வெள்ளி, நவம்பர் 04, 2011

என் விடுதி சாளரமும் மழைத்துளியும்..

அடை மழை வெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறது. சாளரத்தின் வழியே ஏக்கத்துடன் நோக்குகிறேன். நான் இருப்பதோ மூன்றாம் மாடியில். மழை சாரலுக்காக ஏங்கி கையை விட்டு எம்பிப்பார்த்தும் முடியவில்லை. பச்சை பசேல்  செயற்கை புல்வெளி, இரும்பு வேலியில் படர்ந்திருந்த செடியின் குட்டியூண்டு பிங்க் நிற செம்பருத்தி. தொலைவில் பரந்து விரிந்த கால்பந்து மைதானம். தேங்கி நிற்கும் மழை நீர். இதற்கு மேல் எனக்கு வர்ணனை வர வில்லை.

கிராமத்து மழை நாட்கள் எப்படி இருக்கும் தெரியுமா? சூரிய வெளிச்சம்  மங்க ஆரம்பித்த உடனே தாத்தா, பாட்டிகள், கண்ணுக்கு கையால்  குடை பிடித்து வானத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, மழை நிலவரம் கூறுவார். 'மேகம் கலந்ஜிருக்கு, தெக்கால பெய்யுது, வானம் கருக்குது, வெரசா வேலைய முடிங்க' என்று ஏகப்பட்ட வர்ணனைகள், கட்டளைகள். சன் டிவி ரமணன் வாக்கு கூட பொய்க்கும் ங்க, எங்க தாத்தா, பாட்டி வாக்கு நிச்சயம் பொய்க்காது. விறகு எடுத்து வைக்கறது, மாடுகளை தண்ணீர் காட்டி கட்டுவது, ஆடுகளை பட்டிக்குள் அடைப்பது என்று ஒரு பக்கம், ரோஜா செடி மொட்டுக்களை பறித்து வைப்பது ஒரு பக்கம், டிவி, பிரிட்ஜ் வயர் பிடுங்கி விடுவது ஒரு பக்கம், சிம்னி விளக்கு தேடுவது, கப்பல் விட காகிதம் தேடுவது.. இப்படி எத்தனை  களேபரங்கள், எத்தனை பரபரப்புகள்..


மழை தூரலுக்காக தலையில் சாக்கு போர்த்திக்கொண்டு செல்லும் ஒரு கூட்டம், மழை  க்கு ஒதுங்கும் அந்நிய விருந்தாளிகள், அவர்களின் ஏதேனும் ஒரு வழி சொந்தத்தை கண்டுபிடித்து உரிமையோடு பேசும் பாட்டி, 'இந்த பூனையை காணோம், எங்கே குளிருக்கு நடுங்கிக்கொண்டிருகிறதோ' என்று கரிசனப்படும் தாத்தா, கப்பல் விடலாம் அன்று நச்சரிக்கும் தம்பி, சளி பிடிச்சுக்கும் என்று அதட்டும் அப்பா, என்ன வேணும் பஜ்ஜியா, போண்டாவா என்று குறிப்பறிந்து கேட்கும் அம்மா..

வாளியில் மழை நீரைப்பிடித்து முகம் கழுவிய அந்த 'சில்' ஸ்பரிசம், சிம்னி விளக்கில் குளிர் காய்ந்த கதகதப்பு, ஆடு மாடுகளின் வித்யாசமான கூப்பாடுகள், இப்படியே மழை பேஞ்சா ஸ்கூல் லீவ் விட்றுவாங்களோ, தும்மல் வருதே நாளைக்கு காய்ச்சல் வந்துருமோ என்ற சின்ன சின்ன சந்தோஷமான  எதிர்பார்ப்புகள்...



இப்போது இதை எல்லாம்  எங்கோ தொலைத்து விட்டேனா??

நடு இரவில் துண்டிக்கப்படும் மின்சாரம், அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு நிற்கும் குழந்தை போல ஆடு மாடுகள், நிறம் மாறிய பண்ணை தண்ணீர்,  சில்லிட்டு  வரும் குழாய் நீர், தலை துவட்டாமல் நிற்கும் மரங்கள், உரல் நீரை வடித்து மழை அளவைக் கூறும் பாட்டி, இன்றைய வயல் வேலை கெட்டு விட்டது என்று வருந்தும் தாத்தா.. மழையால் தங்கள் வயல் வேலை கெட்டு விட்டது என்று குற்றம் சொல்லும்போது கூட, 'இன்றைய தினம் நமக்கு ஓய்வு' என்று அவர்களின் மனமும், உடலும் நிச்சயம் ஆசுவாசப்பட்டுக்கொள்ளும். 

காலையில் பெர்மிசன் போட்டு விட்டு வரும் சூரியன், தாமதமாக வரும் பள்ளி பேருந்து, வருமா வராதா  என்ற நிலையில் எங்க ஊர் மினி பஸ், மேலும் உற்சாகமாய் வரும் பண்பலை வர்ணனைகள்... அடுத்த நாள் சோம்பல் கூட சுகம் தானே??



இன்று, மழை நாளில் சூடாக பஜ்ஜி சாப்பிடலாம் என்று Cafeteria போனால் தீர்ந்து போயிருக்கும். இன்னும் பல நாட்கள் மழை பெய்ததா இல்லை செடிக்கு தண்ணீர்  விடப்படிருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கும். பின் கைபந்து மைதானம் உண்மையை உரைக்கும். 

சதா சாளரங்களை அடைத்துக்கொண்டு Head-set மாட்டிக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கும் பிடித்து விட்டதா? புரியாமல் எதிர்பார்கிறேன் அடுத்த மழை நாளுக்காக.. 

5 கருத்துகள்:

  1. நேற்றைய நினைவுகளை புரட்டி பார்க்கும் விதம் அழகு அருமை ..
    இன்றைக்கு நினைத்து பார்க்கும் அளவுக்கு .. நாளை வரலாற்றில் படிக்க கூடிய அபாயம் கிராம நினைவுகள் ..

    பதிலளிநீக்கு
  2. என்னை மேலும் எழுத ஊக்குவிப்பதே உங்கள் போன்றோரின் கருத்துரைகள் தான்.. தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.. ஏதோ மனதில் தோன்றுவதை கிறுக்கல்களாக சமர்பிக்கிறேன்.. தொடருபவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள்!
    கடந்து போன சந்தோஷமான
    சமயங்களை இதயம் என்றும்
    மறந்துவிடுவதில்லை!

    பதிலளிநீக்கு