புதன், நவம்பர் 21, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 3

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 2

நான் ஈரோட்டுப் பொண்ணு :-)

ஈரோடு-ன்னாலே RKV ரோடு, காளைமாட்டு சிலையையும் தாண்டி பளிச்சென்று நியாபகத்திற்கு வருவது, மஞ்சள். மஞ்சள் விலையில் வீழ்ச்சி, போராட்டம், அரசு கொள்முதல் கோரிக்கை.. ஸ்..ஸ்..ஸ்.. அப்பப்பா.. இது நம்ம தலைப்பே இல்லைங்க..

காலம் காலமாக, ஆண்டு தவறாமல், மஞ்சள் சாகுபடியை விடாமல் பார்த்துக்கொண்டும்/ரசித்துக்கொண்டும், ஈரோட்டுப்பெண்ணின் லயிப்புகளும், சந்தோசங்களின் பகிர்வு தான், இந்தப் பதிவு!

நல்ல கீழ்நோக்கு நாளாய் பார்த்து தான், மஞ்சள் விதைப்பாங்க. அதுக்கு முன்னாடியே ஒரு வாரமாக, குப்பை இறைக்க, பார் கட்ட என்று வேலை மும்முரமா நடக்கும். வீட்ல நம்மையும் ஒரு பெரிய மனுஷியா (?!) மதிச்சு முதல் மஞ்சளை விதைக்க சொல்வாங்க. ஆசையா, சாமியை வேண்டிட்டு விதைக்கும் போது கிடைக்கற கர்வம் இருக்கே.. சான்ஸே இல்ல போங்க..

பிள்ளையை வளர்க்கும் கருத்தில், உரம், தண்ணீர் விட்டு, நல்ல இளம் பச்சை நிறத்தில் தள தள வென்று மஞ்சள் செடி வளர்ந்து கிடக்கும் பாருங்க, அவ்வளவு ஆசையாய் இருக்கும்.

இந்த மஞ்சள் வயல்’ல தாங்க காய்கறிகளுக்கு பஞ்சமே இருக்காது. தக்காளியிலிருந்து பீட்ரூட் வரை எல்லாக் காய் களும் விளைந்து கிடக்கும்.



அப்படியே, வயலிற்குள் புகுந்தோம்’னா, மொட்டு மொட்டாய் மிளகு தக்காளிப் பழங்கள், குட்டி குட்டியாக, ஃப்ரெஷ் ஆக தக்காளிப் பழங்கள் பறித்து சாப்பிட்டுக்கொண்டு, இடை இடையே ஊடுபயிராயிருக்கும் சோளக்கதிருக்கு ஜடை பின்னி, பின்னலில் கொத்துமல்லிப் பூக்களை வைத்து அழகு பார்த்த சுட்டித்தனம்.. எவ்வளவு வருடம் ஆனாலும் மறக்காதுங்க!

பசுமையா செழிப்பா வளர்ந்திருக்கும் மஞ்சள் செடிகளுக்கு நடுவில், எப்படியாவது திருட்டுத்தனமாக முளைத்து, க்யூட்டாக பூ பூத்திருக்கும் சூரியகாந்திக்கும் கோழிக்கொண்டை பூக்களுக்கும் போட்ட் செல்ல சண்டைகள், மஞ்சள் நிற செம்மை பூக்களையும், கத்திரி பூக்களையும் கொண்டு செய்த பூக்கொத்துகள், களை எடுக்கும்போது, ‘இந்த மஞ்சள் எல்லாம் உங்களுக்கு தான், உங்க பட்டிற்கும், நகைக்கும்’ என்று உசுப்பேற்றி விடப்பட்ட ஆசைகள் :-) , ருசியாய் சுட்டுத்தின்ற சோளக்கதிர்கள், லோலாக்காய்த் தொங்கும் மிளகாய்கள், அங்கங்கு விளைந்திருக்கும் கீரைகள், மண்ணிலிருந்து கொஞ்சம் எட்டிப் பார்க்கும் மஞ்சள் கிழங்கு... இப்படி சொல்லி சொல்லி மாள ஆயிரம் விஷயங்கள் இருக்குங்க, எங்க மஞ்சள் ‘ல.


விளைஞ்ச மஞ்சளையெல்லாம் வெட்டி எடுத்து வந்து, வேக வைத்து, காய விட்டு, சலித்து... அப்பப்பா..
18 ரூபாய் பாக்கெட்டில் இருக்கும் 100கி மஞ்சளுக்கு எத்தனை வேலைகள்?!
அதுவும், விடிய விடிய மஞ்சள் வேக வைக்கும் போது, கூடவே விடிய விடிய அலரும் ரேடியோ, அப்பப்ப டீ யை நினைவு படுத்த அவர்கள் கொடுக்கும் சமிங்ஞைகள், உரிமையான கேலி பேச்சுகள்..

மஞ்சள் சலிச்சு முடிச்சு, அடுக்கின மூட்டைகளை திரும்ப திரும்ப எண்ணுவது, மார்க்கர் பென் - ல் அடையாளங்கள் போடுவது.. இவை அவ்வளவும் மஞ்சள் எடைக்கு போட்டுவிட்டு வாங்கி வரும் ஸ்பெஷல் அல்வா காக மட்டும்.. :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

இனி, ஒவ்வொரு மஞ்சள் பொடி பாக்கெட்டிலும் இந்த உழைப்பையும், சந்தோஷத்தையும் உணர்வீர்கள் தானே?!!


புதன், அக்டோபர் 31, 2012

என் நாட்காட்டிக்கு ஒரு வேண்டுகோள்..

நைசாக  வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் ஆட்டுக்குட்டி..

அதை அண்டவிடாமல் துரத்தும் எங்கள் ரோமி..

அதற்காக ரோமியிடம் முறைத்துக்கொண்டிருக்கும் தாய் ஆடு..

உன் வாலை என்னிடம் ஆட்டு பார்ப்போம் என்று சவால் விடும் செந்நிற
                                                                                                                   இளமாட்டுக்கன்று..

தனது தாகத்தை ஊருக்கே உரைக்கும் எறுமை..

இது வெயில் காலம் என்று கூக்குரலிடும் ரோஜா செடிகள், மொட்டையாய்...

மறு ஓரம் செடி கொள்ளாத பூக்களுடன் ரோஜாச் செடிகளை ஏளனமாக
                                                                                                          பார்க்கும் சங் கு பூக்கள்..

போனால் போகிறதென்று பாதி மாம்பழத்தை மிச்சம் வைத்துவிட்டு
                                                                                         போயிருக்கும் கிளிக்கூட்டங்கள்..

கத்திரி வெயிலிலும் ஆர்பரிப்பாக குளித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் மதகு..

செங்குழை தள்ளியிருக்கும் கிழக்கு வேலி பார்த்த தென்னை மரம்..

பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க தவிக்கிறேன்..

எனதறுமை நாட்காட்டியே, என்று தான் எனக்கு வழி வகுப்பாய்..?!


புதன், செப்டம்பர் 05, 2012

இன்னமும் கத்துக்கனுமாம்..

கோபத்தைக் குறைக்க கத்துக்க, டிவி பார்க்கும் நேரத்தை குறைச்சுக்க, கண்டதெல்லாம் சாப்பிட்டு பழகாதே..
                                                                                                      - இது தாத்தா

சேலை கட்ட கத்துக்க, காலையில் நேரமே எழுந்து பழகிக்க, காசெல்லாம் கண்டபடி செலவு செய்யாதே..
                                                                                                     -இது பாட்டி

Sentiment-ஆ இல்லாம Practical-ஆ இருந்து பழகு, எதிர்த்து பேசறத விடு, ஒரு விஷயத்தை  நல்லா யோசிச்சு முடிவெடு..
                                                                                                  -இது அப்பா

நல்லா சமைக்க கத்துக்க, பொறுப்பா இருக்கனும், எப்ப பாரு மொபைல், லேப்டாப்’லயே இருக்காத..
                                                                                                  -இது அம்மா

Traffic-ல வேகமா வண்டி ஓட்ட கத்துக்க, NFS இன்னும் கொஞ்சம்  நல்லா விளையாட கத்துக்க..                                                   -இது தம்பி


ஸ்ஸ்ஸ்.. அப்பப்பபா.... 19 வருடம் கத்துக்கிட்டதை விட, இனிமேல் தான் நிறையயயயய கத்துக்கனும் போலிருக்கே....

குறிப்பு: இன்னும் 40 ஏ நாளில் என் கற்றல் வாழ்க்கை (19 வருட அத்யாயம்) முடியப்போகிறதே.. :)

புதன், ஆகஸ்ட் 15, 2012

என் செல்லத் தம்பிக்காக ஒரு பதிவு


சூரியப்பிரகாசம். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் என் செல்லத்தம்பி. வருகின்ற 18-ம் தேதியன்று 16-ம் பிறந்த நாள் அவனுக்கு.


1997, ஆகஸ்ட் மாதம், கிட்ட தட்ட 2 மாதங்கள் அம்மாவைப்பிரிந்து பாட்டியிடம் வளர்ந்த ஏக்கம், சூர்யா பிறந்து, 2 ம் நாள் மருத்துவமனையில் அம்மா மடியில் அவனைப்பார்த்த மாத்திரத்தில் அந்த ஏக்கம் பொறாமையாக உருமாறி அழுகையாய் வந்தது. என்னை விட தம்பி கலராய் இருக்கிறான் என்று கூடுதல் கடுப்பு வேறு. ஆனாலும் கூட, அவன் விக்கலுக்கு காரணமாய், அவன் சிரிப்புக்கு சொந்தகாரியாய், அவன் சேட்டைகளுக்கு ரசிகையாய், அழுகைக்கு தாலாட்டாய் மாறித்தான் போனேன். அவனுக்காக கற்றுக்கொண்ட தாலாட்டெல்லாம், அவன் நினைவுகளுடன் பசுமையாய் என்னுள் இன்னும் இருக்கிறது.

‘உங்கு குடிக்கறியா..
ஊறுகாயி திங்கறியா..
பாலு குடிக்கறியா..
பழைய சோறு திங்கறியா..”


 அப்பவும் அவன் அழுகை நிக்காமல் போக, பள்ளியில் பாடும் ‘prayer song' - ஐ எல்லாம் பாடி, சில சமயம் வென்றும், பல சமயம் தோற்றும் போயிறுக்கிறேன்.


அவன் பள்ளி செல்ல ஆரம்பிக்கையில், அவனுக்காக பென்சில் டப்பாவையும், வாட்டர் பாட்டிலையும் பார்த்து பார்த்து வாங்கிய நான், அவன் வளர்ந்த பின் பென்சில்களுக்கும் பேனாக்களுக்கும் சண்டை போட்டேன். அவனை மிரட்ட டைரியில் புகார்கள் எழுதியது, நான் மார்க் வாங்கிய அழகிற்கு அவன் படிப்பை குறை கூறியது என்று அவனது பள்ளிப்பருவத்தில் பெரிய மனுஷித்தனமாய் மாறிய நான், இன்று அவனது பெரிய மனுஷித்தனத்தில் குழந்தையாகவே மாறிப் போகிறேன்.
                                   
'அக்கா விடம் காசே இல்லை டா’ என்று பொய்யாக புலம்பினால் கூட, அவன் சேமிப்பைக் கொண்டு வந்து கொடுப்பதில் ஒரு தந்தையின் பரிவை உணர்ந்தேன்.

அல்சர் வலியில் துடித்த போது, ‘ஒழுங்காக் சாப்பிடு’ என்று திட்டியபோதும், அவன் சுட்டுத் தரும் தோசை, பனியாரங்களிலும், போட்டுத்தரும் பூஸ்ட்-டிலும், அக்காவிற்கு பிடிக்கும் என்று சேகரித்து வைத்திருக்கும் கொய்யாப்பழங்களிலும், சீத்தாப்பழங்களிலும் , அவன் வளர்த்துக்கொண்டிருக்கும் ரோஜா, செவ்வந்தி செடிகளிலும், எனக்கு வைத்து விட்ட மருதாணிகளிலும், தலைவலியின் போது பொட்டுவிட்ட தைலங்களிலும் ஒரு தாயின் அரவணைப்பை உணர்கிறேன்.

வீட்டிற்கு வந்திருக்கும் திருமண அழைப்பிதழ்களை குறிப்பிட்டு, ‘அக்காவிற்கு இதை விட சூப்பராக இருக்கவேண்டும்’ என்று சொல்லும் போதும், என் வேலையைப்பற்றி அம்மா பேசும் போதெல்லாம், ‘இவ்வளவு நாட்கள் விடுதியில், இப்போது வேலை வேலை என்றால், அக்காவை வீட்டில் வைத்திருக்கும் எண்ணமே இல்லையா?’ என்று வாதிடும் போதும் ஒரு அண்ணனின் அக்கறையை உணர்கிறேன்.

தூங்கும்போது தலை கோதி விடச்சொல்வதிலாகட்டும், குட்டி குட்டி தோசை சுட்டு குடுக்கச்சொல்வதிலாகட்டும், சாப்பாடு ஊட்டி விடுவதிலாகட்டும், சண்டை பொட்டுக்கொல்வதிலாகட்டும்.. இன்னும் என் சுட்டித் தம்பியாகவும் இருக்கிறான்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் இரவுகளில், வாசலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டே தொடங்கும் எங்களின் கனவு உலகம். அவன் படிப்பிலிருந்து, எனக்கு கிடைக்கப்போகும் வேலை, அப்பாவின் கோபம், அம்மாவின் ருசியான உணவு, ஆத்தாவிடம் பொட்ட சண்டை, அய்யா விடம் வாங்கிய திட்டு, அவன் சைக்கிளில் செய்த சாகசம், புதிதாக வந்திருக்கும் செல்போன், அவனைக் கவர்ந்த விளம்பரங்கள், புதிதாக வந்திருக்கும் திரைப்படங்கள், செய்தித்தாள்களில்ருந்து வெட்டி எடுத்த புது மாடல் கார்கள், எங்கள் சுற்றுலா ஆசைகள், வாங்க ஆசைப்படும் பொருட்கள் வரை பேச பேச ஆயிரம் கனவுகள், லட்சியங்கள் என்று எங்கள் நட்சத்திர உலகம் விரிந்து கொண்டே போகும்.

                                             

அவனது கனவுகள் கை கூடவும், மகிழ்ச்சி நிறைந்திருக்கவும், வானம் வசப்படவும், பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்..
அன்பு அக்கா,
ரஞ்சனி.


My last year's birthday wishes to Surya,


வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

ஈரமான நினைவுகளுடன் நான்..

ஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியில் வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவை மேலும் விரட்டி, அம்மாயி வீட்டிற்கு பொழுது சாயத்தொடங்கும் வேளையில் நுழைகையில், உள்-வாசலில், விறகு அடுப்பில், இரும்பு சட்டியில், பருப்பு வடையும், கச்சாயமும் மணந்து கொண்டிருக்கும். அதற்குப்பின், பெரியம்மா, சித்தி, தங்கச்சி, தம்பிகள், அண்ணன்கள் வந்து சேர உள்-வாசல் களைகட்டியிருக்கும். சூட்டொடு சூட்டாக வடையும், கச்சாயமும் சாப்பிட்டு முடித்தவுடன், டிவி. டிவிக்கும், வீடியோ கேமிற்கும் ரகளையே நடக்க, இறுதியில், பொய்யான வாக்குறுதிக்காகவும், அதிகஅப்படியான புகழ்ச்சிக்காகவும், டிவியே ஜெயித்திருக்கும். (அரசியல்வாதிகள் ரெஞ்சிற்கு இறங்கிவிட்டோமோ?!)

டிவி அலரும் சத்தம் கேட்டவுடன், திட்டு கிடைக்கும். ‘இங்க வந்து பேசிட்டு இருக்கலாம்’ல, அந்த டிவி ல அப்படி என்ன தான் இருக்கு?’ என்று. என்ன இருக்குனு சத்யமா சொல்லத்தெரியலங்க. டிவி அது பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்க, எனக்கும் ஒரு வருடமே இளையவளான என் தங்கைக்கும் பேச ஆயிரம் கதைகள் இருக்கும். அந்த  நேரத்தில் சாப்பாடு கூட மறந்துபோயிருக்கும். அம்மாக்கள் கூட்டம் திண்ணையில் இடம் பிடித்து பேசிக்கொண்டிருக்க, குட்டீஸ்கள் ஒரு மூலையில் விளையாடிக்கொண்டிருக்க, அம்மாயி மட்டும் கூடிய வரை அனைவரையும் சாப்பிட அழைக்க முயன்று தோற்றுக்கொண்டிருப்பார்.

                                   
அடுத்த நாள் காலை 8 மணி விழிப்பு, எழுந்ததும் குளிக்கச்சொல்வதை காதிலே வாங்காமல் நாள் முழுக்கத்திரிவது, கோவிலுக்கு போகச்சொல்லியதை கேட்டதே கிடையாது. காலையில் திண்ணையில் பந்தி போட்டுக்கொண்டு சாப்பிட்டது, பிடிக்கவே பிடிக்காத இட்லியை கணக்கில்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு சாப்பிட்டது, திட்டு வாங்கிக்கொண்டு டிவி பார்த்தது, எங்கள் அக்கா-தங்கை பாசம் தான் பெரியது என்று அம்மாக்களிடம் வாதிட்டது, அம்மா, சித்தி, பெரியம்மா, அம்மாயி என்று அனைவரின் கைப்பக்குவத்தில் செய்த மதிய விருந்து, கோவிலுக்கு போய்விட்டு வந்து அப்பச்சி பிரசாதம் குடுக்கையில் ”என்னடா, இத்தனை பேர் இருக்கிங்க, கோவிலுக்கு வந்திருக்களாம்’ல?”என்று திட்டாமல் திட்டுவது, அன்று, புதிதாய் ரிலீஸ் ஆகியிருந்தது விஜய் படமாகவே(!) இருந்தாலும், அன்று இரவுக் காட்சிக்கு 3, 4 வண்டிகளில் போய்விட்டு வந்த கொடுமுடி KPS தியேட்டர், பின், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அவரவர் வீட்டிற்கும், பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லக்கிளம்பியது... அடுத்த ஆடி - 18 வரும் வரை திகட்டாத நினைவுகள்!!

ஆனால், இந்த வருடம்? பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரியின் விடுதியில்!
பக்கத்திலிருந்து சொல்வதற்கு அம்மாயியும் இல்லை, திட்டுவதற்கு அப்பச்சியும் இல்லை. கைபேசியில் பேசும் போது, ’அடுத்து தீபாவளிக்கு வந்து விடலாம்’, என்று அவர்கள் சொன்ன சமாதானங்கள் எல்லாம் என் புத்திக்கு உரைக்கவே இல்லை. அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, கோவிலுக்கு சென்றுவந்து, அம்மா விடம் கைபேசியில் பேசிய போது, எனக்கே ஆச்சர்யம்! நானா இப்படி?! :)


அன்றைக்கு எனக்கு பிடித்த நூடில்ஸ் தான் காலை உணவு என்றாலும், பிடிக்காத இட்லி யையே எதிர்பார்த்தது என் மனம். எப்பொதும் போல வகுப்பில் அரட்டையும், கச்சேரியும் அன்று அதிகமே என்றாலும், மனம் பருத்திக்கொட்டாம்பாளையத்திலேயே இருந்தது. குறுந்தகவல்கள் அனுப்பியும் பதில் அனுப்பாமல் இருந்த தங்கையின் மீது பொறாமை பற்றிக்கொண்டு வந்தது. முதல் நாள் இரவு கைபேசியில் பேசும் போது வந்த இரைச்சலும், நானே கற்பனை செய்து கொண்ட வடையின் மணம் வேறு நினைவில் வந்து கடுப்பேற்றியது, சுமார் 2,500 மைல் தொலைவில் இருந்து வந்திருந்த தம்பியையும், 105 - ஏ மைல் தொலைவில் இருந்தும் வர முடியாமல் போன என்னையும் எண்ணி ஆற்றாமையில் உறைந்தேன்.

நிழலின் அருமை வெயிலின்போது தான் தெரியும்’ என்பதை முழுதாய் உணர்கிறேன், இன்று!



வெள்ளி, ஜூலை 20, 2012

எனது கல்லூரியின் கடைசி பக்கங்கள்


19 வருட கல்வி வாழ்க்கை முடிவிற்கு வரப்போகும் தருணம் வெகு அருகில். 2 மாதங்கள் சிட்டாய் பறந்து விடும். அதற்குப்பின் வரும் 4 மாதங்கள் ஆய்வறிக்கை சமர்ப்பணங்களிலுமே ஓடிவிடும். கல்லூரியும் பள்ளியும் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களை இனி யார் கற்றுக்கொடுக்கப்போகிறார்கள்?

இது தான் தைரியம் என்று கற்றுக்கொடுத்த எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தைரியத்துடன் வாழ்க்கையை இப்படித்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வகுத்துக்கொடுத்த வேளாளர் மகளிர் கல்லூரி, எனது பிரகாசமான வாழ்கைக்கு வழி வகுத்துக்கொடுக்கும் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி.. விரலைப்பிடித்தும் தலையில் குட்டியும் என் வாழ்க்கைப்பயணத்தில் என்னுடன் வந்த ஆசான்கள், என்னை வழிநடத்திச்சென்ற நல்ல மேய்ப்பாளர்கள்.

எனது கல்லூரி வாழ்க்கையின் கடைசி பக்கத்தில் இருக்கிறேன் நான். ஒரு சிறிய ஆனால் நிறைய கற்றுக்கொடுத்த ஒரு மகளிர் கல்லூரியிலிருந்து வந்து, இரு பாலர் சேர்ந்து படிக்கும் ஒரு பிரபலமான பொரியியல் கல்லூரியில் சேர்ந்த போது மிரண்டு தான் போனேன். என் பழைய கல்லூரியில் காணாத, கேட்டேயிராத புதிய புதிய விதிமுறைகள். மகளிர் கல்லூரியில் சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனக்கு, சக மாணவர்கள் எல்லாரும் லிங்குசாமி பட வில்லன்கள் போலத்தெரிந்தனர். நாளடைவில், வெகுவிரைவில் பழகித்தான் போனேன். வகுப்பில் பரிச்சயம் ஆகாதவர்கள் கூட Facebook-கிலும், Google+ - சிலும் பரிச்சயமாயினர்.

எங்க college

எங்க department
                                   
எங்க hostel

உருகி உருகி கதை கதை யாய் பேசி பழகிய நட்பு, பார்த்து பார்த்து அலங்கரித்த விடுதி அறை, வழி நெடுக கொட்டிக்கிடக்கும் குல்மோஹர் பூக்கள், பொறாமைப்பட வைக்கும் கல்லூரி சேர்மேனது கார் (Skoda - Superb), ஒன் றுமே புரியாமல் பக்கம் பக்கமாய் எழுதப்பட்டிருக்கும் 7 subject notebook, எப்போது வரும் என்று ரஜினி படம் போல எதிர்பார்ப்பை அதிகரிக்கும் GP (a) General Permission, பிடிக்கவே பிடிக்காத ஹொஸ்டல் இட்லி, மிகவும் பிடித்த நூடில்ஸ், அவ்வப்போது அறையில் திருட்டுதனமாய் செய்த சமையல், காலை நடையின் போது துரத்தி விளையாடும் நாய்க்குட்டி (மணிமேகலை ?! ), மூச்சிரைக்க விளையாடும் shuttle court, என்னை கோல் போட வைத்து அழகு பார்த்த basket ball court, தீபாவளி போல 3 நாள் வந்து கலக்கி விட்டு போகும் ‘Futura', வாமிட் வருகிறது என்று கட் அடித்த நாட்கள், கல்யாண வீட்டின் ஒரு மூலையில் நின்று கொண்டு ‘பாட்டி இறந்து விட்டார், லீவ் வேண்டும்’ என்று ராவாக அடித்து விட்ட பொய்கள், சுத்தமாகவே புரியாமல் 5 மார்க்குகாக எடுத்து விட்ட செமினார்கள், தண்ணீர் வரவில்லை, மெஸ்-ல் சாப்பாடு தீர்ந்துவிட்டது என்று சர்வ சாதாரணமாக பொய் சொல்லி விட்டு கட் அடித்தது, LAN - ல் ரமணி சந்திரன், கல்கி, Chetan Bhagat  நாவல்களை பதிவிரக்கம் செய்து வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாய் படிப்பது, ஒவ்வொரு பரீச்சை முடிந்தும் எங்கள் விரிவுரையாலர்கள் பேஸ்புக்-கில் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து கமெண்ட் போட்டு விட்டு, பின் அவர்களிடம் அசடுவழிவது.... அட.. !! வாழ்க்கை இவ்வளவு அழகானதா?

ஒரே கலரில் ஆடை அணிந்து வந்தால் ‘Same sweet', புத்தாடை அணிந்து வந்தால் ‘New pinch', ஆடை நிறத்திற்கு மெட்ச் ஆகவே தேர்ந்தெடுத்துக்குடிக்கும் தெனீர்க்கோப்பை, வகுப்பு நடக்கும் வேளையில் ஏதாவது ஒரு பாடலில் நடு வரியை சொல்லி, முதல் வரியைக் கண்டுபிடித்து விளையாடுவது, கலர் கலராய் அழி ரப்பர் கள், பொம்மை பேனாக்கள், பல கடிகள் வாங்கிய  நெல்லிக்காய், chocobar, லாலிபாப்,எலந்த வடை, கொய்யா, மாங் காய், ஒவ்வொரு கவுண்டரிலும் ஒவ்வொரு அப்பளம் வீதம் 3 * 1 =3 (+1 complimented by friends ), ஆக மொத்தம் அசால்டாக 4 அப்பளங்கள் சாப்பிட்டது என்று குழந்தைத்தனமாக வாழ்ந்த் வாழ்க்கை முடியப்போகிறதா?


முதல் வருடத்தில் இருந்த ஒரு பக்கா professional engineering வகுப்புகளை, மூன்றாம் வருடத்தில் கலைக்கல்லூரிகளினும் மிஞ்சிய கொண்டாட்டமாக மாற்றிய பெருமை எல்லாம் எங்களையே சேரும்.வகுப்பிற்கே உல்லன் நூலும், ஊசியும் கொண்டு வந்து பின்னுவதாகட்டும், வகுப்புகளில்  Sidney Sheldon , Chetan Bhagat நாவல்கள் படிப்பதாகட்டும், லேப்-ல் கல்கி, ரமணி சந்திரன் நாவல்கள் படிப்பதாகட்டும், ரங்கோலி, மெஹந்தி போடுவதாகட்டும்.. கல்லூரி வாழ்க்கையை இவ்வளவு அழகாய் எவரால் அலங்கரித்திருக்க முடியும்?


படிப்பிலும் சோடை பொய் விடவில்லை நாங்கள். விளையாட்டாய் படித்து அசால்ட்டாய் மதிப்பெண்கள் எடுப்போம். Chetan Bhagat சொல்லும் ‘Five point someone' கள் அல்ல நாங்கள்,  ‘Eight point all ones" !





பொய் சொல்வதில் கற்றுக்கொண்ட creativity, வகுப்பும் கவனித்துக்கொண்டு SMS-ம் அனுப்பிக்கொண்டு உல்லன் நூலில் பிண்ணிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டு சமாளித்த போது multi-tasking, பீட்டர் விடுவதில் கற்றுக்கொண்ட corporate-english, periodicals கற்றுக்கொடுத்த just-like-that பாலிசி, செமெஸ்டர்-ன் போது பழகிய hard-work, பத்தே நிமிடத்தில் எழுதிய assignment - ம், ஒரே நாளில் முடித்த record-களும் சொல்லுமே Intel i7 - னொடு போட்டி போட்ட எங்கள் வேகத்தை...... இனி இந்த வாழ்க்கைப் பாடங்களை யார் கொடுக்கப் போகிறார்கள்?!!

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரிக்கும், என் வாழ்க்கைப் பக்கங்களை அழகாக்கிய என் நண்பர்களுக்கும் சிறப்பு சமர்ப்பணங்கள். :)


புதன், ஜூலை 04, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 2


திண்பண்டங்களும் தீனிப்பண்டாரங்களும்


Sunfeast - Dark Fantasy, Cadbury - Oreo, Britannia - Good day ஆகியவற்றின் ராயல் சுவையில் லயித்திருக்கிறோம் நாம். தினம் தினம் புதிது புதிதான  flavour-ரோடும், விளம்பர உத்தியோடும், தித்திக்கும் சுவையோடும், பளபளக்கும் உரையோடும் வரும் தின்பண்டங்களுக்கு தான் இன்றைக்கெல்லாம் மவுசு. 3 ரூபாய் Parle-G,  5 ரூபாய் Horlicks biscuit,  10 ரூபாய் krack-jack 
சுவையை மறக்க முடியுமா என்ன?!

சக்திமான் ஸ்டிக்கர் காகவே வாங்கித் தின்று தீர்த்த Parle-G, World Cup என்றால்  என்னவென்றே தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு ரன்கள் சேகரித்த Britannia பாக்கெட்டுகள், அப்போது வந்த திருடன்-போலீஸ் விளம்பரத்திற்காகவே வாங்கிய krack-jack, பெப்பெர்மின்ட், லாலி பாப், சவ்வு மிட்டாய், இஞ்சி மரப்பான்.. தித்திக்கும் திகட்டாத நினைவுகள் .. :)
பிஸ்கட், மிட்டாய்கலோடு மட்டுமே நின்று விடுமா எங்கள் கிளிஞ்சல், மயிலிறகு காலங்கள்..??

வீட்டிலிருந்து திருட்டுத்தனமாய் எடுத்து வந்த புளியுடன், மிளகாயும், உப்பும் வைத்து அம்மிக் கல்லில் கொட்டி, ஈர்க்கு மாற்று குச்சியில் சொருகி சப்புக்கொட்டிய புளி லாலி பாப், இடித்த புளியை கொய்யா மர இலையில்  வைத்து சாப்பிட்ட புளி வெற்றிலை,  பொட்டுக் கடலையும் சர்க்கரையும் வைத்து அரைத்து விக்கி விக்கி சாப்பிட்டது, பொறியுடன் நாட்டு சர்க்கரையும் தேங்காயும் கலந்து சாப்பிட்டது, வாழைப்பழத்தை சக்கரம் சக்கரமாக வெட்டி நடுவில் நாட்டு சக்கரையை கிரீம் ஆகவும் வைத்து, நிலக்கடலையை ட்ஸ் ஆகவும் வைத்து சாப்பிட்டது, ரஸ்னா-வை எவர் சில்வர் டம்லரில் ஊற்றி நடுவே ஒரு குச்சியை பொட்டு Freezer-இல் வைத்து ஐஸ் செய்தது ( 2 ரூபாய் ஐஸ் செலவை மிச்சம் செய்யப் போய், வீட்டில் பாதி சர்க்கரை காணாமல் போன கதை வேறு ), நெல்லிக்காயையும், மாங்காயையும் துண்டு துண்டாய் நறுக்கி, மிகாய்ப்பொடி கரைத்த தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது, வெள்ளரி பீஞ்சினை முக்கால் பாகமாக வெட்டி உள்ளே இருப்பவைகளை குடைந்து எடுத்து விட்டு, உள்ளே நுங்கு, மாதுளை முத்துக்களை நிரப்பி, கோன் ஐஸ் சாப்பிட்டது.. Creative ஆகவும், Decorative ஆகவும் எத்தனை ரெசிபிகள்..!! வாரமலர் சமையல் குறிப்புகளும், DD1 ல் வரும் வசந்த் & கோ வின் ‘சாப்பிடலாம் வாங்க’ வில் கற்றுக்கொண்ட அரைகுறை சமையலும் போதாதா..?

ஒவ்வொரு காலத்திற்கும் தினுசு தினுசாய் தின்பண்டங்கள் வாரி வழங்கிய பெருமை பனை மரங்களுக்கே உண்டு. கண், மூக்கு, முகம், சட்டை என்று அப்பிக்கொண்டு உரிஞ்சிய நுங்கு, பனை ஓலையில் வாங்கிக் குடித்த தெழுகு, அப்படியே சாப்பிட்ட பனம் பழம், கரையான் புற்றுகளிலும், கல்லிடுக்குகளிலும் தேடிப் பொறுக்கி வெட்டி சாப்பிட்ட பனங்கொட்டை, நெருப்பில் சுட்டும், அடுப்பில் வெக வைத்தும் ருசித்த பனங்கிழங்கு.. தின்பண்டங்களுக்கு மட்டும் பஞ்சமே இருந்ததில்லை.
ஓடையோரம் நெல்லிமரம், மதகோரம் கொய்யா மரம், கிணற்று மேட்டு மாமரம், வயல் பொலி ஓரம் சீதாப்பழமரம், ரோட்டொரம் சப்போட்டா மரம், பக்கத்து வீட்டு கொலுமிச்சை மரம்.. பசியைத் தீர்க்க வழியா இல்லை எங்கள் கோரக்காட்டுப்புதூரில்...??!!



செவ்வாய், ஜூன் 12, 2012

பெண்மையும் சமூகப் பரிணாமங்களும்

பெண்மை. கடவுளுக்குத் தலை வணங்காதவர்கள் கூட மரியாதையுடன் கை கூப்ப வைக்கும் சக்தி பெண்மைக்கே உண்டு. மனித நாகரிகம் வளர வளர, பெண்மைக்கான கண்ணோட்டங்களும் மாறியே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. இந்த கண்ணோட்டங்கள் நான்கு விதமான பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது.

  • கடவுளாக கொண்டாடிய காலம் (ஆதி காலம்)
  • அடிமைகளாக நடத்திய காலம் (1980 வரை)
  • போகப்பொருளாய் பார்த்த காலம் (1980 லிருந்து இன்றும், நாளையும் கூட)
  • இழிவுப்போருளாக சித்தரித்த காலம் (2000 லிருந்து, இன்றும், என்று வரையோ?!)
ஆதி காலத்தில், மனித நாகரிகம் வளர்வதற்கு முன், ஒரு குட்டி மனிதனையே உருவாக்கும் அபூர்வ  சக்தியினை பெண் பெற்றிருந்தமையால், அவள் தெய்வமாகவும், தெய்வத்தினும் மிஞ்சிய சக்தியாகவும் போற்றப்பட்டாள். "நானும் உங்களுள் ஒருத்தி" என்று பெண் புரிய வைக்க முற்பட்டு, அதன் விளைவாக, தோளுக்கு தோளாய் நிற்க வேண்டியவள், ஆண் சமூகத்தின் காலடியில் கிடத்தப்பட் டாள்.
அன்றிலிருந்து ஆணிற்கு சேவகம் செய்வதற்கென்றே வாக்கப் பட்டவள் பெண் என்ற மிதர்ப்பில் ஆண் சமூகம் பெண்களை எள்ளி நகையாடியது. "மகாத்மா" என்று போற்றப்பட்டவர் கூட இதற்கு விதி விலக்கல்ல. பெண்களின் உடல் நலத்திற்காக போடப்பட்ட மலர் படுக்கைகள் யாவும் முட்படுக்கைகளாகவும், கோர மலைப்பாம்புகளாகவும் மாறி, கழுத்தை இறுக்கி, உடலளவிலும் மனதளவிலும் பெண்ணை பலமற்றவளாக மாற்றி இந்த சமுதாயம் அவளை அழகு பார்த்தது. ஆக, சமுதாயத்தில் மிகவும் நலிவற்றவர்கள் என்ற முட்கிரீடம் சூட்டப்பட்டவர்களாக பெண்மை நடத்தப்பட்டது.



அடுத்து, பெண்மையை போகப்பொருளாக சித்தரித்த காலம். இது என்று தொடங்கியது என்றே தெரியவில்லை. ஆலிங்கன சிற்பங்களிலும், அரசனின் அந்தப்புரங்களிலும் தொடங்கிய இந்த பரிணாம வளர்ச்சி, இன்று எங்கெங்கோ தொடருகிறது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் எங்கோ ஒரு ஓரத்தில் புதைந்து கிடந்தவைகள், இன்று எல்லாத் திரைப்படங்களில், ஏன், விளம்பரங்களில் கூட வெளிப்படையாகவே பெண்மை மிகக்கேவலமாக சித்தரிக்கப்படுகிறது .
குத்துப்பாடல்கள், ஆபாச சுவரொட்டிகள், இரட்டை அர்த்த வசனங்களை மீறி, இன்று புதிதாக ஒரு பாணியை 'கலை' உலகத்தினர் கடைபிடிக்கின்றனர். பெண்களைக் கேவலப்படுத்தி, அவர்களை 'காதலில் ஏமாற்றுபவர்கள்' என்று பட்டம் கட்டி, தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மதியாமல், மறந்து பாடித்திரிகின்றனர்.
பெண்களைத்திட்டி ஒரு பாடல் இருந்தால், அதுவே போதும் படம் வெற்றி  பெற்று விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் படக்குழுவினர் இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

பெண்களின் கொடுமைகளை ஊருக்கு உரைக்கிறேன் என்ற பெயரில் காதலில் வாழ்க்கையை தொலைத்தவர்கள், கொடுமைக்கார கணவனிடம் சிக்கி கரை ஏற முடியாமல் தவிப்பவர்கள், வேலியே பயிரை மேய்ந்த கதைகள் என்று பெண்மையின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதையும் வெளிச்சம் போட்டுக்காட்டி வியாபாரம் செய்யத்துடிக்கின்றனர்.  பெண்மை அல்லலில் சிக்கி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்  விளம்பர இடைவேளையில் தான், "அடிடா அவள, வேட் றா அவள ..", "எவண்டி உன்ன பெத்தான், கைல கெடைச்ச செத்தான்..", "வொய் திஸ் கொலவெறி  டீ.." என்று குடித்துவிட்டு பாடித்திரிகின்றனர். பெண்மையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்களே வா? ஆணாதிக்கமா? ஆணாதிக்க சமுதாயமா? எவற்றை கூறுவது.. எவற்றை விட்டுத்தள்ளுவது..??

நாளைய சமுதாயத்தில், ஏன் இன்றைய சமுதாயத்திலே கூட, எங்கள் சகோதரர்களின் பார்வையில் பெண்மை எப்படி இருக்கும் என்ற பதை பதைப்புடனும் , பயத்துடனும், மனதில் கனத்துடனும் முடிக்கத் தெரியாமல் முடிக்கிறேன்......

வெள்ளி, ஜூன் 08, 2012

புகைப்படங்கள் - கருப்பு/வெள்ளை முதல் Digicam வரை


பார்க்க பார்க்க ஆயிரம் கதைகள் சொல்பவை புகைப்படங்கள். கடந்த காலத்தை நாம் என்றுமே நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது. ஆனால், கடந்த கால நினைவுகளை சட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம், புகைப்படங்களாக.

தேடிப்பாருங்கள், வீட்டுப்பரண்களில், அலமாரிகளில் அல்லது பழைய வீட்டின் எங்கோ ஒரு மூலையில், கருப்பு வெள்ளையில் மிடுக்காகத் தோன்றும் தாத்தா, மெழுகு பொம்மை போல் பவ்யமாக நிற்கும் பாட்டி, பூ போட்ட சொக்காயில் அதிக அழகாய் நிற்கும் அத்தை... மனதோரம் ஆச்சரியமும் இதழோரம் சிரிப்பும் தான் வரும். அந்த கருப்பு/வெள்ளைப் படம் கூட வண்ணமயமான பல நினைவுகளைச் சுமந்திருக்கும்.

பெரியப்பா - பெரியம்மா திருமணம் - 1977 


அவ்வளவு பின் நோக்கிக்கூட செல்ல வேண்டாம். நம் ஒரு வயது புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? அது அநேகமாக நம் முதல் மொட்டைக்கு முன்னால் எடுத்ததாக இருக்கும். எண்ணெய் வைக்காமல், பரட்டை தலையோடு, பேந்த பேந்த விழித்துக்கொண்டு, வயிறு வரை தொங்கும் டாலர் செயினும், சிரிக்கவும் தெரியாமல், அழுகையும் வராமல், கிட்டத்தட்ட மோனலிசா மர்மப்புன்னகையுடன் இருப்போம் பாருங்க, செம காமெடி..?!



நானும் என் தம்பி சூர்யாவும் - 1998

நானும் சூர்யாவும் 2011

அதற்குப்பின், பள்ளியில் எடுக்கும் குரூப் போட்டோவிற்கு நடக்கும் அலப்பறை தான் டாப். கைக்குட்டையில் பவுடர் கொட்டிக்கொண்டு, பக்கத்து வீட்டு மல்லிகைப்பூவையும், ரோஜாப்பூவையும் வைத்துக்கொண்டு, என்றைக்கும் போடாத பாலிஷ்-ஐ ஷூ-க்கு இரண்டு முறை போட்டுக்கொண்டு, யார் பக்கத்தில்  உட்காருவது என்று பக்காவாக பிளான் போட்டுவிட்டு போவோம். ஒரு மாதம் கழித்து போட்டோ வந்து பார்த்தால், கண்ணை மூடிக்கொண்டோ, முறைத்துக்கொண்டோ இருப்போம். கடவுளே, விடு, அடுத்த வருடம் கலக்கி விடலாம் என்று கடைசி வரை குரூப் போட்டோக்கள் எல்லாம் சொதப்பலில் தான் முடிந்திருக்கும்.

குரூப் போட்டோ - 1994

7-8 வருடங்களுக்கு முன்பு, ஒரு சில பண்டிகைக்காலங்களில், முக்கியமாக தீபாவளி யில், யாரிடமாவது ஓசி காமிரா வாங்கிக்கொண்டு வந்து, இரண்டு மூன்று ரோல் போட்டு ஆசை தீர எடுக்கலாம் என்றால், அதில் ஒரு ரோல் முழுக்க புஸ்வானத்தையும் சங்கு சக்கரத்தையும் எடுத்து எடுத்தே வீணாய்ப்போயிருக்கும். மிச்சமானவற்றை மஞ்சகள் காட்டிலும், வாழைத் தோப்புகளிலும், நெல் வயல்களிலும் நின்று சேறு அப்பிக்கொண்டும் எறும்புக்கடிகளை பொறுத்துக்கொண்டும் போஸ் குடுத்ததெல்லாம் கொள்ளை அழகு.

புல்லெட் ஓட்டுவது போல், மத்தாப்பு பிடிப்பது போலவும், நான்-நீ என்று போட்டி போட்டுக்கொண்டு எடுத்து, அதில் பாதி போட்டோ க்கள், Shutter open பண்ணாமல், Lens இல் கை வைத்து மறைத்தும், ரோல் தீர்ந்து போயும் விழுந்திருக்கவே விழுந்திருக்காது. இத்தனை ரகளையும் மீறி வந்திருக்கும் புகைப்படங்கள், அவ்வளவு பொக்கிஷங்கள்..!!

தீபாவளி -1999

 தீபாவளி - 2011
இன்றைக்கு போட்டோ எடுப்பதெல்லாம் சகஜமாகி விட்டது. ஏதாவது ஒரு செடி பூ பூத்தால் பக்கத்தில் நின்று ஒரு போஸ் (அது ஒற்றையாக பூத்தாலும் சரி, கொத்தாக பூத்தாலும் ), Cafeteria போனால், ஹாஸ்டல் மெஸ் சில் புதிதாய் ஏதேனும் போட்டால், தோழிகள் யாரவது செமினார் எடுத்தால், வகுப்பில் தூங்கினால் கூட விடுவதில்லை, ஐஸ் கிரீம் சாப்பிட்டாலும் சரி, அதிசயமாக படிச்சாலும் evidence காக இதையெல்லாம் போட்டோ எடுத்து வைக்க வேண்டியது இருக்கு, தோழி யில் ஸ்கூட்டி முதல் கல்லூரி சேர்மனின் பென்ஸ் கார் வரை எல்லா முன்னாலும் ஒரு போஸ், ஒரு க்ளிக், ஒரு ப்ளாஷ்..

சராசரியாக, நம் கணினிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, புகைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நீங்கள் வேண்டுமானால் ஒப்பிட்டுப்பாருங்களேன்,  பத்து வருடத்திற்கு முந்தய புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும், எவை அதிகம் சுவாரஸ்யமான கதைகள் சொல்கிறது என்று உங்களுக்கே புரியும்.

புதன், மே 16, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும். ஒரு 15 வருடங்களுக்கு முன், நம் பொக்கிஷங்களில் முக்கியப் பங்கு வகித்தவைகள். சலித்துப்போட்ட ஆற்று மணல்களில் குட்டியூண்டு கிளிஞ்சல்களை கண்டுபிடித்து, வராத கடல் அலைகளை காதிற்குள் வைத்துக்கேட்ட சந்தோஷங்கள் சொல்ல சொல்ல குறையாது. அப்போதெல்லாம் மயிலிறகு வைத்திருப்பவர்கள் எல்லாம்  அம்பானிகள். அது குட்டி போடுமா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அந்த மயிலிறகு கொத்திலிருந்து ஒரு மயிலிழையை பெறுவதற்குள் எத்தனை பாடு..? எத்தனை பாசாங்கு..?? 
புது வருடத்து நாணயங்கள், நாய்க்குட்டி படம் போட்ட தீப்பெட்டிகள், சாமி படம் போட்ட கடலை மிட்டாய் லேபில்கள், சீரக மிட்டாய்க்கு வாங்கிய  டப்பாக்கள், ஜவ்வு மிட்டாய் மோதிரங்கள், ஐஸ் குச்சிகள், பூமர் ஸ்டிக்கர்கள்.. விலை மதிக்க முடியாதவைகள் அல்ல, ஆனால் பொக்கிஷமான அதன் நினைவுகள்..!!

இந்த நினைவுகளை எல்லாம் திரட்டி ஒரு தொடர்பதிவு எழுத உள்ளேன். இனி, முதல் பதிவு..,


தொட்டாங்குச்சி நினைவுகள்

எங்கள் பால்ய வயதில், அப்பா தூக்கிப்போட்ட காலி தீப்பெட்டி யையும் அம்மா தூக்கிப்போட்ட தொட்டாங்குச்சியையும் நாடியே எங்கள் விளையாட்டுகள் இருக்கும். நான்கு தீப்பெட்டிகள் சேர்த்து நாற்காலி, சோபா, கட்டில், வண்டி யும், தொட்டாங்குச்சிகள் அரிசி வைக்கும், சமைக்கும் பாத்திரங்களாகவும், சூட டப்பாக்களும், பல் பொடி டப்பாக்களும் இதர பாத்திரங்களாகவும் உருமாறும். மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டிகளில் பத்திரப்படுத்தி, கந்தலான சாக்கினை போட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அட்டாளிகளிலும், கட்டுத்  தறிகளிலும் மறைத்து வைத்த காலங்கள் நினைவிலிருந்து மறையாதவை.
வருடமொருமுறை தேர்க்கடைகளில் தேடிப்பிடித்து வாங்கும் பொம்மைகள் கூட ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விடும்.ஆனால், எங்கள் விளையாட்டுப் பொருள்கள் எங்களுக்கு என்றுமே சலிப்படைந்ததில்லை.

நீர் பாய்ந்து இரண்டு நாட்களான வாய்க்கால்களில் படர்ந்து கிடக்கும் ஈர மணல்களில் சின்ன கொட்டாங்குச்சிகளில் பனியாரங்களும், பெரிய  கொட்டாங்குச்சிகளில் இட்லிகளும் சுடுவது எங்களுக்கு பிடித்தமான விளையாட்டு. அதோடு நின்று விடாமல், மஞ்சள் வயல்களில் விளைந்து கிடக்கும் கீரைகள், மிளகாய்கள், தக்காளிப் பழங்கள், கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கும் கொய்யா பிஞ்சுகள் மா பிஞ்சுகள், வாழை ப்பூக்கள் என்று எதையும் விட்டு வைக்காமல், flavor க்கு வீட்டிலிருக்கும் மஞ்சள் /மிளகா ய்ப்பொடிகளையும் சேர்த்து அட்டகாசமான சமையல் நெருப்பில்லாமல், புகையில்லாமல் தயாராகிவிடும். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மிளகுதக்காளிப்பழகளையும், பெயர் தெரியாத பூக்களையும் கோவைப்பழங்களையும் வைத்து ரசனையுடன் அலங்கரித்து பூவரச இலைகளில் சம்பிரதாயமாக உப்பு வைத்து பரிமாறி, பாசாங்காக உண்டு மகிழ்ந்த தருணங்களை இப்போது நினைத்தாலும் பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

நான்கு ஐந்து செங்கல்களை வைத்து வீடு கட்டி, அதற்கு உள் அலங்காரங்கள், வெளி அலங்காரங்கள் செய்து, கோலம் போட்டு, அதன் மேல் செம்பருத்தியையும் மயில் மாணிக்கத்தையும் படர விட்டு, அதை ஒவ்வொரு கோணங்களிலும் ரசித்து பெருமிதப்பட்ட காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது.

தென்னங் குரும்பைகளில் பூதங்களும்,பனங்கொட்டைகளில் சொட்டை தலை தாத்தாவும், தென்னம் பாலைகளில் பூக்களைக்குமித்து வாய்க்கால்களில் படகு விடுவதும், வண்டு கடித்து மொக்கையாகிப்போகும் பாலைகளில் பேனா stand கள் செய்தும், தினமும் சாப்பிடும் ஐஸ் குச்சிகளில் வீடுகளும், 3 ரோசெஸ் டப்பாக்களில் குருவி கூடுகளும், சொளக்கதிரிற்கு ஜடை பின்னுவதுமாகக்கழிந்தன எங்கள் தொட்டாங்குச்சி காலங்கள்.

மதிய வேளைகளில், ஈர மணல்களில் கால் பாதங்களை புதைத்து வீடுகள் செய்து, அதனை சுற்றியும் தோட்டம் போட்டு, பாசனம் செய்து நாங்களும் விவசாயி என்று பெரியமனுஷத்தனமாக விளையாண்டதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. தென்னை ஓலைக்கடிகாரங்கள் (எங்க ஊர் Rolex) ,கை கால் ஆட்டி ஆட்டி விளையாடும் பொம்மை , பயமுறுத்தும் பாம்புகள் என்று எங்களைச்சுற்றி இருந்த பொம்மை உலகமே வேறு.

Puppet play, Blocks & buildings, Soccer goal, Bingo... என்று ஏதேதோ விளையாட்டுகளைக் கேட்கும் போது எனக்கு ஏக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ வந்ததில்லை. இட்லி சுடுவதில் கற்றுக்கொண்ட நேர்த்தி, நுணுக்கம், வீடு கட்டுவதில் வளர்த்துக்கொண்ட கற்பனைத்திறன், தென்னை மர மட்டைகளில் பொம்மை செய்வதில் கிடைத்த புதுமையான ஐடியாக்கள்.. இன்று வரை கூட தினுசு தினுசாய் பல கற்பனை பொருள்கள் செய்யவும், புதுமையாய் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்தவைகள் கொட்டங்குச்சிகளே..!!


வெள்ளி, ஏப்ரல் 27, 2012

Google-ஓ-Google

வாழ்க்கையின் சுவாரஸ்யமே விடை தெரியாத கேள்விகளிலும், புரிந்து கொள்ள முடியாத விசித்திரங்களிலும், விவரிக்கமுடியாத அதிசயங்களிலும் தான் புதைந்து கிடக்கின்றன. ஆனால், இன்றைக்கு விடைதெரியாத கேள்விகள் என்று எதையும் சொல்வதற்கில்லை (தேர்வுகளை விடுத்து :) ) 'கூகிள் இருக்க பயமேன்?'
உண்மையில் Linkedln profile கள் சிம் கார்டுகள் வாங்கவும், Facebook profile கள் திருமணப்பொருத்தம் பார்க்கவும் பயன்படுத்தப்படும் நாட்களுக்கு மிக அருகில் வந்துவிட்டோம் நாம். சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கூகிள்'ஐ நாட ஆரம்பித்து விட்டோம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் நம் தேடல்களே வேறு. 

பாட்டியின் கை வண்ணத்தில் நா ஊரும் பதார்த்தங்கள், தாத்தா வின் சில்லறைகள், புத்தகங்கள், அம்மா பார்த்து பார்த்து எடுத்த புதுத்துணிகள், அப்பாவின் முரட்டுக் கைகடிகாரம், அவரது சட்டைப் பக்கெட்டுகள்.. இப்படி சொல்லி சொல்லி அனுபவிக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

இன்றுவரை அதே தேடல்கள் தான், ருசி ருசியான உணவு வகைகள், பேஷன் ஐ பறை சாற்றும் உடைகள், கடிகாரங்கள், வீடியோக்கள், முகம் தெரியாதவர்களிடம் பெறும் அறிவுரைகள், ஆலோசனைகள், பாராட்டுக்கள்... வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் எங்கே போய் விட்டன?!

இணையம் உங்களுக்கு சுவாரஸ்யமாகவே தோணலாம். கலர் கலராய் படங்களும், பாப்-அப் விளம்பரங்களும், யாரோ அந்நிய மனிதனின் பீட்டர்-ம் சுவாரஸ்யம் கிடையாது.
நிஜமான சுவாரஸ்யம் எங்கு இருக்கிறது?

நம் பாட்டிகளிடம் கேட்டுப்பாருங்கள், அவர் சொல்லுவார் நூறு ரெசிபிகள். அவை ஒவ்வொன்றும் நம் தாத்தாவுடைய/அப்பாவுடைய/அத்தையுடைய விருப்பமாதாகவே இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமே. அவருடைய சுருக்குப்பையிலிருந்து வரும் கதைகள் யாவும் தாத்தாவின் கம்பீரத்தையும், அப்பாவின் கெட்டிக்காரத்தையும், அத்தையின் விட்டுக்கொடுத்தலையும் கொஞ்சம் மிகையாகவும், மிஞ்சும் சுவையோடும், பீட்டர் விடுவார் பாருங்கள்.. Facebook எல்லாம் தோற்றுப்போய்விடும். 

நம் தாத்தாவிடம் கேட்டுபாருங்கள், அவரது துருப்பிடித்த அரையணா கூட பசுமையான நினைவுகளை விடாமல் பற்றியிருக்கும். அது அவரது முதல் சம்பாத்யமாகக்கூட இருக்கலாம். அவரது முழு உழைப்பிலும், வியர்வையிலும் வெட்டிய கிணறு, ஊற்றுத் தண்ணீ ரை முதல்  முதலில் அள்ளிக்குடித்த பரவசம், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விவரிக்கும் அவர் வீடு கட்டிய அனுபவம், பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த கர்வம், பாம்புகளையும் தேள்களையும் கையில் எடுத்து விளையாடிய வீரம், தென்னை மரமும், பனை மரமும் ஏறத்தூண்டிய இளமை, தூக்கு போசியுடன் அவர் பள்ளி சென்ற பருவம், கட்டை வண்டி கட்டிக்கொண்டு சந்தைக்கு ஷாப்பிங் போனது, தேர் கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்தது.. கால இயந்திரத்தில் பயணம் செய்த உணர்வைத்தரும். 'Hall of fames' இல் ஏற்றப்படாத சாதனை மனிதர்கள் இவர்கள்.

நம் அம்மாக்களை கேட்டுப்பாருங்கள், நமக்கு எந்த உடை பொருந்தும் என்று அவரை விட வேறு யாருக்கும் ரசித்து சொல்லத்தெரியாது. அவரது தேர்வுகள் 'Out-of-fashion' ஆகா இருக்கலாம். ஆனாலும் அன்பு, பாசம், பரிவு, கம்பீரம் கலந்த கலவையாக நிச்சயம் இருக்கும். இன்றுவரை என் உடைத்தேர்வுகள் எல்லாம் என் அம்மாவினுடையதே. சிவகிரி வாணி கட் பீஸிலிருந்து ஈரோடு கடை வீதி சுமங்கலி சில்க்ஸ் இல் ஆரம்பித்து சென்னை சில்க்ஸ் வரை கூட தேடல் முடியாது. அதுவும் என் ஒவ்வொரு உடைகளும் பின்னணியிலும் சின்ன சின்ன கோபங்கள், நிறைய சந்தோஷங்கள், அர்த்தமற்ற சண்டைகள், சம்பந்தமே இல்லாத வீரப்புகள் என்று பல சுவாரஸ்யங்கள் புதைந்து கிடக்கும். ஆன்லைன் இல் யாரோ கலர் கலராய் மாடல் களின் பரிந்துரைகளும் ஹிட் லிஸ்ட் உம் அவ்வளவு சுவாரஸ்யமானதா என்ன..?


நம் அப்பாவிடம் கேட்டுப்பாருங்கள் placement  இல் ஆரம்பித்து, வாழ்க்கை வரை. ஏனெனில், அவர் கற்ற பாடங்களும், பெற்ற அனுபவங்களும் ஏராளம். நம்மைப்பற்றி அறியாதவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை விட, நம் தந்தையிடமிருந்து  பெற்றவைகள், ஒரு வினையூக்கி போல, நம்முள் வெற்றி விதையை விதைத்து விட்டுப்போகும்.

இந்த சுவாரஸ்யங்கள் Page ranking algorithm மூலமாகவோ, hit list மூலமாகவோ கிடைக்காது. கொஞ்சம் கூகிள்-ஐ விட்டு வெளியே வந்து பாருங்கள், வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது என்று புரியும்.
சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!!

குறிப்பு: படங்கள் - கூகிள்-கு நன்றி :)

திங்கள், ஏப்ரல் 09, 2012

கோரக்காட்டுபுதூர் Professionals

பொதுவாக நகரத்தில் பணிக்குச் செல்பவர்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.

  • மடிப்பு கலையாத branded சட்டையில் அழுக்கு "டை" கட்டியிருந்தால், அது Management professional 
  • தினமும் காலையில் coolers போட்டுக்கொண்டு கடலை போட்டால், அது IT Professional 
  • பாக்கெட் இல் இரண்டு, மூன்று கலர் பேனா வைத்திருந்தால், அது Engineers .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆனால், எங்கள் ஊரில் ஒரே ஒரு profession தான், விவசாயம் - Agriculture - किसान. இவர்களும் அதிகாலைப் பரபரபிற்கும், வார இறுதி கொண்டாட்டத்திற்கும் பழக்கப்பட்டவர்களே. காலை 7.30 மணிக்கு தூக்குபோசில் சாப்பாடு எடுத்துக்கொண்டும், பொறி காகிதத்தில் வெற்றிலையும் பாக்கும், இப்போது புதிதாக செல்போனும் கட்டிக்கொண்டு, பள்ளி செல்லும் குழந்தையின் சலசலப்போடும், ஆரவாரத்தோடும் தொடங்கும் இவர்களது காலைப் பொழுதுகள் , தினம் தினம் தினுசு தினுசாய் வேலை பார்க்கும் சகலகலா வல்லவர்கள். களை பறித்தல் (Debugging), பாத்தி கட்டுதல் (Module development), நீர்  பாய்ச்சுதல் (Prototyping) என்று உடலுக்கும் உள்ளத்திற்கும் சவாலான வேலைகளை அசால்ட்டாக செய்வர். 



இவர்களுக்கும் dress code எல்லாம் உண்டு. வெயிலிலிருந்து தப்பிக்கவும், அரிப்புகளிளிருந்து காத்துக்கொள்ளவும், கணவருடைய / மகனுடைய / சகோதரனுடைய முழுக்கை சட்டைகள், கோட் ஆகவும், பழைய சேலையோ தாவணியோ தலைக்கவசமாகவும் மாறிவிடும். காலையில் தோராயமாக 7.15 மணிக்கு ஊர்முனை பிள்ளையார் கோவிலில் கூட்டம் கூடி, அவரவர் சகாக்களுடன் கூட்டு சேர்ந்து, எவர் காட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்படும். 7.45 மணியளவில் தோட்டத்திற்குள்  கால் வைப்பார். கை, அதன் போக்கில் மும்முரமாக வேலை செய்ய, மனம் வீட்டு பிரச்சனையில் லயித்திருக்க, வாய் வெற்றிலையுடன், திருமதி செல்வத்தையும், தென்றலையும் கடித்துக் குதறிக்கொண்டிருக்கும்.

10 மணிக்கு காலை உணவு! கொய்யா, மா, வாழை மரங்கள் ஆசையாய் தலை கோதி விட, பழைய சோறும், அப்பொழுது தான் மண்ணிலிருந்து  பறித்து எடுத்த வெங்காயமும், கை நிறைய அள்ளிக்  குடித்த கிணற்று  தண்ணீரும்.. அட அட அட.. This is the secret of their energy!



இந்த  1 மணி நேர இடைவெளியில், 1500 ரூபாய் கொரியன் போனில் அட்டகாசமாக பாட்டுபாடி நலம் விசாரிக்கும் கணவன்மார்கள், மிட்டாய் வாங்க  காசு கேட்க வரும் பொடிசுகள், காலேஜ் படிப்பைப்பற்றி விசாரிப்புகள், சின்ன வயதில் செய்த அட்டகாசங்கள், நன்றாக படிக்கவேண்டும், வெயிலில் வர வேண்டாம், நன்றாக சாப்பிட வேண்டும், சத்தாக சாப்பிடவேண்டும், எத்தனை அக்கறைகள், எத்தனை எத்தனை கரிசனங்கள்..சேரனும் தங்கர்பச்சானும் சேர்ந்த  படக்கலவைங்க  இது..

1 மணிக்கு தேநீர் நேரம். கிழக்கு வேலி பார்த்த தென்னை மரமோ, தண்ணீர் மதகோ இவர்களது சிம்மாசனமாய் அமைந்து விடும். எவ்ளோ மொக்கையா டீ கொண்டு போய் குடுத்தாலும், நம்மை விட்டு கொடுக்காமலேயே பேசுவாங்க பாருங்க.. இதுல தான் எங்க மக்களை அடிசுக்க ஆளே கிடையாதுங்க ... 

கண்ணு, பாப்பாத்தி, அழகு மொவர, பட்டுகுட்டி, கொங்கு பொடுசு.. இவங்கள மாதிரி வித விதமா  கொஞ்சி பேசவும் யாராளையும் முடியாது.. 



3 மணிக்கு இவங்க duty முடிஞ்சிரும். வெள்ளிக்கிழமை தான் இவங்களுக்கு salary day. எங்க ஊர் சந்தை அப்போ தான். இவங்களுக்கும் incentives எல்லாம் உண்டுங்க. அறுவடை நாள்கள்'ல நெல்லும், கடலையும் கிடைக்கும். பயிர் விதைக்கிற நாள் ஆகட்டும், அறுவடை தொடங்கற நாள் ஆகட்டும், முடியுற நாள் ஆகட்டும்  நிச்சயம் மிச்சர், போண்டா  வோட 'Tea Party' தான்.

மொத்தத்தில், எங்க ஊர் professionals இல்லேன்னா உலகமே இயங்காதுங்க. இவங்கள மாதிரி உழைப்பவர்களும்  கிடையாது, வாழ்க்கையை  அனுபவிப்பவர்களும்  கிடையாதுங்க ..



வெள்ளி, மார்ச் 16, 2012

கூட்டை விட்டு வெளியேறுகிறோமா நாம் ??

நத்தை - தன் அலட்சியத்திற்காக கடவுளிடம் சாபம் பெற்று, தன் கூட்டை முதுகில் சுமப்பதாக வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. இன்றைய காலகட்டத்தில், நாமும் நத்தைகள் போலத்தான். நத்தைகள் போல ஒரு சின்ன ஓட்டிற்குள் ஒடுங்கிக்கொண்டு, நம் வீட்டை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறோம்.



நாம் வளர வளர, நம் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, நம் வீட்டிற்கும் குடும்பத்திற்குமான இடைவெளியும் தூரமும் அதிகரிக்கிறது.
3 வயது வரை 24  மணிநேரங்களும் அம்மாவின் செல்லத்திலும், அப்பாவின் வண்டி சவாரிகளிலும் கழிந்த நாட்களெல்லாம் குறைந்து, பள்ளிக்கூடம் என்ற பூதம் வந்து நமது 6 மணி நேரத்தை முத்தாய் அபகரித்துக்கொள்ளும். 14 வருடங்கள்!! ஏறக்குறைய வனவாசம் போல.

இந்தக்காலத்தில் தான் அரைக்கால் சட்டைகள் முழுக்கால் சட்டைகளாகவும், சிண்டுகள் இரட்டைப் பின்னல் களாகவும் பரிமாற்றமடையும். அன்றுவரை, மதிய உணவை இரண்டடுக்கு எவர்சில்வர் டப்பாவில் அடைத்துக்கொடுக்கும் அம்மாவிற்கும், பார்த்து பார்த்து செலவு செய்யும் அப்பாவிற்கும் பொறி தட்டும். எதோ ஒன்று பறிபோகும் உணர்வு, காலமென்னும் கொடிய அரக்கன் நம்மை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு செல்ல, செய்வதறியாது திகைத்து நிற்பார்கள். அன்றெல்லாம், எனக்கு அது பெரிதாகத்தெரியவில்லை.ஆனால், இன்று நான் திகைத்து நிற்கிறேன். கூட்டை விட்டு வெளியேறுகிறோமா நாம் ??

LKG இல் நான் சென்ற பள்ளி வண்டி விபத்துக்குள்ளாகி என் தலையின் காயம் பட்ட பொது, பள்ளியையும் மாற்றி, பள்ளிக்கு தினமும் காலையிலும் மாலையிலும் அழைத்துச்சென்று வந்தார், என் தந்தை. Royal Enfield புல்லட்டில் ஆரம்பித்த இந்தப்பயணம், நாளடைவில் Hero Honda வில் என் தாத்தா வோடும் என் தம்பியோடும் தொடந்தது.


என் 7 வயதில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் சுமார் ஒன்றரை வருடங்கள் மருத்துவமனைக்கு என் அம்மாவுடன் அலைந்த போது உணவின் மகத்துவம் புரியவில்லை, நெடுநெடுவென்று வளர்ந்த தாடி வைத்த மருத்துவர் ஊசியைக்காட்டி பயமுறுத்தியபோது கூட உணவின் அருமை தெரியவில்லை. தோசையின் மொருமொருப்பு பற்றவில்லை, பாட்டியைப்போல சட்னி அரைக்கத்தெறியவில்லை, தோழியின் தாயைப்போல சப்பாத்தி மிருதுவாக செய்யத்தெரியவில்லை என்று அம்மாவிடம் சண்டைபோட்ட போது, அம்மாவின் கைப்பக்குவம் அறியவில்லை. ஐந்தாவது ஆண்டாக விடுதியில் சாப்பிட்டு வரும்போது தான், தோட்டத்தில் விளைந்து கிடக்கும் சுரைக்காயின் ருசியும், தள தளவென்று வளர்ந்து கிடக்கும் கீரையின் அருமையும் இப்பொழுது தான் என் புத்திக்கு உரைக்கிறது.


LKG க்கு முன்.. :)
MCA விற்கு பின்.. :(

பென்சிலுக்கும் மிட்டாய்க்கும் சண்டை போட்ட தம்பியின் பாசம் அன்று எனக்கு பெரிதாய்த் தெரியவில்லை. நான்கு நாட்களுக்கு முன் பறித்த கொய்யாவைக்கூட அக்காவிற்கு பிடிக்கும் என்று ப்ரிஜ்ஜில் வைத்திருந்து கொடுக்கும் போது நெகிழ்ந்து போனேன். 

ஆறு மணிநேரமாக இருந்த தொலைவு, பத்து மணி நேரமாகி, பதினைந்து நாட்களாகி, இப்பொழுது ஒரு மாதத்திற்கும் மேலாகி நிற்கிறது. வளாகத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன் நான். இனி எட்டு மாதங்களில் நான் என் தனி உலகில் வாழப்போகிறேன். இந்த தூரம் இனி மேலும் அதிகமாகலாம்.


வளர்ந்து நிற்கும் ரோஜா செடிகளும், கன்றுக்குட்டிகளும், புதிதாய்  பிறந்திருக்கும் ஆடுக்குட்டிகளுமே எனக்கு அந்நியமாய்த் தோன்றி உறுத்துகிறது. அலமாரிக்குள் உறங்கும் என் பொருள்கள், இரண்டு நாட்கள்  கிடைக்கும் அதீத பாசம்.. ஒரு வாரமாய் அம்மா சேகரித்து வைத்திருக்கும் பூக்கள், ஊட்டி விடச்சொல்லி கெஞ்சும் தம்பி, மதியம் 2 மணிக்கு சரியாய் இளநீர் குடிக்க அழைக்கும் தாத்தா, இளைத்துப்போய் விட்டாய் என்று வாடிக்கையாய்க் கூறும் பாட்டி.. இந்த இரண்டு நாள் உலகம் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்..


திங்கள், மார்ச் 05, 2012

விலைகளுக்கா விலைபோகிறோம்

'பசுமைத் தாயகம் அமைப்போம்', 'மரங்கள் பூமியின் கொடைகள்', 'ஓசோன் மண்டலம் காப்போம்', 'வாய் இல்லா ஜீவன்களின் நலம் பேணுவோம்' என்று முண்டாசு அணிந்த ஓவியனின் கிறுக்கல்களைத் தாங்கி நின்ற விளம்பரத்தட்டிகளின் காலமெல்லாம் 'ஆசை' சாக்லேட்  போல இருப்பிடம் தெரியாமலே பொய் விட்டன. அதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இம்மனித குலம் விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. விழிப்புணர்வுத் தட்டிகளைவிட விளம்பரத்தட்டிகள் நம்மை வசீகரித்து விடுகின்றன.

'பிளாஸ்டிக் ஐத் தவிர்ப்போம்' என்பதை அலட்சியப்படுத்தும் நாம், eco-friendly, மண்ணில் புதைத்து வைத்தால் மக்கக்கூடியது, வெளிநாட்டில் உற்பத்தியானவை என்று 20 ரூபாய்க்கு விற்கும் டப்பாவை 200 ரூபாய்க்கு விற்றாலும் வாங்கிக்கொள்கிறோம்.

மண்வளம் காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் கரையாங்களையும், ஒட்டுண்ணிகளையும் HIT அடித்து ஒழித்துவிட்டு, மண் புழு உரம், இயற்க்கை உரம், organic என்றெல்லாம் கூறி குளிரூட்டி விற்கும் காய்கறிகளை அல்லவே நாடிச்செல்கிறோம்?

தெருவிற்கு தெரு அலையும், தினமும் நம் கண்ணில் படும் நாய்களுக்கும், மாடுகளுக்கும்  உணவிடவோ பாதுகாக்கவோ தோன்றுவதில்லை. ஆனால், மரக்கழிவுகளில் செய்தது, மிருகங்களைக்காக்க உங்கள் பங்கை அளியுங்கள்  என்று 5000, 6000 ரூபாய்க்கு விற்கும் காலணிகளை வாங்க ஆர்வம் காட்டுகிறோமே.. ஏன்??








தெருமுனையில் விற்கும் கற்றாழையில் தூசு படிந்திருக்கும் என்று ஒதுக்கி  விட்டு, கிராபிக்ஸ் கற்றாழையைக் காட்டி, டப்பிங் மொழியில் பேசி விற்பனை செய்யும் ஷம்பூவையும் கிரீமையும் வாங்குவதிலேயே திருப்தி அடைகிறோம்.


மூத்த தலைமுறையினருக்கு மாரடைப்பு வந்தால், அவர்களுக்குத் முக்கியத்தேவை மகன்/மகள்/பேரப்பிள்ளைகளின் அருகாமையும் அன்புமே தவிர, லிட்டர் 200, 300 ரூபாய்க்கு விற்கும்  ஐரோப்பிய சமையல் எண்ணெய் அல்ல.


இயற்கை கிருமி நாசினியான சாம்பிராணியை அலர்ஜி என்று ஒதுக்கி விட்டு , 35,000 ரூபாய்க்கு Ozone-free AC வாங்குவதே இப்பொழுது  கௌருவமாக கருதப்படுகின்றது. 


தாத்தாக்கள் வைத்திருக்கும் மஞ்சள் பைகள் கேலியாகப்பட்டது, ஆனால் ஷாப்பிங் மால் களில் 100 ரூபாயேனும் அதிகம் குடுத்துத்தானே துணிபைகளையும், காகிதப்பைகளையும் வாங்கி வருகிறோம். உண்மையில் நாம் தான் கேலிப்பொருள்களாகி வருகிறோம்.


இன்றெல்லாம் 'சுற்றுச்சூழல் விழிப்புணர்வு' விளம்பரங்களே ப்ளெக்ஸ் போர்டு களில் தான் வருகிறது.

இப்பொழுதெல்லாம்  குழந்தைகள் பல்லாங்குழியும் கிட்டிப்புல்லும் விளையாட சம்மர் கிளாஸ் போகத்தொடங்கி விட்டார்கள். இதை நாகரிக வளர்ச்சி என்று சொல்வதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.பார்க்கலாம், இந்த வளர்ச்சி எங்கே செல்கிறது என்று...




சனி, பிப்ரவரி 18, 2012

பந்தயக்குதிரைகள் நாங்கள்..!!


"Life is a race.. run, run , run.." என்று எல்லோரும் நண்பன் பாணியில் சொல்வது வா(வே)டிக்கையாகிப் பொய் விட்டது. உண்மையில் பந்தயக்குதிரைகள் தான் நாங்கள்.

நாங்கள்? சொகுசான வேலைகளை விடுத்து பகட்டான வேலைக்கு ஏங்கும்/அலையும்/திரியும்  முதுகலைப்பட்டதாரிகள். எங்களுடைய இலக்கெல்லாம் ஒன்றே. வருகின்ற நேர்முகத்தேர்வுகளில் கையில் ஒரு (ஒரே ஒரு) வேலை.

"என் பொண்ணு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்" என்ற பெருமையை என் அப்பா விற்கும், "என் பொண்ணு சாதித்து விட்டாள்" என்ற பூரிப்பை என் அம்மாவிற்கும், "இனி ஆசைபட்டவற்றை எல்லாம் அக்கா விடம் கேட்கலாம்" என்ற உரிமையை தம்பிக்கும் தர நிச்சயம் ஒரு வேலை வேண்டும்.

"பேத்தி என்ன வேலை செய்கிறாள்?" என்ற கேள்வியின் பதிலுக்காகவே, கோரக்காட்டுப்புதூரில் வசிக்கும் என் அய்யா வும், ஆத்தாவும், பருத்திக்கொட்டம் பாளையத்தில் வசிக்கும் என் அப்பச்சியும் அம்மாயும் ஆங்கிலத்தில் பேச வேண்டும், "கம்ப்யூட்டர் கம்பெனி",  என்று.



விடுதிக்குக்ளேயே வெட்டிக்கதை பேசியபடி போகும் காலை நடை பயிற்சியிலிருந்து, காலையில் நடை போகும் பொது வாகனங்கள், நெரிசல் இல்லாத சாலை அடுத்த இரண்டு மணி நேரத்தில் பரபரப்பாக சுழலும் விந்தையை இரசிக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் பணிகளில் ஓரளவேனும் என் அம்மாவிற்கு தெளிவு படுத்த வேண்டும்.

Income tax, Recession, Inflation என்று நானும் கொஞ்சம் உலக பொருளாதாரத்தை அலச வேண்டும்.

கல்விக்கடனை விரைவில் கட்ட வேண்டும். அப்புறம், வருமான வரி கட்ட வேண்டும். வரிக்கழிவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.


பண்டிகைக்கால விடுமுறைக்கு ஊர் திரும்ப இரயிலிலும், K.P.N Travels சிலும் டிக்கெட் முன்பதிவிற்கு அலைய வேண்டும். இன்னும் எக்கச்சக்கமாய் ஆசைகள், கனவுகள், (வெட்டிக்) கற்பனைகள்.

மேற்கண்டவைகளில் ஒன்றிரண்டாவது நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும்.. உழைக்கிறோம??

நாளை துறைத்தலைவரிடம் வாங்கப்போகும் வசவுமொழிகள், நாளை மறுநாள் நடக்க இருக்கும் மாதிரி நேர்முகத்தேர்வு, தோழியின் பிறந்த நாள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பணங்கள், வேகாத தோசை, குழைந்த சேமியா... எதைச்சொல்ல எதை விட..??


எனது காலைப்பொழுதின் முதல் ஒரு மணி நேரத்திற்காக காலை நடைப்பயிற்சியும், தடிமனான புத்தகங்களும் போட்டி போட, இறுதியில் சோம்பலே வெல்லும். அவசரக்கதியில் கிளம்பி Servlet, Server களோடு முட்டி மோதி, Semantic Web டோடு போராடி, UML, VC++.. கடவுளே.. 4  மணிக்குப் பிறகு Data Structures, DBMS, Operating Systems, Networking, Verbal, Non-Verbal, Aptitude, Soft Skills... ஸ்ஸ்ஸ்.. அப்பப்பா.. யாருப்பா இந்த R. S. Aggarwal.?? கடுப்பேத்தறாங்க மை லார்ட்.. :(





Shame Shame ஆ இருந்த வகுப்பு அறிவிப்பு பலகை கூட, இப்போதெல்லாம் எங்களைப்பார்த்து கலர் கலர் ராய் சிரிக்கிறது..


இது மட்டுமா?? Certifications, extra-credit, Paper Presentation, Seminar, Conference.. கூட்டுக் குடும்ப  மளிகை கடை லிஸ்ட் மாதிரி முடியவே முடியாது. 


இவற்றிற்கு நடுவில், யு டியூபில் சரவணன்-மீனாட்சி, புதிதாய் வர இருக்கும் சூர்யா-ஜோதிக காபி விளம்பரம், போத்திஸ் இன் புதிய சல்வார்கள், சிவகார்த்திகேயன் புது படம், ஆர்யா வின் அடுத்த பட முன்னோட்டம், யுவனின் புது ஆல்பம், சமீபத்திய கிசு கிசுக்கள், ப்ளாக் பதிவுகள், Facebook/G+ status update, Antivirus update, இதுக்கு நடுவில் எங்கள் அறிவை வேறு அப்டேட் பண்ணனுமாம்.. "ஆத்தா சத்தியமா நான் பாஸ் ஆகமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.."


இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சும் கிடைக்கவில்லையே என்றால்,  interview இல் வேலை என்பது 'அதிஷ்டம்' இருந்தால் மட்டும் என்பார்கள் பாருங்க.. டென்ஷன் ஏ ஆகாது.. இதை முதலிலேயே சொல்லியிருந்தால் தாயத்தோ, மோதிரமோ, தங்கப்பல்லோ, ராசிக்கல்லோ முயன்று பார்த்திருப்போம். பிரேம்ஜி பாணியில் சொல்லணும் னா, "என்ன கொடும சார் இது..??!!", சிம்பு பாணியில் சொல்லணும் னா, "என்ன வாழ்க்க டா இது.."



கடவுளே, அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், என்னை கம்ப்யூட்டர் ஆகக்கூட படைத்து விடு, கம்ப்யூட்டர் படிக்கும் மாணவனாக மட்டும் படைத்து விடாதே.. போதும் டா சாமி..



ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

ரோமியும் செல்லாவும்

தலைப்பைப் பார்த்ததும் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பேண்டஸி கதை என்று எண்ணி விட வேண்டாம். எங்கள் ஊர் செல்ல பிராணிகளின் பெயர் தான் அது. எங்கள் ஊரில் செல்லப் பிராணிகள்  என்றால் புசு புசு பொம்மறேனியன் நாய்க்குட்டியும், விரைப்பான ஜெர்மன் செபெர்ட் ம், கலர் கலர் லவ் போர்ட்ஸ் ம் அல்ல. குறும்பான துடிப்பான நாய்க்குட்டிகள், பாவமாக பாவனை செய்யும் மாடுகள், சோம்பேறித்தனமாக திரியும் எருமை கள் , தலையை ஆட்டி ஆட்டி வேடிக்கை பார்க்கும் ஆடுகள், தன் தாய் அசந்த நேரத்தில் எருமைகளை சீண்டும் ஆட்டுக்குட்டிகள், காலை நேர உற்சாகத்தில் காலை உணவை கடன் கேட்கும் பூனைகள், தன் குஞ்சுகள் புடை சூழ காலை நடை போகும் கோழிகள், கோழிகளுக்கு போட்டியாக தானியங்கள் பொறுக்கும் புறாக்கள்.. இப்படி பிராணிகளுக்கு பஞ்சமே இல்லை.

சூர்யா & சூர்யாவின் தோழன் 

எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு நிச்சயம் நாய்கள் இருக்கும். Pedigree யும் சுகுணா சிக்கனும் சாப்பிட்டு சோபா வில் தூங்குபவைகள் அல்ல, கெட்டித்தயிர் சாதமும், வார வாரம் நாட்டுக்கொழித்துண்டுகளும் சாப்பிட்டுவிட்டு கட்டுத்தறியில் சாக்குப்படுக்கை மேல் சொகுசாகவும் விசுவாசமாகவும் வளர்ந்தவைகள். முன்னெல்லாம் நாய்க்கு சாப்பிடவென்றே வருட வருடம் குயவர்களிடம் சொல்லி ஒரு மண் தட்டு வாங்கி வைக்கப்படும். இன்றைய தினங்களில் மண் சட்டிகள் பிளாஸ்டிக் குண்டாக்களாகவும் பீங்கான் குண்டாக்களாகவும் மாறிவிட்டன. எங்க வீடு நாய் சாப்பிடும் குண்டா நான் ஏழாம் வகுப்பில் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. எங்கள் வீடு செல்ல நாயின் பெயர் ரோமி. இதற்கு பெயர் வைத்த காரணமே சுவாரஸ்யமானது. என் தம்பி சூர்யா, முதல் வகுப்பு படிக்கும் போது, அவனது ஆங்கிலப் புத்தகத்தில் 'நட்டி' என்ற ஒரு நாயைப் பற்றிய பாடம் இருக்கும். அதன் நினைவாக நட்டி என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று, அதன் காதில் 3 முறை 'நட்டி' என்று சொல்லி வெற்றிகரமாக பெயர் சூட்டினோம். அதில் ஒரு சிக்கல். எங்கள் ஆத்தாவிற்கு(அப்பாவின் அம்மா) அந்தப் பெயர் வாயில் நுழையவே இல்லை. பிறகு தான் 'ரோமி' என்று பல முறை காட்டு கத்தல்  கத்தி   பெயரை மாற்றி வைத்துட்டோம்.இதுவும் நுழைய வில்லை.  அவர் மட்டும் தனியாக 'மணி' என்று  கூப்பிட்டுக்கொள்கிறார். அவரது பெண் வயிற்றுப் பேத்தி வைத்ததாம். நாங்களும் ஆரம்பத்தில் மணி என்று அழைத்துப்பார்த்து குலைத்தால் அடித்தும் மிரட்டியும்  கூட பார்த்து விட்டோம், மணி என்றாலும் குலைக்கிறான், ரோமி என்றாலும் குலைக்கிறான். எங்கள் ரோமி குளிப்பதேன்னவோ  dove ஷாம்பூ, சந்திரிகா சோப்-ல் தான். ஹீரோ தான், ஆனால் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஸீன் போடும். கழுத்தில் பெல்ட் கட்டி , போஸ்டர் கலர் ல் பொட்டு வைப்பது என்று பயங்கர அலப்பறை நடக்கும். வருடா வருடம் பிறந்த நாள்  மிட்டாயிலிருந்து, நான் ட்ரையல் பார்க்கும் புதுப்  புது ஐட்டம் வரை நிச்சயம் ரொமிக்கு பங்கு உண்டு. (கவனிக்க: ருசி பார்ப்பதில் மட்டும்) 

ரோமி


அடுத்தது  பூனை. எங்கிருந்தோ வந்து எங்கள் வீ(கூ)ட்டில் அடைக்கலமாகி இருக்கும் ஜீவன். எனக்கு பூனையும் பேயும் ஒன்றுதான். அவ்ளோ பயம். அசகாய சூரன். ஒரே நேரத்தில் 5 மயில்கள்  கொண்ட கூட்டத்தையே அசால்டாக விரட்டும் புலி. அடிக்கடி பால், தயிராய் திறமையாகத் திருடி எங்கள் சாபத்தை பெற்று வரும் திருட்டுக்கள்ளி. 

குழந்தைகள் போல் அழகாய், சமத்தாய் இருக்கும் கன்று குட்டிகள். கொள்ளை அழகு. 3 கன்று குட்டிகள் இருந்தாலும், ஒருவர் குடித்த தண்ணீர் வாளிகளில்  மற்றவர்கள் குடிக்க மாட்டனர். அவளவு சுத்தமாம். எங்கள் அத்தை வீட்டில் தான் ஒவ்வொரு கன்று குட்டி, ஆடு, மாடுகளுக்குக்கூட பெயர் வைத்திருப்பார். சிகப்பி, செல்லா, மண்டையன், கிறுக்கி, கருப்பன், வள்ளி ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ காரணம் இருக்கும்.

ரோமியே தான் 
                                 
சிறு வயதில்  விளையாட்டிற்காக நாங்களும் தோட்டத்தில் புல் பறித்து விளையாடுவதுண்டு. மிஞ்சிப்போனால் கால் சாக்கு கூட தேறாது. அதையே ஒரு கைப்பிடியாவது அனைத்து ஜீவன்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதிலேயே சந்தோசம் அடைவோம். குடும்ப அட்டையில் இல்லாதது ஒன்று தான் குறையே ஒழிய, மற்ற படி எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் உறுப்பினரே. மாட்டுப்பொங்கல் தினத்தில்  மட்டுமல்ல என்றுமே எங்கள் நாயகர்கள் இவர்களே.

நான் கண்ணாடி போட்டுக்கொண்டு போனால் முட்டும் செவலை மாட்டிற்கும், வீட்டில் முதல் ஆளாய் வரவேற்கும் ரோமிக்காகவும்  சிறப்பு சமர்ப்பணம். 


வெள்ளி, ஜனவரி 20, 2012

சொக்காய்களும், Branded சட்டைகளும்

சொக்காய்கள். நிச்சயம் பரணில் கண்டிருப்பீர்கள். நம் தாத்தாக்கள் அல்லது நம் அப்பாக்களின் கம்பீரத்தை, சாந்தத்தை பறைசாற்றியவைகள் இப்பொழுது அலமாரிகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்கு அவற்றை அணிந்து அழகு பார்க்க ஆசை ஏற்பட்டதுண்டா? நிச்சயம் யோசித்து பதில் சொல்லவேண்டியிருக்கும் . சட்டைகளுக்கும் சொக்காய்களுக்கும்  வித்தியாசங்கள் பெயரளவில் மட்டுமே. அன்று கை முட்டி வரையும்  கால் முட்டி வரையும் தொங்கிய சொக்காய்கள், இன்று 'Slim fit' ஆக மாறி விட்டன. மற்றபடி, சொக்காய்களைப் போல  இரு பக்க வளைவுகளும், குறுக்கு வெட்டுகளும் இன்று branded என்ற பெயரால் சக்கை போடு போட்டுக்கொண்டிருகின்றன. உண்மையில், பேஷன் என்பதை உற்று நோக்கினால் பழமையும் தொன்று தொட்ட பழமையும் புரியும்.

உண்மையில், இந்த தலைப்பின் உட்கருத்தே தலைமுறை இடைவெளி தான். இந்த இடைவெளி என்பதே ஒரு மாயை. வெள்ளை அல்லது  பளீர் நிறங்களில் சொக்காய் அணிந்தவர்களும், கட்டம், கொடு போட்ட சட்டையும், கண்டபடி கிறுக்கிய டி-சர்ட் அணிந்த நாமும் வேகத்தினாலேயே மாறுபடுகிறோம். இதனை வேகம் என்று சொல்வதை விட விவேகம், நிதானம் என்றே கூற வேண்டும். 

நம் முன்னோர்கள் மணிக்கு 15 மைல் வேகத்தில் பயணித்தாலும், சாலையின் இரு புறம் உள்ள மூலிகைகளை பற்றி தெரிந்து கொண்டும், உலக ஞானத்தை வளர்த்துக்கொண்டும், மக்களோடு மக்களாக பயணித்தார்கள். நாம் அப்படியா?!
மணிக்கு 144 கி.மீ., பறக்கும் இரு சக்கர வாகனங்களும், 250 கி.மீ., வேகத்தில் சீறிப்பாயும் சொகுசு கார்களும் நம் வேகத்திற்கு ஈடு குடுக்காமல் திணறித்தான் போகின்றன. சாலையோர மைல் கால்களைக்கூட காண முடியாத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். நமக்கு வழி காட்ட செயற்கை கோள்களும், உலக ஞானம் அறிய கூகுள்-ம், மக்கள் தொடர்புகளுக்கு facebook ம், கைக்குள்ளேயே  சுருண்டு கிடக்கிறது. உண்மையில், நாம் தான் அதற்குள் சுருண்டு கிடக்கிறோம்.

எங்கள் தாத்தா, இளையப்பகவுண்டர் முன்னால் நான் பல முறை வெட்கி தலை குனிந்துள்ளேன். அவரது அனுபவத்தில் முன்னால் அல்ல. அவரது அனுபவத்திற்கு முன்னால் என்றால் கூட பெருமையே பட்டிருப்பேன்.  அவரது புத்திக்கூர்மை மற்றும் நினைவாற்றல்  முன்னால் அல்லவா தினம் தினம் தோற்றுப்போய் கொண்டிருகிறேன்? இந்த வருடம் சரஸ்வதி பூஜை யின் போது அவர் என்னை சரஸ்வதி துதி பாடச்சொல்லிய போது, சுத்தமாக என் நினைவில் பாடல் இல்லை. இத்தனைக்கும், 12 வருடங்கள் என் பள்ளியில் வாரமொரு முறை பாடிய பாடல் அது. ஆனால், அதே பாடலை, தன் 7- ம் வயதில் கற்ற அதே பாடலை எங்கள் தாத்தா,  இப்போதும் பிறழாமல் பாடினார். தினமும் காலை ஒரு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என்று காதுக்குள் வழியும் இசையோடு தான் என் பொழுதுகள் கழிகின்றன. எங்கே தடுமாறுகிறோம் நாம்? 

ஏறக்குறைய 35 ஆண்டுகள் பழமையான அவரது பெண்டுலம் கடிகாரத்திற்கு தினமும் தவறாது சாவி குடுத்து  ஓடவைத்துக்கொண்டிருக்கிறார், தன் 72 வயதிலும். ஆனால், எனக்கோ இரண்டு வருடங்களாக நான் செய்து வரும் அன்றாட வேலைகளைச்  செய்யவே எனக்கு sticky notes தேவைப்படுகிறது. 

இத்தனைக்கும் அவர் படிக்கும் அத்தனை புத்தகங்களையும், நானும் படித்து பார்த்து விட்டேன், ஜோதிட நூல்களைத் தவிர. பெரிய புத்தகங்கள் எல்லாம் இல்லை, தமிழ் நாளிதல்களோடு வரும் பக்தி இணைப்புகள், செய்தித்தாள்கள், அவ்வப்போது நான் வாங்கும் கல்கி, சிறு இயற்கை வைத்திய குறிப்புகள் கொண்ட புத்தகங்கள்,  சென்ற வருடம் நான் வாங்கிக்கொடுத்த பகவத்கீதை, அவ்வளவே அவரின் கருவூலங்கள். சொல்லப்போனால், அவரை விட எனக்கு புத்தகம் படிக்க வாய்ப்புகளும் அதிகம், விரல் நுனியில் இணையமும் இருக்கிறது. என்னால் அவரைப்போல இருக்க முடியவில்லையே? எங்கே தடுமாறுகிறோம் நாம்?

உண்மையில், கூகுள்-ளிடம் நாம் தடுமாறிக்கொண்டிருகிறோம். ஒரு மணி நேரம் அவர்களிடம் இணைய உலகை ஒப்படைத்துப்பாருங்கள். கூகுள் ஏ அவர்களிடம் தடுமாறும். பாதம் தொட்டு வணங்குவோம், நம் வீட்டுப் பரணில் தூங்கும் சொக்காய்களின் சொந்தக்காரர்களை...!!

சனி, ஜனவரி 07, 2012

உங்களுக்குள்ளும் ஓர் குழந்தை

உலகில் ரசிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. இயற்கையும் இயற்கையின் ஆச்சர்யங்களும், வாழ்க்கையும் வாழ்க்கையின் சுவாரசியங்களும், மனிதனும் மனிதனின் பரிணாமங்களும்.. மனிதர்களின் பரிணாமங்கள் விநோதமானவை. பூக்களின் மெல்லிய ஸ்பரிசத்துடனும், வெண் பஞ்சு மேகங்களின் எடையிலும் ஜீவித்த நாம், காலச்சக்கரத்தில் சுழன்று, வாழ்க்கையால் உரமேற்றப்பட்டு, அனுபவங்களால் பலப்பட்டு, தேடல்களை லட்சியமாக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு பரிணாமங்களிலும் நமது தனிப்பட்ட அடையாளங்களையும் லட்சியங்களையும் தொலைத்துவிட்டு/ புதைத்துவிட்டு/ பறிகொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறோம். சின்னச் சின்ன சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள், அந்தந்த பருவத்திற்கே உரிய துள்ளல்கள், ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள்.. கொஞ்சம் நினைவு கூர்ந்து பாருங்களேன், சம்பளம், வேலை நேரம், சாலை நெரிசல், வாடிக்கையாளர்கள், வங்கிக்கணக்கு, வருமான வரி பரபரப்புகளிலிருந்து விலகி செல்ல செல்ல நம் உலகம், நமக்கே நமக்கான உலகம் விரியும்.




ஒரு காலத்தில் ஐந்து ருபாய் கோன் ஐஸ் வாங்குவதே உச்சகட்ட லட்சியமாக இருக்கும், கோவிலில் போட்ட ஒரு ரூபாயில் பெருமிதம் மிதக்கும், பிறந்த நாளின் 25 பைசா மிட்டாயிலும் விண்ணளவு சந்தோசம் இருக்கும், பாகு மிட்டாய்க்கு இனாமாக கிடைக்கும் மோதிரத்தில் உலகையே வென்று விட்ட திருப்தி ஏற்படும். அந்த சந்தோஷங்கள் இப்போது நிச்சயம் கிடைக்காது. ஏனெனில், அன்று நம் பாதைகளில் பட்டாம்பூச்சிகளும், பலப்பங்களும், பெட்டிக்கடைகளும், சைக்கிள்களுமே  அதிகம். இன்று அப்படி இல்லை. நம் பாதைகள் முழுவதும் பளபளக்கும் கட்டிடங்களும், குளிரூட்டி ஏற்றப்பட்ட கண்ணாடிகளும் தான்.

வாழ்க்கையில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை. இதன் மூலம் புதைந்து போன நம் உலகை மீட்கலாம். பால்ய வயதில் நமக்கென்றே ஒரு சுட்டித்தனத்தை வைத்திருப்போம். விரல் சூப்புவது, சோப்பு நுரையில் விளையாடுவது, பென்சிலால் கிறுக்குவது, குச்சி மிட்டாயை எச்சில் வழிய சாப்பிடுவது, சாப்பிடும் பொழுது கை முழுக்க அப்பிக்கொண்டு விளையாடுவது, சிறு முறுக்குகளை விரலில் மாட்டிக்கொண்டு கடித்து சாபிடுவது, வேண்டுமென்றே காலணிகளை மாற்றிப்போட்டுக்கொண்டு ஓடுவது, ரொட்டிகளை பாலில் உடைத்துபோட்டு சிறு கரண்டியை கொண்டு ரசித்து ரசித்து சாப்பிடுவது, தண்ணீரை குழாய் போட்டு உறிஞ்சி உறிஞ்சி குடிப்பது, பாலில் வரும் வெள்ளை நுரைக்ககவே ஆற்றி ஆற்றி குடிப்பது.. ஏதேனும் குழந்தையிடம் இதைக்கண்டாலே நம் உள்ளம் ஆர்ப்பரிக்கும். அந்த ஒரு நொடியில் குழந்தையாகவே மாறி விடத்தோணும். மாறுவோம், குழந்தையாகவே மாறிப் பார்ப்போமா?? இது நம் உலகம், நம் வாழ்வு, நம் சந்தோசம். காலையில் காபி யின் நுரையை அனுபவிப்பது முதல் இரவு டிவி ரிமோட்டின் சிகப்பு பட்டனை அழுத்துவது வரை, நம் ராஜ்யமே..



கொஞ்சம் உங்கள் அடி மனசின் ஆசைகளை வெளி கொண்டு வாருங்களேன்.. சின்ன வயதில் 1, 2, 3, A, B, C அன்று வித விதமாக சுட்டு உண்ட தோசையை இப்போது உண்ண ஆவல் பிறக்கவில்லையா, குட்டியூண்டு தோசையை ஒரே வாயில் விழுங்கிய நாட்கள் நினைவிற்கு வர வில்லையா?, புள்ளி வைத்து வரைந்து பழகிய விளக்குகள், சங்குகள், கட்டம் போட்டு எழுதி பழகிய எழுத்துக்கள், எப்பொழுதும் வரையத்தூண்டும் ஓட்டு வீடு, பார்த்து பார்த்து வரையும் புகை போக்கி, கதவின் கைப்பிடி, ஆண்டனா, 2 புள்ளி  2 வரிசை கோலம், இரண்டு மலைகளின் நடுவே உதிக்கும் சூரியன், அதனடியில் ஓடும் நதி, நதியின் நடுவே பரிசல் போடும் படகோட்டி.. இதழோரம் சிரிப்பையும், மனதில் மகிழ்ச்சியையும் பரவச்செய்யும்.


அலுவலக இறுக்கத்தை குறைக்கவும், நம்மை நாமே ரசிக்கவும், வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்கவும், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்  கொண்டு வாருங்கள். 4 வரிக்கொடுகளில் cursive writing எழுதுவதில் கிடைக்கும் தளர்வு, ஓட்டு வீடு வரைவதில் வரும் கற்பனை எண்ணங்கள், நுரை பொங்கும் காபி'யில் கிடைக்கும் ருசி, சோப்பு நுரையில் வரும் மொட்டுகளை ரசிப்பதில் வரும் குதூகலம், விரல் சூப்புவதில் கிடைக்கும் சுகம், கப்பல் செய்து விடுவதில் கிடைக்கும் துள்ளல், நூடில்ஸ் ஐ உயரத் தூக்கி சாப்பிடுவது, உறிஞ்சி டம்ப்ளரில் தண்ணீர் குடிப்பது, ஒரு வட்டத்திற்கு கண், காத்து, கொஞ்சு, வால் எல்லாம் வரைந்து பூனையாக கற்பனை செய்து பார்ப்பது, பேப்பர்'இல் புத்தகத்தில் வரும் படத்திற்கு மீசை, பொட்டு, வளையல் அணிவித்து ரசிப்பது... இன்னும் எத்தனை எத்தனையோ... அனுபவிப்போம், நம் புது உலகத்தை, ஒரு குழந்தையின் ஆர்பரிப்புடனும்  துள்ளலுடனும்.