ஞாயிறு, நவம்பர் 20, 2011

நட்பின் பரிணாமங்கள்

காதலுக்குப் பிறகு கவிதைகளும், பாடல்களும், திரைப்படங்களும் ஏன் விளம்பரங்கள் கூட கொண்டாடும் ஒரு அழகான கரு நட்பு.

'பகிர்தல்' என்ற வார்த்தையின் உட்பொருளே நட்பில் தான் புரிகிறது. ஐம்பது காசு மிட்டயைக்கூட ஐந்து பங்காக போடும் விசித்திரம் நட்பில் மட்டும் தான் இருக்கும். 

நட்பின் ஆரம்பம் 2 வயதில் நாய் குட்டியுடனோ, பூனைக்குட்டியுடனோ அல்லது பொம்மையுடனோ ஆரம்பிக்கும். சிலேட் பென்சில் வாங்குவதில்/தருவதில் தொடங்குகிறது ஒரு ஆத்மார்த்தமான நட்புடனான நம் பயணம். பிறகு அந்த சிலேட் பென்சில் பரிணாம வளர்ச்சி பெற்று மிட்டாய், அழி ரப்பர் பகிர்தலில் தொடங்கி சி(ப)ல சமயம் வாழ்க்கை பகிர்தலுக்கும் வழி வகுக்கும். 


ஆரம்பங்களில் நட்பு புதிய அறிமுகங்களாகவும், விளையாட்டுத் துணைகளாகவும் அடையாளங் கொள்ளப்பட்டது. மூன்றாம் வகுப்பில் வாய் மொழிப் பாடல்களும், ஏழாம் வகுப்பில் பிசிராந்தையார், ஒளவையார்-அதியமான் நட்புகள் நட்பின் சிறப்பை நமக்கு உணர்த்தும் கருவியாக்கப்பட்டது.

அதற்குப்பிறகு, நட்பு 'பகிர்தல்' பரிணாமத்திற்கு வருகிறது. படிப்பு சார்ந்த, உணவு சார்ந்த பகிர்வுகள் பரவலாக நட்பைத் தீர்மானிக்கும் காலம். பின், கருத்துகள் (கிண்டல்களும் தான்) கேட்பதற்கும் , சொல்வதற்கும் உற்ற துணையோ குழுவோ தேவைப்பட்டது. இங்கு தான் நட்பு அதன் முதல் பரிணாமத்தை  அடைகிறது. "பகிர்தல்"

ஆரம்பத்தில் மகிழ்ச்சி, கிண்டல்,  சில சமயம் சோகத்தைக் கூட பகிர்ந்து கொள்ளும் நம் நட்பு வட்டம், சில சமயங்களில் நம் குழப்பத்தையோ பயத்தையோ சரி வரத் தெளித்து வைக்கும் கலையை கையாள முடியாமல் திணறும். அப்பொழுது தான், நமக்கே நமக்கான ஒரு கை நம் குழப்பங்களை தாங்கிடவும், வழிகாட்டவும் தென்படுகிறது. இப்பொழுது  நட்பு அதன் இரண்டாம் பரிணாமத்திற்கு வந்து விட்டது. "ஆத்மார்த்தமான பகிர்வு"

பெரும்பாலும் பலரது நட்பு இந்த பரிணாமத்தை தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தாய்/தந்தையிடம் பகிர முடியாத, நட்பு வட்டத்தில் கூட கிடைக்காத மன நிம்மதியை  நிச்சயம் அந்த நட்பு கொடுக்கும்.

நட்பின் மூன்றாம் பரிணாமம் சுவாரஸ்ய மானது. "Just-A-minute நட்பு"
முன்பெல்லாம் ரயில் சிநேகிதம், கடித வழி சிநேகிதங்கள் நட்பின் ஆழத்தை புரிய வைத்தன. கடிதங்கள் இ-மெயில் களாகின. (காதல் கோட்டை => காதல் தேசம்). இப்பொழுது இணையம் கைக்குள் சுருங்கிய பிறகு வரிகளின் எண்ணிக்கை குறைந்து, வார்த்தைகள் சுருங்கிப்போயின. அனால், நட்பு வட்டம் மட்டும் நீள்கிறது. 


"The Social Networking Era". இது கூட நன்றாகத்தான் உள்ளது. ஒரே ஒரு சொடுக்கு நம் நட்பினை தீர்மானித்து விடுகிறது. பேஸ்புக், டிவிட்டர் வரிசையில் வலைபூத்தளங்களுக்கு என் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். செமஸ்டர் பரிச்சை நடு இரவில் கூட என் கருத்துகளை பகிர்வதற்கு ஒரு வட்டம் இருக்கிறது என்ற நட்புணர்வு என்னை சிறகடிக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் கூட பகிர்தலில் தான் சக்கை போடு போட்டுகொண்டிருக்கின்றன. எனவே, உங்களது அன்றாடத் தேடல்களில் மத்தியில், சந்தோஷங்களையும், துக்கங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தினம் தினம் காலைப்பனி முதல் இரவு நேரத்து வண்டுகளின் ரீங்காரம் வரை ரசித்துப்பகிர்வதர்க்கு  பல விஷயங்கள் உள்ளன. பகிருங்கள், பேஸ்புக் இல் அல்ல, உங்கள் நட்பிடம்.                                                 4 கருத்துகள்: