சிறப்பான வாழ்விற்கு மனிதனின் வயிறும் மனமும் நிறைய வேண்டும்.வயிறு நிறையும் படி உலகிற்கே படியளக்கும் பெருமை விவசாயிக்கே உண்டு. மன மகிழ்ந்து கொண்டாட வைக்கும் சிறப்பு கலையையே சார்ந்தது.
ஆயினும், ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டின் நோக்கமும் ஒன்றே, நிறைவே. ஊன்றி கவனித்தோமானால் விவசாயியும் கலைஞன் தான்; கலைஞனும் விவசாயி தான். இங்கு உயிரை வளர்க்க கரு, அங்கு கதையை வளர்க்க கரு.
![]() |
விவசாயி தன் நிலத்தை உழுது, பதமிட்டு மண்ணின் குணத்திற்கேற்ப பயிரை விதைக்கிறான். சமயத்தில் நீர் பாய்ச்சி, உரமிட்டு, களைகளை கலைத்து, கிட்டத்தட்ட தன் குழந்தை போல, அதன் தேவைக்கேற்ப பயிரை செப்பனிடுகிறான். இவை யாவும் முடிந்த வரை தன் கையாலும், முடியாத பட்சத்தில் தன் மேற்பார்வையிலாலும் பக்குவப்படுத்துகிறான். இதில் ஒட்டுண்ணிகளும், நுண் உயிர்களும் முக்கியப்பங்கு வகிக்கிறது. காலத்திற்கேற்ற ஊடு பயிர்கள், மழைக்கேற்ற பாசன முறைகள், பயிர்களுக்கேற்ற நுண் ஊட்டங்கள் என்று கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டியது, விவசாயம். பயிர் பருவத்தில் அறுவடை செய்து மக்களிடம் உணவு பொருட்களை சேர்க்க வேண்டிய உன்னதமான பொறுப்பை விவசாயிடம் இயற்கை ஒப்புவித்துள்ளது.
கலை என்பது ஆதிதமிழர் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் என்று பொருள் கொள்ளப்பட்டது. கலையின் மொத்த வடிவே நாடகங்கள் ஆகும். பல பரிணாம வளர்ச்சிக்குப் பின், கால மாறுதலுக்கு உட்பட்டு திரைப்படங்கள் ஆயின.
கலைக்கு முக்கியமானது கதை, அது கலையின் கருவாக கொள்ளப்பட்டது. விவசாயிக்கு விதை போல. இங்கு, மக்களின் மனம், சமூக நிகழ்வுகள், அதன் விளைவுகளை அலசி ஆராய்ந்து, கதை கோணம் தீர்மானிக்கபடுகிறது. ஒரே ஒரு மையப்புள்ளியில் தொடங்கி, செப்பனிட்டு, இடை இடையே பாடல்கள், சண்டை காட்சிகள், நகைச்சுவைகள் என கதையின் வளர்ச்சிக்கேற்ப திரைப்படமாகிய நாடகம் வளரும். இதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கிட்ட பெருமைகள் இணை இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்றோரையே சாரும். பயிருக்கு நுண் ஊட்டங்கள் போல, திரைப்படத்தை செதுக்குபவர்கள் இவர்களே. விவசாயிக்கு தன் பயிர் குழந்தை போல, இயக்குனருக்கும் அவர் குழுவிற்கும், அவர்களது திரைப்படம் குழந்தையே . பாத்து பார்த்து செதுக்கி, சீராட்டி, ரசித்து, செப்பனிட்டு, ஏறத்தாழ குழந்தைக்கும் - தாய்க்கும் இடையே உள்ள பந்தம் இது.
இரண்டின் லாப நஷ்டங்களும் மக்களாலேயே தீர்மானிக்கபடுகின்றன. விவசாயிக்கு சூரியனும் மழையும் கடவுளானால், கலைஞனுக்கு ஒளியும், ஒலியும் கடவுள்கள். விவசாயி சந்தைபடுத்துவது சந்தையில், கலைஞன் சந்தை படுத்துவது திரையரங்குகளில். விவசாயிக்கு வருடம் ஒரு முறை தை மாதம் என்றால், கலைஞனுக்கு, அவன் படைப்புகள் வெளியாகும் மாதங்களெல்லாம் தை மாதங்களே.
அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதில் இருவருமே தன்னிகரற்ற முதலாளிகளே . காலமாற்றத்திற்கேற்ப இரு துறைகளிலும் மாசு நுழைந்து விட்டது. விவசாயத்தில் இரசாயன உர வடிவில், திரைப்படங்களில் வன்முறை, ஆபாசங்கள் வடிவில். இவைகள் கூட மக்கள் ரசனை என்ற பெயரில் பூசி மெலுக்கப்படுகின்றன. மாற்றம் தேவை. ஆனால், அந்த மாற்றத்தை துணிந்து செயல் படுத்துபவர்கள் யார் என்பது , சுழலில் சிக்கிக்கொண்ட படகின் நிலையே.