்.


சும்மா விலையை பத்தி மட்டும் பேசிட்டு விட்ருவாங்க னு நினைக்காதிங்க. பீடி கம்பெனி எது நல்லாருக்கும், யாரு ஒரு நாளைக்கு எத்தனை குடிபாங்கன்னு நிலவரம் பார்த்துட்டு, சந்தைல தக்காளி யார் கிட்ட வாங்கினா நல்லாருக்கும் ஒரு அலசல் நடக்கும்.
அப்புறம், செல் போன். எவ்வளவு போட்டால், இவ்வளவு பணம் (talk value pa) ஏறுது, அதில் கடை காரனுக்கு கமிஷன் எவ்வளவு, யார் யாருக்கு என்ன என்ன, அவன் எப்படி சம்பாதிக்கிறான்'னு கணக்கு போடுவாங்க. வோடபோன் ஓட்டை போன் ஆகறதெல்லாம் இங்க தான்.
அப்புறம், இந்த நிழல் குடை கட்டினத்தில் குத்தகை காரர் எப்படி சம்பாதிக்கிறார் , ஊராட்சி தலைவர் கு என்ன பங்கு, MP, MLA வரைக்கும் கொண்டு பொய், தமிழக முதல்வரையே இழுப்பாங்க. அது கருணாநிதி னாலும் சரி, ஜெயலலிதா  னாலும் சரி, யாரும் தப்ப முடியாது.

அவங்களை விடுங்க, ஒபாமா வே சில சமயம் அல்லாடுவார். அந்த பேச்சு இப்படி ஆரம்பிக்கும், இன்னார் பேரன் போன மாசம் தான் வேளைக்கு போனான் , மாசம் 30,000 சம்பளம் வாங்கறான். அதெப்படி அவங்களுக்கு கட்டுமா? னு ஒரு கேள்வி வரும். அதுக்கு அப்புறம், இன்னார் பையன் அமெரிக்க வில் ஒன்றரை லட்சம் ம் பாங்க. அங்க தான் ஒபாமா அண்ணன் (அண்ணன் வேணாம், சித்தப்பா ) வருவார். அவர் வந்ததினால் வேலை போகுமாம், சம்பளம் குறையுமாம் னு சுவாரஸ்யமா போகும்.
இன்ஜினியரிங் படிச்சுட்டு நம்ம ஊர்ல வேலை கிடைக்காம எந்த பையன் இருக்கான், அவன் படிக்க எவ்வளவு ஆச்சு, நன்கொடை எவ்ளோ குடுத்தாங்க கிறதில் ஆரம்பிச்சு, அந்த கல்லூரி விடுதியில் தோசை சுட மெசின் இருக்கு கிறது வரை பேசுவாங்க. 

அப்புறம் ஒரு 2 நிமிஷம் இடைவேளை. மறுபடியும் தோசை ல வந்து நிக்கும். தோசை சாப்பிட்டா பசி எடுக்கறதில்லை, தேங்காய் சட்னி சாப்பிட்டால் நெஞ்சு கரிக்கிறது, டாக்டர் கிட்ட போனால் ஒன்னும் இல்லைன்னு சொல்றாங்க, நு சின்னதா ஒரு புலம்பல். (என்னங்க, எல்லா டாபிக் உம் வந்துருச்சா??)
இன்னைக்கு இது போதும் னு முடிவு பண்ணி, யாரோ ஒருத்தர் எந்திரிபாங்க, அப்படியே கூட்டமும் கலைந்து விடும்.
அப்புறம் என்ன?? நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 'தமிழ் மாலை' தான்..

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கல்வி - இப்படியும் இருக்கலாமே...

இந்த தலைப்பை பார்த்ததும் தெரிஞ்சிருக்கும், அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியா சமச்சீர் கல்விக்கு வருவாங்கன்னு. சமச்சீர் கல்வியை விமர்சிக்கின்ற அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது, 

ஒரு மாணவர் என்கின்ற முறையில் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்காக, இப்பொதுள்ள கல்வி முறையை நான் குறை கூற வில்லை. வெண் பொங்கலில் உள்ளது போல அங்கங்கே கொஞ்சம் (அதிகமான) மிளகுகள்! அதை விரும்பி உண்பவர்கள் வெகு சிலரே!! மிளகுகளை கலைத்து, இன்னும் கொஞ்சம் முந்திரி சேர்த்து, நெய் விட்டு, திருப்தியாக சுவையாக அளிக்கலாமே??!!


ஐந்தறிவு மிருகங்கள் கூட தன குட்டி களுக்குத் தேவையான வற்றையே முழுமையாக கற்றுக்கொடுக்கின்றன. காக்கை, குருவி கள், பறக்கவும், இரை தேடவும் மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. நீந்துவதற்கோ, ஓடுவதற்கோ கற்றுக்கொடுப்பதில்லை. ஆயினும், அவர்கள் உலகம் அவ்வளவு போட்டி நிறைந்ததல்ல. நம் உலகை சமாளிக்க அனைத்து த்துறையிலும் திறன் அவசியமே. அத்திறன் அரைகுறையாய் புகுத்தபடுகிறது என்பதே எனது வாதம். புகுத்தபடுகிறது என்பதை விட வலுக்கட்டயமாக திணிக்கபடுகிறது என்பதே சாலப் பொருந்தும். இப்போதெல்லாம், கல்லூரி ப்படிப்பு கூட, விருப்பதிற்கேற்ப  இருக்கிறது என்று எண்ணிகொள்ளலாம்.. (எண்ணம் மட்டும் தான்!! அவரவர் கஷ்டம் அவரவருக்கு :) ). ஆனால், பள்ளிபடிப்பு??

ஆக, எப்படி த்தான் இருக்க  வேண்டும் கல்வி?? அப்படி கேளுங்க.. எத்தனை குழு?? துணை வேந்தர், விரிவுரையாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் என் ஆய்வாளர்கள்.. இவர்களை  எல்லாம் கேட்கின்றீர்களே.. எதாவது மாணவர்களை கேட்கலாம் அல்லவா??


இயற்பியலில், பிரஷர் குக்கரில் ஆரம்பித்து, டிவி வரை எப்படி இயங்குகிறது என்று கற்றுக்கொள்கிறோம். 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவரிடம், டிவி எப்படி இயங்குகிறது என்று கேட்டால் விழிப்பார். ஆனால், அவருக்கு சந்தையில் இருக்கும் LCD, LED முதல் புதிய வரவு ஜப்பான் டிவி கள் வரை அத்துபடி. நான் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய வேண்டும் என கூறவில்லை, நான் படித்த அடிப்படை விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்றே கூறுகிறேன். 

வேதியிலில், Acid, Base என்று 2 தடிமனான புத்தகங்கள், பற்றாக்குறைக்கு குறிப்பு புத்தகங்கள் எல்லாம் ஏறத்தாழ 2.5 ஆண்டுகள் படித்து, தேர்வெழுதி, 6 மாதம் கழித்து, ஏதேனும் மருத்துவக்குறிப்பில் இந்த வார்த்தைகளை காண நேரிட்டால், புத்தகத்தின் அட்டையும், தடிமனும் மட்டுமே நினைவில் நிற்கும். அதன் பொருட்டா கற்கிறோம்?? 

எவ்வித கணக்கையும் கால்குலேட்டரிலும், கணினியிலும் ஏன் அபாக்கசிலுமே போடத்தெரிந்த நமக்கு மனக்கணக்குகளை ஏன் போடத்தயங்குகிறோம்?? ஏன் தடுமாறுகிறோம்??? ஏன் கால்குலேட்டரையே நாடுகிறோம்???

இந்த தடுமாற்றத்தை CBSE ஒ  Matric ஒ ஏன் சமசீர் கல்வியோ தர முடியாது. ஒரு மாணவன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறானெனில், அவன் CBSE யிலும், தடுமாறி       
உரையாடு கிறான் என்றால் Matric பள்ளியிலும், ஆங்கிலத்தை லட்சியம் செய்யாமல் , தமிழில் உரையாடு கிறான் என்றால் அரசு பள்ளியிலும் பயின்றவனாக இருக்க வேண்டும். முதற்கட்ட இடைவெளி இங்கு தான் தொடங்கு கிறது. 

ஏறத்தாழ, Matric மற்றும் அரசு பள்ளி படங்கள் ஒன்றுதான் எனினும், பாடத்தின் தரம் மற்றும் ஆழம் வேறுபாடும். CBSE ஐ பொறுத்த மட்டில், அது விரிவு படுத்தப்பட்ட, அதிக செய்முறை விளக்கத்துடன் கூடிய, பளுச்சுமையுடன் கூடியது எனலாம். பாடத்துடன் பிற ஆர்வங்களையும் வளர்த்து விடுவது (கவனிக்க!! வளர்ப்பது வேறு, வளர்த்து விடுவது வேறு) இதன் பலம்.



அதற்காக, '3 இடியட்ஸ்' படத்தில் வருவது போல வேண்டும் என்பதல்ல இதன் முடிவுரை. எந்த வகை கல்வியானாலும் ஈடுபாட்டோடு, நாட்டத்தோடு , சுற்று புறத்தோடு ஒன்றி கற்க வைத்து, இடமறிந்து துணிவுடன் செயல்பட வைத்தலையே எங்கள் இளையதலைமுறைக்கு போதிப்பதை விரும்புகிறோம்.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

காலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(

எந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. 

                                   குழந்தை, மழை, இரயில் வண்டி 




இவை மூன்றும் திகட்டாத, என்றும் மாறாத ஆச்சர்யங்கள். ஆனாலுமே, இப்பொது குழந்தைகள் கூட சில சமயம் வயதுக்கு மீறிய பேச்சுக்கள் மூலம் நம்மை திகைக்க வைக்கின்றன. இரயில் வண்டிகளில் கூட இப்போதெல்லாம் ஒரு இயந்திர தனம் குறுக்கிட்டு விட்டது. மழையை இரசிப்பதற்கு கூட நம்மிடம் நேரமில்லை. அப்படி இரசித்தாலுமே, ' இது அமில மழையோ??' என்ற அச்சம் தோன்றி மறைகிறது. காலம் மிகவும் மாறிவிட்டது. 

எங்க ஊரும் அப்படிதான். நான் இளநிலை படிப்புக்காக 5 வருஷம் முன்னாடி எங்க கிராமத்தை விட்டு வெளியே வந்தேன். அப்போ இருந்த சி(ப)ல  விஷயங்கள்,  இப்போ நிச்சயமா இல்லை.

மஞ்சள் காட்டில் அப்போதெல்லாம் இரசாயன பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி எல்லாம் தெளிக்க மாட்டோம்.அதனால, பீட்ரூட், காரட், ஏன் முள்ளங்கி கூட நல்லா விளையும். இப்பவெல்லாம், மணத்தக்காளி கூட செழிப்பா வளரதில்லை. 



முன்னாடி எல்லாம்,எங்க வீட்ல நெல்லி - 2 மரங்கள், கொய்யா - 3, சப்போட்டா  - 1, ஆரஞ்சு - 1 , கொலுமிச்சை - 1, மாமரம் - 2, பாக்கு மரம் - 7, பப்பாளி - 4 மரங்கள் இருந்துச்சு. இப்ப முறையே 1, 2, 1, 0, 0, 1, 0, 0 மரங்கள் தாங்க இருக்கு. பாசன வசதி, நோய் தாக்குதல், இடப்பற்றாக்குறை ஆகியவற்றினால் அழிந்தும், அழிக்கபட்டும் விட்டன.

வாழைத்தோப்பு எப்பவுமே பசுமையா, தலை வாழை இலையோட, முரட்டு தாரோட இருக்கும். இப்ப எல்லாம், அப்படி கிடைப்பதே அதிசயமா போச்சு.

பன்னீர் ரோஜா, பட்டு ரோஜா, சிமெண்ட் ரோஜா, செவ்வந்தி, முல்லை, குண்டு மல்லி, கனகாம்பரம், மயில் மாணிக்கம், நந்தியாவட்டை,  செம்பருத்தி, மருதாணி, சங்கு பூ னு ஏகப்பட்ட செடி வகைகள் இருக்கும். 

ஆனா, இப்ப எங்க கேட்டாலும், ஊட்டி ரோஸ், பட்டன் ரோஸ், டேபிள் ரோஸ் மட்டும் தான்.

எங்க பாத்தாலும் பசுமையா இருக்க காரணமே அருகம் பில் தான். இப்ப எல்லாம் களைகொல்லி அடிச்சு அடிச்சு, மாட்டுக்கே பசும் பில் கிடையாது. மாட்டுத் தீவனம் தான். ஒரு மூட்டை ரூ. 430. இப்படி தீவனம் போடறது மாட்டை உறிஞ்சி பிழிந்து பால் கறக்கற மாதிரி. எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம்??



சாதாரணமாவே, துளசி, திருநீற்று பச்சை, சிறியா/ பெரியா நங்கை எல்லாம் வழி எங்கும் இருக்கும். இப்ப பல் வலின்னு தேடின கூட கிடைப்பதில்லை. (உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா?? என்ன கொடுமை பா இது??)

இன்னொரு விஷயம் பாத்திங்கன்ன, மாட்டு வண்டி. டவுன் ல கூட மாட்டு வண்டி இருக்குங்க. கிராமங்களில் தென்படுறதே இல்லை. அட, மாட்டு வண்டிய விட, சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட் எல்லாம் பார்ப்பதே ரொம்ப அதிசயம் தான்.


நாங்க கூட இப்ப பாரதிராஜா வின் கிராமத்தை அதிசயமா பார்க்கிறோம் ????

மழை காலங்களில் முளைக்கின்ற காளான், சாலை எங்கும் பூக்கும் கமலா பூ, ஆவாரம் பூ , நாரைகள், வெயில் காலத்து தெலுகு, நுங்கு, புது பானை தண்ணீர், பனி காலத்தில் பனங்கிழங்கு சுட்டு சாப்பிடுகின்ற சுகம்... இப்பொது எல்லாமே ஓடி ஒளிந்து விட்டது. நானும் ஒவ்வொரு விடுமுறை களிலும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.. உங்களுக்கேனும் அகப்படுகிறதா??