திங்கள், அக்டோபர் 12, 2015

அம்மாவின் உலகம்

தன் பிறந்த வீட்டிற்கு செல்வதற்கு நொண்டி சாக்குகளையும் பொய்களையும் தேடுவதிலிருந்து தொடங்குகிறது அம்மாக்கள் என்னும் குழந்தையின் உலகம். அம்மாக்களின் உலகத்தில் என்ன இருக்கபோகிறது பெரிதாக? சமையலறை  வாசமும்  பிள்ளைகளின் நேசமும் தவிர? சொல்லி சொல்லி ரசிக்க ஆயிரம் உண்டு. அதுவும் பெண்  பிள்ளைகளை பெற்ற அம்மாக்களின் ஆசைகளுக்கு லிங்கேஸ்வரன் என்ன, கே.எஸ். ரவிக்குமாரே  வந்தாலும் அணை கட்ட முடியாது.

விஜய் டிவி சரவணன் - மீனாட்சி சீரியல் மீனாட்சி- ஒரு சாயல் பாத்தா என் பொண்ணு மாதிரியே இருக்குல்ல'னு நாலு பேர் இருக்கும் போது opinion கேப்பாங்க பாருங்க, நமக்கே இது செம காமெடியா இருக்கும் , அப்ப அந்த நாலு பேருக்கு எப்படி இருக்கும்?   இப்படி நம்ம பெருமைய சொல்றேன்னு வண்டி வண்டியா பன்னு வாங்கி கொடுப்பாங்க. விளம்பர இடைவேளைகளில் வரும் இலட்ச ருபாய் கார்களும் பல ஆயிரம் மதிப்புள்ள புடவைகளும், தன் மகள்களின் திருமண சீர்களுக்காகவே என்ற நினைப்பு அவர்களுக்கு!

குறிப்பாக அப்பாவும் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் சமயங்களில் அம்மாக்கள் எடுத்து விடும் கதைகள் ஏராளம். மகி (மகி என்கிற மகேஸ்வரி - என் உயிர் தோழி) அவ பையன ஸ்கூல் - சேர்த்துத்துட்டாளா? அவளுக்கும் உனக்கும் ஒரே வயசு தான? போன வாரம் ஒரு கல்யாண பத்திரிக்கை வந்துச்சே, அந்த பொண்ணுக்கா 5 லட்சத்துல கார் வாங்கி தராங்க? இந்த கேள்விகள் எனக்கல்ல என்பது மிக நன்றாகத் தெரியும்! இருந்தாலும் பதில் சொல்லிக்கொண்டு அப்பாவை கள்ளப்பார்வை பார்க்கும் தருணங்கள் எல்லாம் பொக்கிஷம்!!

மகளுக்கு என்று நேர்ந்து விடப்பட்ட பிரிக்கப்படாத பால் குக்கர், இரண்டு பேருக்கு சரியாக இருக்கும் என்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட ரைஸ் குக்கர், இந்த ஹாட் பேக் நல்லா இருக்குல்ல? சரி அக்கா வச்சுக்கட்டும்... இப்படி மகளுக்கு பத்திரப்படுத்தப்பட்டவை ஏராளம்! இதில் 'அம்மா' குடுத்த கிரைண்டர், மிக்சி  யும் அடக்கம் (அம்மாக்கள் வாழ்க  :P ) என்றிலிருந்து இப்படி மகள்களுக்காகவே வாழ்த்து வருகிறாள் என்பது புரியாத புதிர்..

எனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வேணும், என் பொண்ணு ஆபீஸ் போறத தினமும் பாத்துப்பேன் என்று ஆசைப்படும் போதும்,
எனக்கு என் பையன் தான் வேணும், நீயா கடைசி வரை என் கூட இருப்ப? என்று வீம்பு பேசும்போதும்,
வீட்டுக்கு வா தினமும் உனக்கு சுரைக்காயா செஞ்சு போடறேன்னு சண்ட போடும் போதும்,
நடு ராத்திரியில் எனக்கு பிடிக்குமென்று குலாப்ஜாமுன் செய்யும் கிறுக்குத்தனத்திலும் (அம்மா!! சாரி :P ),
அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து, பல மைல் தூரத்திலிருந்து என்னை சரியான நேரத்திற்கு எழுப்பும் பொறுப்பிலும்,
தனக்கு யாரென்று தெரியவில்லை என்றாலும் நான் திட்டும் போது கூட சேர்ந்து திட்டும் உரிமையிலும்,
எவ்வளவு கஷ்டத்திலும் எனக்கு தைரியம் சொல்லும் தன்னம்பிக்கையிலும்,
எதுக்கு இவ்ளோ கஷ்டப்படற என்று திட்டும் அக்கறையிலும்,
எனக்காக சிந்தியிருக்கும் உதிரத்திலும், கண்ணீரிலும், வியர்வையிலும் ஆயிரம் முத்தங்கள் உங்களுக்காக தருகிறேன் அம்மா!!


என் அம்மா - அவள் அம்மாவுடன்!!
பெருமைப்படுகிறேன் என்றும்  உன் மகளாக :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக