சனி, அக்டோபர் 29, 2011

விளம்பரங்களில் வாழ்க்கை

ஒரு நகரம் வண்ணமயமாக செழிப்பாக இருப்பது தான் அந்த நகரத்தின் அழகே. எங்கள் ஈரோடு மாநகரில் அந்த செழிப்பும் வண்ணமும் இருக்கிறது என்று பெருமை கொள்கிறேன்.

       'எங்கு நோக்கினும் சக்தியடா' என்பது போல், எங்கு நோக்கினும் விளம்பரத்தட்டிகள். புதிய வரவு சீரியல் முதல் பள்ளிக்கூடம் வரை, ப்ளெக்ஸ் தட்டிகளில் தங்கள் அருமை பெருமைகளை விவரிக்கின்றன.

இப்போதெல்லாம் பேருந்துப் பயணங்களில் புத்தகம் படிப்பதை விடவும் விளம்பரங்களை வேடிக்கை பார்ப்பது என் விருப்பமான பொழுது போக்காகிவிட்டது.

    உங்கள் விருப்பமான நடிகர் அறிமுகப்படுத்தும் செல்போன், வீரர்களின் பைக் சாகசங்கள், விளையாட்டு வீரர்களின் கையெழுத்து சிபாரிசோடு வரும் ஊட்டச்சத்து பானங்கள், நடிகைகள் கொண்டாடும் பட்டுபுடவைகள். இவை அத்தனையும் தாண்டி விளம்பரங்களில் ரசிப்பதற்கு ஓர் விஷயம் உள்ளது. 'குழந்தைகள்'.

முன்பு இருந்ததை விட, இப்போதெல்லாம் விளம்பர உத்திகள் மாறி விட்டன. இட்லி பொடி முதல் TMT கம்பிகள் வரை குழந்தைகள் ராஜ்ஜியமே. 'கறை நல்லது தானே?' என்ற கேள்விகளிலும், 'நான் ரொம்ப பிஸி' என்ற பெரிய மனுஷ தனத்திலும், 'மெசினிற்கு கை ஒட்ட வைக்கும்' சாமர்த்தியத்திலும், 'அப்படியே சாப்பிடுவேன்' என்ற சுட்டித்தனத்திலும், உலகின் அத்தனை அழகும் குழந்தைகளிடமே என்று பொறாமை கொள்ள வைக்கின்றன. அதுவும் CBSE பள்ளி விளம்பரங்களில் குட்டியூண்டு டாக்டர், எஞ்சினீயர் எல்லாம் கொள்ளை அழகு.


ஆனால், இந்த விளம்பரங்களில் தான் எத்தனை முரண்பாடுகள்? 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' விளம்பர தட்டிக்கு அருகில் தான் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளின் விளம்பரங்கள்,கோவில் கும்பாபிஷேக அறிவிப்பு போஸ்டர் களும் ஆபாச பட போஸ்டர் களும் ஒரே சுவற்றில் தான் ஒட்டப்படுகின்றன. 1 ரூபாய் அரிசி விற்கும் அதே தெருவில் தான் organic அரிசி கிலோ 45 என்று விற்பனை ஆகிறது. 

'விபத்தா? உடனடி சேவை' என்ற அரிமா சங்க விளம்பரம் துரு பிடித்த இரும்பு போர்டிலும், மித மிஞ்சிய திறன் கொண்ட புதிய அறிமுக பைக் கின் அறிவிப்பு  பிரமாண்டமாயும் இருக்கின்றன.

நீங்களே கவனித்து பாருங்களேன். காச நோய்க்கோ, தொழு நோய்கோ இலவச சிகிச்சை என்று ஆரம்பிக்கும் விளம்பர அறிவிப்புகள், ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு, 999 ரூபாய்க்கு செல்போன், 777 ரூபாய்க்கு branded சட்டை, 555 ரூபாய்க்கு பட்டுபுடவை, 111 ரூபாய்க்கு முழு டாக்டைம் அன்று பல கதைகள் சொல்லும்.'ஐ லவ் யு ரஸ்னா' வில் தொடங்கி, 'ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்' என்று சக்கை போடு போடுபவை சந்தேகமே இன்றி தொலைகாட்சி விளம்பரங்கள் தான். ஒரு 15 நிமிட இடைவெளியில் நமது பல வருட கனவுகளை ஆசை காட்டி விட்டு செல்லும். 1.5 லட்சங்களில் ஆரம்பிக்கும் சொகுசு கார்கள், 3000 களில் ஆரம்பிக்கும் தொடு திரை கை பேசிகள், 19,999 களில் வைர ஆபரணங்கள், மாடுலார் சமையல் அறைகள், சீறிப்பாயும் பைக்குகள், சில லட்சங்களில் காலி மனைகள், பல லட்சங்களில் குடியிருப்புகள், வெளிநாட்டு முதலீடுகள், படிப்புகள்.... இப்படி எண்ணற்றவை. இவை ஒவ்வொன்றும் சராசரி இந்திய குடி மகனின் கனவுகள்.

தொலைகாட்சி விளம்பரங்களை விட வானொலி விளம்பரங்கள் சுவாரசியமானவை.பெரும்பாலும் இவை ஏதேனும் திரைப்பட பாடல் மெட்டுக்களாக இருக்கும். அந்த இசை அமைப்பாளரே வந்து மெட்டு போட்டது போல இருக்கும். மிக சாதாரணமான கணவன்,  மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள், இளசுகளின் பகிர்வுகள், இப்படி எதோ ஒன்றை வைத்தே அந்தத் தயாரிப்பை விளம்பரப்படுத்தி விடுவார்கள். 

'வாங்கிடீங்களா வாங்கிடீங்களா மான் மார்க் சீயக்காய் தூள்'

'குஷியான சமையலுக்கு ருசியான சங்கு மார்க் இட்லி பொடி'

'வகை வகையா சாபிடலாம் வயிறு நிறைய சாப்பிடலாம்' 

இதெல்லாம் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்கும் வாசகங்கள்.

சில சமயம் இந்த விளம்பரங்கள் கூட நம்மை கடுப்பேற்றும். கொஞ்சம் ஊன்றி கவனியுங்களேன், நிச்சயம் ஒவ்வொரு விளம்பரங்களிலும் ஒரு சின்ன ஏக்கம், குட்டியூண்டு எதிர்பார்ப்பு, பளிச் கற்பனை, நிறைய சந்தோசம், பொங்கும் உற்சாகம் என நிச்சயம் நிரம்பி இருக்கும்.2 கருத்துகள்:

  1. அந்த ஜூனியர் bournvitaa விளம்பரம் எத்தனை நாளானாலும் என் கண்களில் இருந்து கொண்டே இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. என்னை பொறுத்த வரை, விளம்பரங்கள் அழகான குட்டி திரைப்படங்கள்... அனுபவித்து ரசிக்கப்பட வேண்டியவை.. தங்கள் பகிர்விற்கு நன்றி..

    பதிலளிநீக்கு