திங்கள், அக்டோபர் 12, 2015

அம்மாவின் உலகம்

தன் பிறந்த வீட்டிற்கு செல்வதற்கு நொண்டி சாக்குகளையும் பொய்களையும் தேடுவதிலிருந்து தொடங்குகிறது அம்மாக்கள் என்னும் குழந்தையின் உலகம். அம்மாக்களின் உலகத்தில் என்ன இருக்கபோகிறது பெரிதாக? சமையலறை  வாசமும்  பிள்ளைகளின் நேசமும் தவிர? சொல்லி சொல்லி ரசிக்க ஆயிரம் உண்டு. அதுவும் பெண்  பிள்ளைகளை பெற்ற அம்மாக்களின் ஆசைகளுக்கு லிங்கேஸ்வரன் என்ன, கே.எஸ். ரவிக்குமாரே  வந்தாலும் அணை கட்ட முடியாது.

விஜய் டிவி சரவணன் - மீனாட்சி சீரியல் மீனாட்சி- ஒரு சாயல் பாத்தா என் பொண்ணு மாதிரியே இருக்குல்ல'னு நாலு பேர் இருக்கும் போது opinion கேப்பாங்க பாருங்க, நமக்கே இது செம காமெடியா இருக்கும் , அப்ப அந்த நாலு பேருக்கு எப்படி இருக்கும்?   இப்படி நம்ம பெருமைய சொல்றேன்னு வண்டி வண்டியா பன்னு வாங்கி கொடுப்பாங்க. விளம்பர இடைவேளைகளில் வரும் இலட்ச ருபாய் கார்களும் பல ஆயிரம் மதிப்புள்ள புடவைகளும், தன் மகள்களின் திருமண சீர்களுக்காகவே என்ற நினைப்பு அவர்களுக்கு!

குறிப்பாக அப்பாவும் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் சமயங்களில் அம்மாக்கள் எடுத்து விடும் கதைகள் ஏராளம். மகி (மகி என்கிற மகேஸ்வரி - என் உயிர் தோழி) அவ பையன ஸ்கூல் - சேர்த்துத்துட்டாளா? அவளுக்கும் உனக்கும் ஒரே வயசு தான? போன வாரம் ஒரு கல்யாண பத்திரிக்கை வந்துச்சே, அந்த பொண்ணுக்கா 5 லட்சத்துல கார் வாங்கி தராங்க? இந்த கேள்விகள் எனக்கல்ல என்பது மிக நன்றாகத் தெரியும்! இருந்தாலும் பதில் சொல்லிக்கொண்டு அப்பாவை கள்ளப்பார்வை பார்க்கும் தருணங்கள் எல்லாம் பொக்கிஷம்!!

மகளுக்கு என்று நேர்ந்து விடப்பட்ட பிரிக்கப்படாத பால் குக்கர், இரண்டு பேருக்கு சரியாக இருக்கும் என்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட ரைஸ் குக்கர், இந்த ஹாட் பேக் நல்லா இருக்குல்ல? சரி அக்கா வச்சுக்கட்டும்... இப்படி மகளுக்கு பத்திரப்படுத்தப்பட்டவை ஏராளம்! இதில் 'அம்மா' குடுத்த கிரைண்டர், மிக்சி  யும் அடக்கம் (அம்மாக்கள் வாழ்க  :P ) என்றிலிருந்து இப்படி மகள்களுக்காகவே வாழ்த்து வருகிறாள் என்பது புரியாத புதிர்..

எனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வேணும், என் பொண்ணு ஆபீஸ் போறத தினமும் பாத்துப்பேன் என்று ஆசைப்படும் போதும்,
எனக்கு என் பையன் தான் வேணும், நீயா கடைசி வரை என் கூட இருப்ப? என்று வீம்பு பேசும்போதும்,
வீட்டுக்கு வா தினமும் உனக்கு சுரைக்காயா செஞ்சு போடறேன்னு சண்ட போடும் போதும்,
நடு ராத்திரியில் எனக்கு பிடிக்குமென்று குலாப்ஜாமுன் செய்யும் கிறுக்குத்தனத்திலும் (அம்மா!! சாரி :P ),
அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து, பல மைல் தூரத்திலிருந்து என்னை சரியான நேரத்திற்கு எழுப்பும் பொறுப்பிலும்,
தனக்கு யாரென்று தெரியவில்லை என்றாலும் நான் திட்டும் போது கூட சேர்ந்து திட்டும் உரிமையிலும்,
எவ்வளவு கஷ்டத்திலும் எனக்கு தைரியம் சொல்லும் தன்னம்பிக்கையிலும்,
எதுக்கு இவ்ளோ கஷ்டப்படற என்று திட்டும் அக்கறையிலும்,
எனக்காக சிந்தியிருக்கும் உதிரத்திலும், கண்ணீரிலும், வியர்வையிலும் ஆயிரம் முத்தங்கள் உங்களுக்காக தருகிறேன் அம்மா!!


என் அம்மா - அவள் அம்மாவுடன்!!
பெருமைப்படுகிறேன் என்றும்  உன் மகளாக :)

திங்கள், மார்ச் 23, 2015

ஸ்மார்ட் போன் களேபரங்கள் - பகுதி 1

ஈரோட்டுப் பொண்ணு சென்னைப் பொண்ணா ஆனதுல இருந்து blog பக்கமே வரத்து இல்லைங்கற complaints-அ compliments-ஆ எடுத்துகிட்டு கம்ப்யூட்டர் கிட்ட இருந்தும் மைக் கிட்ட இருந்தும் கை யை எடுத்துகிட்டு, பென்சில் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். Cognizant புண்ணியத்துல கம்ப்யூட்டர் -ம் FM ரெயின்போ புண்ணியத்துல பேச (மொக்கை) போட ஒரு மைக்கும் கெடைச்ச (இன்ப) அதிர்ச்சியில் தல கால் புரியாம ப்ளாக் பக்கமே வர முடியாம போச்சு! கண்டுக்கல அப்படிங்கறது தான் நிஜம்.அப்பப்ப C2 (காக்னிசன்ட் பிளாக்கர்) ல எழுதினாலும், பிளாக்கர் ல எழுதற மாதிரி வருமா? ப்ளாக் followers எல்லாம் என்னை மறந்தே போயிருப்பாங்க :( இனி கண்டிப்பா 15 நாளுக்கு ஒரு போஸ்ட் ஆவது கண்டிப்பா எழுதணும்'னு முடிவு பண்ணிட்டேன்.

ஸ்மார்ட் போன் களேபரங்கள் - பகுதி 1

ஆடு மேய்க்கறவன் எல்லாம் Android போன் வச்சுருக்கற காலம் இது. எனக்கெனவோ இந்த Android கையில் சிக்கினது 6 மாசத்துக்கு முன்னாடி தான். என்னதான் வேலைக்கு வந்தாச்சு சம்பாதிக்க அரம்பிச்சாச்சு-னு  இருந்தாலும், போன் மேல அவ்வளவு ஈடுபாடு வரல.காலேஜ் படிக்கும் போது  என் தோழி வைத்திருந்த 3000 ரூபாய் SAMSUNG போன் தான் டிரீம் போன்-ஆ இருந்துச்சு (உச்சகட்ட லட்சியமே அப்  அதாங்க). கேம்பஸ்  இன்டர்வியூவில் வேலை கிடைத்த செய்தியை வீட்டுக்கு சொல்லக்கூட முடியாம, என்னோட ஸ்மார்ட் ஆன உயிருக்கு ஆபத்தான நிலைமையில போராடிட்டு இருந்தது. இந்த கதையை ரெண்டு எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு எங்க அப்பா கிட்ட சொல்லி கரைய வச்சு, நானே எதிர்பார்க்காத விதமா 5000 ரூபாய்க்கு  SAMSUNG டச் ஸ்க்ரீன் போன் வாங்கிக்குடுத்தாரு. சே! கடவுள் இருக்கார்யா !!!!!                                     

பொழைக்கற புள்ள 5000 ரூபாய்க்கு போன் வாங்குமா? மாட்டுக்கு தவிடு எடுக்க கூட காசில்லாம இருக்கேன் என்ற தத்தா, பாட்டியின் முணுமுணுப்பை (அட, சத்தமாவே 4 வாட்டி திட்டிட்டாங்க) மீறி என் brand new போன் கைக்கு வந்து சேர்ந்தது.

நானும் இந்த டச் ஸ்க்ரீன் போன் எல்லாம் வாங்க மாட்டேனான்னு ஏங்குன காலம் எல்லாம் போய், பிறந்த குழந்தையை தொடற மாதிரி லைட் ஆ சாப்ட் ஆ யூஸ் பண்ண ஆரம்பிச்சு, போக போக கோபம் வந்தா தூக்கி வீசிப்போடற பொருளா ஆய்டுச்சு. ஆசையா போன் வாங்கின 4வது மாசம் சொன்னாங்க, இது failure model னு! அட போங்க பாஸ்..  எது எப்படி இருந்தா என்ன? நமக்குத் தேவை ஒரு டச் ஸ்க்ரீன், பேருக்கு ஒரு கேமரா, ஒரு 2 GB மெமரி கார்டு. இது போதுமே !

போன் வாங்குன புதுசுல, தாத்தா, பாட்டி கூப்பிட்டா கூட அவங்க பொக்க வாய் சிரிப்போட இருக்கற போட்டோ எல்லாம் செட் பண்றது, அம்மா-க்கு ஒரு ரிங் டோன், அப்பா-வுக்கு ஒன்னு , பிரண்ட்ஸ்-க்கு ஒன்னு-னு பண்ணாத அலப்பற இல்ல. அப்பப்ப சுவிட்ச் ஆப் ஆகுறது, எந்த app-ம் சப்போர்ட் ஆகாது , பாட்டரி வீக், நெட் கனெக்ட் பண்ணா சுவிட்ச் ஆப் ஆய்டும்.. இப்படி ஆயிரம் குறை இருந்தாலும், அது என் செல்ல குட்டியாகவே இருந்தது. அப்புறம் தான் வந்தது ஒரு prestige issue. "நீ Watsapp ல இல்லையா?"

                                                
2 மாசத்துக்கு 100 ரூபாய் க்கு மெசேஜ் பூஸ்டர் போட்டு மெசேஜ் பண்ணா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்க. ஹே! நான் மெசேஜ் ஏ பாக்கமாட்டேன், Watsappல பிங் பண்ணவேண்டியது தான? - னு கேட்டு கடுப்பேத்துவாங்க. 4 பேர் சேர்ந்து ஒரு குரூப் , அதுல போன்ற மொக்கைய ஆபீஸ் ல வந்து கை கொட்டி சிரிப்பாங்க. நமக்கா கடுப்பாகும் :(


இங்க தான் இப்படின்னா, FM-ல Duty-chart வேணும்-னு PEX(Programme Executive)கிட்ட கேட்டா, அது watsapp குரூப்-ல போட்டாச்சே, நீ பாக்கல? (எங்கநான் தான்  watsapp-லையே இல்லையே) Mam, ப்ளீஸ், அத கொஞ்சம் எனக்கு மெயில் பண்றிங்களா ? மெயில்-னா ஜிமெயில் தான? நான் வீட்டுக்கு போய் ipad-ல  wifi கனெக்ட் பண்ணி உனக்கு மெயில் பண்றேன்!!!! (சிவரஞ்சனிநீ எல்லாம் எதுக்கு Cognizant  வேலை பாக்கறசெத்துரு ;()


அட இதெல்லாம் கூட தாங்கிக்கலாம். எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு, பத்தாவது தாங்க படிக்குது, உங்க நம்பர் ஏன்  அக்கா Watsapp-ல வரல? (அங்க இருந்தா தான வரும்? ஐயோ கடவுளே !!! இந்த andriod போன் இல்லாதது இவ்ளோ பெரிய குற்றமா? ஒரு வாட்டி, ஏதோ அவசரம் னு , ஒரு போன் நம்பர் கேட்டு தோழி-க்கு கால் பண்ணா, Watsapp-ல பிங் பண்றேன் னு  சொன்னா, நான் Watsapp  ல இல்லைனு சொன்னேன், Viber ? இல்லை, Hike ? இல்ல டி இல்ல. இதெல்லாம்  இல்லாம நீயெல்லாம் எதுக்கு மொபைல் வச்சுருக்க னு கேட்டாள். ஹேய், 5000 ருபீஸ்  யா, dual-sim, camera, touch-screen எல்லாம் இருக்கு. தூ .. போன்-அ  மொதல்ல மாத்து!

இப்படி போன பக்கம் எல்லாம் 'வடகறி' ஜெய் மாதிரி எனக்கு என் போன் பல்பு வாங்கி குடுத்துட்டே இருந்தது. வெகுண்டுஎழுந்து, ஜனவரி 2015, ல அப்பாடக்கர் போன் வாங்கணும் னு டார்கெட் குறிச்சேன் . இதுநடந்தது ஆகஸ்ட் 2014-ல, அடுத்த 2 மாசத்துல, ப்ளிப்கார்ட் -ல 'தி பிக் பில்லியன் டே' வந்துச்சு. சுத்தியிருக்கறவங்க கிளப்பி விட்ட பயர், எனக்குள்ள எறிஞ்சிட்டு இருந்த பயர் எல்லாம் சேர்த்து ஒரு வழியா போன் ஆர்டர் பண்ணியாச்சு. என் best buddy ஒருத்தன் EMI options பத்தி சொல்லிட்டு இருந்தப்ப, No EMI! Down Payment னு கெத் போட்டு காசெல்லாம் கட்டியாச்சு. இந்த செல்லக்குட்டி Moto 2G என் கைக்கு வந்தாச்சு. குறிச்ச டார்கெட்-கு 3 மாசம் முன்னாடி சாதிச்சது இத மட்டும் தான் :P 
(சாதிச்சுட்டோம்'ல). Best buddy-யும்  நானும் ஒரே  நாள்'ல ஒரே offer-ல ஒரே போன்-அ வாங்குனதுல எக்ஸ்ட்ரா சந்தோஷம்.

இதுல இன்னொரு surprise என்னன்னா, இந்த முறையும் வீட்ல அதே டயலாக், கொஞ்சம் வேற modulation-ல, 'பொழைக்கற புள்ள 13 ஆயிரத்துக்கு போன் வாங்குமா? - இது என் பாட்டி. இந்த முறை எல்லாரும் சப்போர்ட்-க்கு வந்தாங்க. 'அவ சம்பாதிக்கறா, அவ வாங்கறா' (என் சம்பளம், என் உரிமை!!!!).

மறுபடியும் அதே அலப்பறைகள். எப்பவும் போல, முதல் 15 நாள்'ல, புது வால் பேப்பர், ரிங் டோன், பேனல் னு சீன் போட்டாலும், கொஞ்ச நாள்'ல போர் அடிச்சுருச்சு. என் தம்பி கேட்கறான், "ஒரு புதுப் பாட்டு கூட இல்ல, நீயெல்லாம் எதுக்கு போன் வச்சுருக்க?".ஹே.. ஹேய்.. 1000 போன் வந்தாலும், நான் இப்படித் தான் இருப்பேன், தத்தி'யா  :P 

                     
                                  
                                                                           - களேபரங்கள் தொடரும் 

வியாழன், மே 02, 2013

எனதறுமை நாட்காட்டியே..

இனி, அதிகாலையில் சுதந்திரமாய் காலை நடை போக முடியாது
இரண்டடிக்கு ஒரு தரம், பரிவான விசாரிப்புகளும் தட்டிக்கழிக்க முடியாத பயண அழைப்புகளும்...
என் தனிமை பறிபோகிறது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..

இனி, ஒரு வேளை கூட சாப்பிடாமல் அசால்டாக தப்பித்துக்கொள்ள முடியாது
வயற்காட்டு கீரையும், பக்கத்து வீட்டு சுரைக்காயும் மிரட்டியேனும் சாப்பிட வைத்து விடுமே.. 
என் வறட்டு கவுரவம் உடைத்தெறியப்படுகிறது -  ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..

இனி, 24 மணி நேரம் இணைய இணைப்பு இல்லை
ஏன், சரியான கைபேசி கோபுரம் கூட கிடையாது 
எனக்கான என் நேரத்தை இழக்கிறேன் - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..

இனி, நடு இரவு வரை வெட்டியாக படம் பார்த்தும் 
அரட்டை அடித்தும் கழிக்க முடியாது
என் சந்தோஷ வட்டங்கள் இறுக்கப்படுகின்றன - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்.


இனி, சுற்றுப்புரம் மறந்து பாடல்களை அலர விட்டு பாடித்திரிய முடியாது
என் சுதந்திரம் பறிபோகிறது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..


இனி, தலைக்கு மேல் சுழழும் மின்விசிறி கிடையாது, பயமுறுத்தும்  கரும்பலகையும், அறிவிப்பு பலகையும் கிடையாது
என் கற்றல் வாழ்க்கை முடிந்துவிட்டது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..


இனி, என் தம்பியுடனான தொலைபேசி வாதங்கள், செல்ல சண்டைகள் கிடையாது, நேரடி வன்முறைகள் தான்
மாதமொருமுறை வீட்டிற்கு போகும் விதிமுறைகள் கிடையாது - ஆனாலும் இதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்..


என் தனிமையை கொண்டாடும் மாமர நிழல், 
என் நேரத்தை பங்கு போடத்துடிக்கும் தென்னந்தோப்பு, 
என் சந்தோஷ வட்டங்களுக்குள் வரும் எங்கள் மக்களின் வெகுளியான வெள்ளத்திப் பேச்சுகள், 
ஆட்டுக்குட்டிகளோடும் கன்றுக்குட்டிகளோடும் ஓடித்திரியும் என் சுதந்திரம், 
தாத்தாவின் பழைய/புதிய புத்தகங்கள் கற்றுக் கொடுக்கும் பாடம், 
தோல்வியுடனேயே முடிந்துபோகும் என் தம்பியுடனான சண்டைகள்,

நாட்காட்டிகளை கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்..
எனக்கான என் வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டியதற்காக..

புதன், நவம்பர் 21, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 3

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 2

நான் ஈரோட்டுப் பொண்ணு :-)

ஈரோடு-ன்னாலே RKV ரோடு, காளைமாட்டு சிலையையும் தாண்டி பளிச்சென்று நியாபகத்திற்கு வருவது, மஞ்சள். மஞ்சள் விலையில் வீழ்ச்சி, போராட்டம், அரசு கொள்முதல் கோரிக்கை.. ஸ்..ஸ்..ஸ்.. அப்பப்பா.. இது நம்ம தலைப்பே இல்லைங்க..

காலம் காலமாக, ஆண்டு தவறாமல், மஞ்சள் சாகுபடியை விடாமல் பார்த்துக்கொண்டும்/ரசித்துக்கொண்டும், ஈரோட்டுப்பெண்ணின் லயிப்புகளும், சந்தோசங்களின் பகிர்வு தான், இந்தப் பதிவு!

நல்ல கீழ்நோக்கு நாளாய் பார்த்து தான், மஞ்சள் விதைப்பாங்க. அதுக்கு முன்னாடியே ஒரு வாரமாக, குப்பை இறைக்க, பார் கட்ட என்று வேலை மும்முரமா நடக்கும். வீட்ல நம்மையும் ஒரு பெரிய மனுஷியா (?!) மதிச்சு முதல் மஞ்சளை விதைக்க சொல்வாங்க. ஆசையா, சாமியை வேண்டிட்டு விதைக்கும் போது கிடைக்கற கர்வம் இருக்கே.. சான்ஸே இல்ல போங்க..

பிள்ளையை வளர்க்கும் கருத்தில், உரம், தண்ணீர் விட்டு, நல்ல இளம் பச்சை நிறத்தில் தள தள வென்று மஞ்சள் செடி வளர்ந்து கிடக்கும் பாருங்க, அவ்வளவு ஆசையாய் இருக்கும்.

இந்த மஞ்சள் வயல்’ல தாங்க காய்கறிகளுக்கு பஞ்சமே இருக்காது. தக்காளியிலிருந்து பீட்ரூட் வரை எல்லாக் காய் களும் விளைந்து கிடக்கும்.அப்படியே, வயலிற்குள் புகுந்தோம்’னா, மொட்டு மொட்டாய் மிளகு தக்காளிப் பழங்கள், குட்டி குட்டியாக, ஃப்ரெஷ் ஆக தக்காளிப் பழங்கள் பறித்து சாப்பிட்டுக்கொண்டு, இடை இடையே ஊடுபயிராயிருக்கும் சோளக்கதிருக்கு ஜடை பின்னி, பின்னலில் கொத்துமல்லிப் பூக்களை வைத்து அழகு பார்த்த சுட்டித்தனம்.. எவ்வளவு வருடம் ஆனாலும் மறக்காதுங்க!

பசுமையா செழிப்பா வளர்ந்திருக்கும் மஞ்சள் செடிகளுக்கு நடுவில், எப்படியாவது திருட்டுத்தனமாக முளைத்து, க்யூட்டாக பூ பூத்திருக்கும் சூரியகாந்திக்கும் கோழிக்கொண்டை பூக்களுக்கும் போட்ட் செல்ல சண்டைகள், மஞ்சள் நிற செம்மை பூக்களையும், கத்திரி பூக்களையும் கொண்டு செய்த பூக்கொத்துகள், களை எடுக்கும்போது, ‘இந்த மஞ்சள் எல்லாம் உங்களுக்கு தான், உங்க பட்டிற்கும், நகைக்கும்’ என்று உசுப்பேற்றி விடப்பட்ட ஆசைகள் :-) , ருசியாய் சுட்டுத்தின்ற சோளக்கதிர்கள், லோலாக்காய்த் தொங்கும் மிளகாய்கள், அங்கங்கு விளைந்திருக்கும் கீரைகள், மண்ணிலிருந்து கொஞ்சம் எட்டிப் பார்க்கும் மஞ்சள் கிழங்கு... இப்படி சொல்லி சொல்லி மாள ஆயிரம் விஷயங்கள் இருக்குங்க, எங்க மஞ்சள் ‘ல.


விளைஞ்ச மஞ்சளையெல்லாம் வெட்டி எடுத்து வந்து, வேக வைத்து, காய விட்டு, சலித்து... அப்பப்பா..
18 ரூபாய் பாக்கெட்டில் இருக்கும் 100கி மஞ்சளுக்கு எத்தனை வேலைகள்?!
அதுவும், விடிய விடிய மஞ்சள் வேக வைக்கும் போது, கூடவே விடிய விடிய அலரும் ரேடியோ, அப்பப்ப டீ யை நினைவு படுத்த அவர்கள் கொடுக்கும் சமிங்ஞைகள், உரிமையான கேலி பேச்சுகள்..

மஞ்சள் சலிச்சு முடிச்சு, அடுக்கின மூட்டைகளை திரும்ப திரும்ப எண்ணுவது, மார்க்கர் பென் - ல் அடையாளங்கள் போடுவது.. இவை அவ்வளவும் மஞ்சள் எடைக்கு போட்டுவிட்டு வாங்கி வரும் ஸ்பெஷல் அல்வா காக மட்டும்.. :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

இனி, ஒவ்வொரு மஞ்சள் பொடி பாக்கெட்டிலும் இந்த உழைப்பையும், சந்தோஷத்தையும் உணர்வீர்கள் தானே?!!


புதன், அக்டோபர் 31, 2012

என் நாட்காட்டிக்கு ஒரு வேண்டுகோள்..

நைசாக  வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் ஆட்டுக்குட்டி..

அதை அண்டவிடாமல் துரத்தும் எங்கள் ரோமி..

அதற்காக ரோமியிடம் முறைத்துக்கொண்டிருக்கும் தாய் ஆடு..

உன் வாலை என்னிடம் ஆட்டு பார்ப்போம் என்று சவால் விடும் செந்நிற
                                                                                                                   இளமாட்டுக்கன்று..

தனது தாகத்தை ஊருக்கே உரைக்கும் எறுமை..

இது வெயில் காலம் என்று கூக்குரலிடும் ரோஜா செடிகள், மொட்டையாய்...

மறு ஓரம் செடி கொள்ளாத பூக்களுடன் ரோஜாச் செடிகளை ஏளனமாக
                                                                                                          பார்க்கும் சங் கு பூக்கள்..

போனால் போகிறதென்று பாதி மாம்பழத்தை மிச்சம் வைத்துவிட்டு
                                                                                         போயிருக்கும் கிளிக்கூட்டங்கள்..

கத்திரி வெயிலிலும் ஆர்பரிப்பாக குளித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் மதகு..

செங்குழை தள்ளியிருக்கும் கிழக்கு வேலி பார்த்த தென்னை மரம்..

பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க தவிக்கிறேன்..

எனதறுமை நாட்காட்டியே, என்று தான் எனக்கு வழி வகுப்பாய்..?!


புதன், செப்டம்பர் 05, 2012

இன்னமும் கத்துக்கனுமாம்..

கோபத்தைக் குறைக்க கத்துக்க, டிவி பார்க்கும் நேரத்தை குறைச்சுக்க, கண்டதெல்லாம் சாப்பிட்டு பழகாதே..
                                                                                                      - இது தாத்தா

சேலை கட்ட கத்துக்க, காலையில் நேரமே எழுந்து பழகிக்க, காசெல்லாம் கண்டபடி செலவு செய்யாதே..
                                                                                                     -இது பாட்டி

Sentiment-ஆ இல்லாம Practical-ஆ இருந்து பழகு, எதிர்த்து பேசறத விடு, ஒரு விஷயத்தை  நல்லா யோசிச்சு முடிவெடு..
                                                                                                  -இது அப்பா

நல்லா சமைக்க கத்துக்க, பொறுப்பா இருக்கனும், எப்ப பாரு மொபைல், லேப்டாப்’லயே இருக்காத..
                                                                                                  -இது அம்மா

Traffic-ல வேகமா வண்டி ஓட்ட கத்துக்க, NFS இன்னும் கொஞ்சம்  நல்லா விளையாட கத்துக்க..                                                   -இது தம்பி


ஸ்ஸ்ஸ்.. அப்பப்பபா.... 19 வருடம் கத்துக்கிட்டதை விட, இனிமேல் தான் நிறையயயயய கத்துக்கனும் போலிருக்கே....

குறிப்பு: இன்னும் 40 ஏ நாளில் என் கற்றல் வாழ்க்கை (19 வருட அத்யாயம்) முடியப்போகிறதே.. :)

புதன், ஆகஸ்ட் 15, 2012

என் செல்லத் தம்பிக்காக ஒரு பதிவு


சூரியப்பிரகாசம். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் என் செல்லத்தம்பி. வருகின்ற 18-ம் தேதியன்று 16-ம் பிறந்த நாள் அவனுக்கு.


1997, ஆகஸ்ட் மாதம், கிட்ட தட்ட 2 மாதங்கள் அம்மாவைப்பிரிந்து பாட்டியிடம் வளர்ந்த ஏக்கம், சூர்யா பிறந்து, 2 ம் நாள் மருத்துவமனையில் அம்மா மடியில் அவனைப்பார்த்த மாத்திரத்தில் அந்த ஏக்கம் பொறாமையாக உருமாறி அழுகையாய் வந்தது. என்னை விட தம்பி கலராய் இருக்கிறான் என்று கூடுதல் கடுப்பு வேறு. ஆனாலும் கூட, அவன் விக்கலுக்கு காரணமாய், அவன் சிரிப்புக்கு சொந்தகாரியாய், அவன் சேட்டைகளுக்கு ரசிகையாய், அழுகைக்கு தாலாட்டாய் மாறித்தான் போனேன். அவனுக்காக கற்றுக்கொண்ட தாலாட்டெல்லாம், அவன் நினைவுகளுடன் பசுமையாய் என்னுள் இன்னும் இருக்கிறது.

‘உங்கு குடிக்கறியா..
ஊறுகாயி திங்கறியா..
பாலு குடிக்கறியா..
பழைய சோறு திங்கறியா..”


 அப்பவும் அவன் அழுகை நிக்காமல் போக, பள்ளியில் பாடும் ‘prayer song' - ஐ எல்லாம் பாடி, சில சமயம் வென்றும், பல சமயம் தோற்றும் போயிறுக்கிறேன்.


அவன் பள்ளி செல்ல ஆரம்பிக்கையில், அவனுக்காக பென்சில் டப்பாவையும், வாட்டர் பாட்டிலையும் பார்த்து பார்த்து வாங்கிய நான், அவன் வளர்ந்த பின் பென்சில்களுக்கும் பேனாக்களுக்கும் சண்டை போட்டேன். அவனை மிரட்ட டைரியில் புகார்கள் எழுதியது, நான் மார்க் வாங்கிய அழகிற்கு அவன் படிப்பை குறை கூறியது என்று அவனது பள்ளிப்பருவத்தில் பெரிய மனுஷித்தனமாய் மாறிய நான், இன்று அவனது பெரிய மனுஷித்தனத்தில் குழந்தையாகவே மாறிப் போகிறேன்.
                                   
'அக்கா விடம் காசே இல்லை டா’ என்று பொய்யாக புலம்பினால் கூட, அவன் சேமிப்பைக் கொண்டு வந்து கொடுப்பதில் ஒரு தந்தையின் பரிவை உணர்ந்தேன்.

அல்சர் வலியில் துடித்த போது, ‘ஒழுங்காக் சாப்பிடு’ என்று திட்டியபோதும், அவன் சுட்டுத் தரும் தோசை, பனியாரங்களிலும், போட்டுத்தரும் பூஸ்ட்-டிலும், அக்காவிற்கு பிடிக்கும் என்று சேகரித்து வைத்திருக்கும் கொய்யாப்பழங்களிலும், சீத்தாப்பழங்களிலும் , அவன் வளர்த்துக்கொண்டிருக்கும் ரோஜா, செவ்வந்தி செடிகளிலும், எனக்கு வைத்து விட்ட மருதாணிகளிலும், தலைவலியின் போது பொட்டுவிட்ட தைலங்களிலும் ஒரு தாயின் அரவணைப்பை உணர்கிறேன்.

வீட்டிற்கு வந்திருக்கும் திருமண அழைப்பிதழ்களை குறிப்பிட்டு, ‘அக்காவிற்கு இதை விட சூப்பராக இருக்கவேண்டும்’ என்று சொல்லும் போதும், என் வேலையைப்பற்றி அம்மா பேசும் போதெல்லாம், ‘இவ்வளவு நாட்கள் விடுதியில், இப்போது வேலை வேலை என்றால், அக்காவை வீட்டில் வைத்திருக்கும் எண்ணமே இல்லையா?’ என்று வாதிடும் போதும் ஒரு அண்ணனின் அக்கறையை உணர்கிறேன்.

தூங்கும்போது தலை கோதி விடச்சொல்வதிலாகட்டும், குட்டி குட்டி தோசை சுட்டு குடுக்கச்சொல்வதிலாகட்டும், சாப்பாடு ஊட்டி விடுவதிலாகட்டும், சண்டை பொட்டுக்கொல்வதிலாகட்டும்.. இன்னும் என் சுட்டித் தம்பியாகவும் இருக்கிறான்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் இரவுகளில், வாசலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டே தொடங்கும் எங்களின் கனவு உலகம். அவன் படிப்பிலிருந்து, எனக்கு கிடைக்கப்போகும் வேலை, அப்பாவின் கோபம், அம்மாவின் ருசியான உணவு, ஆத்தாவிடம் பொட்ட சண்டை, அய்யா விடம் வாங்கிய திட்டு, அவன் சைக்கிளில் செய்த சாகசம், புதிதாக வந்திருக்கும் செல்போன், அவனைக் கவர்ந்த விளம்பரங்கள், புதிதாக வந்திருக்கும் திரைப்படங்கள், செய்தித்தாள்களில்ருந்து வெட்டி எடுத்த புது மாடல் கார்கள், எங்கள் சுற்றுலா ஆசைகள், வாங்க ஆசைப்படும் பொருட்கள் வரை பேச பேச ஆயிரம் கனவுகள், லட்சியங்கள் என்று எங்கள் நட்சத்திர உலகம் விரிந்து கொண்டே போகும்.

                                             

அவனது கனவுகள் கை கூடவும், மகிழ்ச்சி நிறைந்திருக்கவும், வானம் வசப்படவும், பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்..
அன்பு அக்கா,
ரஞ்சனி.


My last year's birthday wishes to Surya,