ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

ரோமியும் செல்லாவும்

தலைப்பைப் பார்த்ததும் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பேண்டஸி கதை என்று எண்ணி விட வேண்டாம். எங்கள் ஊர் செல்ல பிராணிகளின் பெயர் தான் அது. எங்கள் ஊரில் செல்லப் பிராணிகள்  என்றால் புசு புசு பொம்மறேனியன் நாய்க்குட்டியும், விரைப்பான ஜெர்மன் செபெர்ட் ம், கலர் கலர் லவ் போர்ட்ஸ் ம் அல்ல. குறும்பான துடிப்பான நாய்க்குட்டிகள், பாவமாக பாவனை செய்யும் மாடுகள், சோம்பேறித்தனமாக திரியும் எருமை கள் , தலையை ஆட்டி ஆட்டி வேடிக்கை பார்க்கும் ஆடுகள், தன் தாய் அசந்த நேரத்தில் எருமைகளை சீண்டும் ஆட்டுக்குட்டிகள், காலை நேர உற்சாகத்தில் காலை உணவை கடன் கேட்கும் பூனைகள், தன் குஞ்சுகள் புடை சூழ காலை நடை போகும் கோழிகள், கோழிகளுக்கு போட்டியாக தானியங்கள் பொறுக்கும் புறாக்கள்.. இப்படி பிராணிகளுக்கு பஞ்சமே இல்லை.

சூர்யா & சூர்யாவின் தோழன் 

எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு நிச்சயம் நாய்கள் இருக்கும். Pedigree யும் சுகுணா சிக்கனும் சாப்பிட்டு சோபா வில் தூங்குபவைகள் அல்ல, கெட்டித்தயிர் சாதமும், வார வாரம் நாட்டுக்கொழித்துண்டுகளும் சாப்பிட்டுவிட்டு கட்டுத்தறியில் சாக்குப்படுக்கை மேல் சொகுசாகவும் விசுவாசமாகவும் வளர்ந்தவைகள். முன்னெல்லாம் நாய்க்கு சாப்பிடவென்றே வருட வருடம் குயவர்களிடம் சொல்லி ஒரு மண் தட்டு வாங்கி வைக்கப்படும். இன்றைய தினங்களில் மண் சட்டிகள் பிளாஸ்டிக் குண்டாக்களாகவும் பீங்கான் குண்டாக்களாகவும் மாறிவிட்டன. எங்க வீடு நாய் சாப்பிடும் குண்டா நான் ஏழாம் வகுப்பில் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. எங்கள் வீடு செல்ல நாயின் பெயர் ரோமி. இதற்கு பெயர் வைத்த காரணமே சுவாரஸ்யமானது. என் தம்பி சூர்யா, முதல் வகுப்பு படிக்கும் போது, அவனது ஆங்கிலப் புத்தகத்தில் 'நட்டி' என்ற ஒரு நாயைப் பற்றிய பாடம் இருக்கும். அதன் நினைவாக நட்டி என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று, அதன் காதில் 3 முறை 'நட்டி' என்று சொல்லி வெற்றிகரமாக பெயர் சூட்டினோம். அதில் ஒரு சிக்கல். எங்கள் ஆத்தாவிற்கு(அப்பாவின் அம்மா) அந்தப் பெயர் வாயில் நுழையவே இல்லை. பிறகு தான் 'ரோமி' என்று பல முறை காட்டு கத்தல்  கத்தி   பெயரை மாற்றி வைத்துட்டோம்.இதுவும் நுழைய வில்லை.  அவர் மட்டும் தனியாக 'மணி' என்று  கூப்பிட்டுக்கொள்கிறார். அவரது பெண் வயிற்றுப் பேத்தி வைத்ததாம். நாங்களும் ஆரம்பத்தில் மணி என்று அழைத்துப்பார்த்து குலைத்தால் அடித்தும் மிரட்டியும்  கூட பார்த்து விட்டோம், மணி என்றாலும் குலைக்கிறான், ரோமி என்றாலும் குலைக்கிறான். எங்கள் ரோமி குளிப்பதேன்னவோ  dove ஷாம்பூ, சந்திரிகா சோப்-ல் தான். ஹீரோ தான், ஆனால் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஸீன் போடும். கழுத்தில் பெல்ட் கட்டி , போஸ்டர் கலர் ல் பொட்டு வைப்பது என்று பயங்கர அலப்பறை நடக்கும். வருடா வருடம் பிறந்த நாள்  மிட்டாயிலிருந்து, நான் ட்ரையல் பார்க்கும் புதுப்  புது ஐட்டம் வரை நிச்சயம் ரொமிக்கு பங்கு உண்டு. (கவனிக்க: ருசி பார்ப்பதில் மட்டும்) 

ரோமி


அடுத்தது  பூனை. எங்கிருந்தோ வந்து எங்கள் வீ(கூ)ட்டில் அடைக்கலமாகி இருக்கும் ஜீவன். எனக்கு பூனையும் பேயும் ஒன்றுதான். அவ்ளோ பயம். அசகாய சூரன். ஒரே நேரத்தில் 5 மயில்கள்  கொண்ட கூட்டத்தையே அசால்டாக விரட்டும் புலி. அடிக்கடி பால், தயிராய் திறமையாகத் திருடி எங்கள் சாபத்தை பெற்று வரும் திருட்டுக்கள்ளி. 

குழந்தைகள் போல் அழகாய், சமத்தாய் இருக்கும் கன்று குட்டிகள். கொள்ளை அழகு. 3 கன்று குட்டிகள் இருந்தாலும், ஒருவர் குடித்த தண்ணீர் வாளிகளில்  மற்றவர்கள் குடிக்க மாட்டனர். அவளவு சுத்தமாம். எங்கள் அத்தை வீட்டில் தான் ஒவ்வொரு கன்று குட்டி, ஆடு, மாடுகளுக்குக்கூட பெயர் வைத்திருப்பார். சிகப்பி, செல்லா, மண்டையன், கிறுக்கி, கருப்பன், வள்ளி ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ காரணம் இருக்கும்.

ரோமியே தான் 
                                 
சிறு வயதில்  விளையாட்டிற்காக நாங்களும் தோட்டத்தில் புல் பறித்து விளையாடுவதுண்டு. மிஞ்சிப்போனால் கால் சாக்கு கூட தேறாது. அதையே ஒரு கைப்பிடியாவது அனைத்து ஜீவன்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதிலேயே சந்தோசம் அடைவோம். குடும்ப அட்டையில் இல்லாதது ஒன்று தான் குறையே ஒழிய, மற்ற படி எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் உறுப்பினரே. மாட்டுப்பொங்கல் தினத்தில்  மட்டுமல்ல என்றுமே எங்கள் நாயகர்கள் இவர்களே.

நான் கண்ணாடி போட்டுக்கொண்டு போனால் முட்டும் செவலை மாட்டிற்கும், வீட்டில் முதல் ஆளாய் வரவேற்கும் ரோமிக்காகவும்  சிறப்பு சமர்ப்பணம். 


7 கருத்துகள்:

  1. இன்னிக்குத்தான் உங்கபக்கம் வந்தேன் நல்லா இருக்கே அனுபவங்கள் நாங்களும் ஒரு நாய்க்குட்டி வளர்த்தோம். ப்ளாக்கின்னு பேரு அதுபத்தி தொடர்ந்து 5 பதிவுகள் எழுதி இருக்கேன் செல்லப்பிராணி என்னும் தலைப்பில் படிச்சு பாருங்க.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றிங்க.. நிச்சயம் படிக்கறேன்..

    பதிலளிநீக்கு
  3. \Pedigree யும் சுகுணா சிக்கனும் சாப்பிட்டு சோபா வில் தூங்குபவைகள் அல்ல, கெட்டித்தயிர் சாதமும், வார வாரம் நாட்டுக்கொழித்துண்டுகளும் சாப்பிட்டுவிட்டு கட்டுத்தறியில் சாக்குப்படுக்கை மேல் சொகுசாகவும் விசுவாசமாகவும் வளர்ந்தவைகள்./ impressive.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் வீட்டில் ஒரு செல்ல பிராணி இல்லை என்று ஏங்க வைத்து விட்டாய்!

    பதிலளிநீக்கு