சூரியப்பிரகாசம். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் என் செல்லத்தம்பி. வருகின்ற 18-ம் தேதியன்று 16-ம் பிறந்த நாள் அவனுக்கு.
1997, ஆகஸ்ட் மாதம், கிட்ட தட்ட 2 மாதங்கள் அம்மாவைப்பிரிந்து பாட்டியிடம் வளர்ந்த ஏக்கம், சூர்யா பிறந்து, 2 ம் நாள் மருத்துவமனையில் அம்மா மடியில் அவனைப்பார்த்த மாத்திரத்தில் அந்த ஏக்கம் பொறாமையாக உருமாறி அழுகையாய் வந்தது. என்னை விட தம்பி கலராய் இருக்கிறான் என்று கூடுதல் கடுப்பு வேறு. ஆனாலும் கூட, அவன் விக்கலுக்கு காரணமாய், அவன் சிரிப்புக்கு சொந்தகாரியாய், அவன் சேட்டைகளுக்கு ரசிகையாய், அழுகைக்கு தாலாட்டாய் மாறித்தான் போனேன். அவனுக்காக கற்றுக்கொண்ட தாலாட்டெல்லாம், அவன் நினைவுகளுடன் பசுமையாய் என்னுள் இன்னும் இருக்கிறது.
‘உங்கு குடிக்கறியா..
ஊறுகாயி திங்கறியா..
பாலு குடிக்கறியா..
பழைய சோறு திங்கறியா..”
அப்பவும் அவன் அழுகை நிக்காமல் போக, பள்ளியில் பாடும் ‘prayer song' - ஐ எல்லாம் பாடி, சில சமயம் வென்றும், பல சமயம் தோற்றும் போயிறுக்கிறேன்.
அவன் பள்ளி செல்ல ஆரம்பிக்கையில், அவனுக்காக பென்சில் டப்பாவையும், வாட்டர் பாட்டிலையும் பார்த்து பார்த்து வாங்கிய நான், அவன் வளர்ந்த பின் பென்சில்களுக்கும் பேனாக்களுக்கும் சண்டை போட்டேன். அவனை மிரட்ட டைரியில் புகார்கள் எழுதியது, நான் மார்க் வாங்கிய அழகிற்கு அவன் படிப்பை குறை கூறியது என்று அவனது பள்ளிப்பருவத்தில் பெரிய மனுஷித்தனமாய் மாறிய நான், இன்று அவனது பெரிய மனுஷித்தனத்தில் குழந்தையாகவே மாறிப் போகிறேன்.
'அக்கா விடம் காசே இல்லை டா’ என்று பொய்யாக புலம்பினால் கூட, அவன் சேமிப்பைக் கொண்டு வந்து கொடுப்பதில் ஒரு தந்தையின் பரிவை உணர்ந்தேன்.
அல்சர் வலியில் துடித்த போது, ‘ஒழுங்காக் சாப்பிடு’ என்று திட்டியபோதும், அவன் சுட்டுத் தரும் தோசை, பனியாரங்களிலும், போட்டுத்தரும் பூஸ்ட்-டிலும், அக்காவிற்கு பிடிக்கும் என்று சேகரித்து வைத்திருக்கும் கொய்யாப்பழங்களிலும், சீத்தாப்பழங்களிலும் , அவன் வளர்த்துக்கொண்டிருக்கும் ரோஜா, செவ்வந்தி செடிகளிலும், எனக்கு வைத்து விட்ட மருதாணிகளிலும், தலைவலியின் போது பொட்டுவிட்ட தைலங்களிலும் ஒரு தாயின் அரவணைப்பை உணர்கிறேன்.
வீட்டிற்கு வந்திருக்கும் திருமண அழைப்பிதழ்களை குறிப்பிட்டு, ‘அக்காவிற்கு இதை விட சூப்பராக இருக்கவேண்டும்’ என்று சொல்லும் போதும், என் வேலையைப்பற்றி அம்மா பேசும் போதெல்லாம், ‘இவ்வளவு நாட்கள் விடுதியில், இப்போது வேலை வேலை என்றால், அக்காவை வீட்டில் வைத்திருக்கும் எண்ணமே இல்லையா?’ என்று வாதிடும் போதும் ஒரு அண்ணனின் அக்கறையை உணர்கிறேன்.
தூங்கும்போது தலை கோதி விடச்சொல்வதிலாகட்டும், குட்டி குட்டி தோசை சுட்டு குடுக்கச்சொல்வதிலாகட்டும், சாப்பாடு ஊட்டி விடுவதிலாகட்டும், சண்டை பொட்டுக்கொல்வதிலாகட்டும்.. இன்னும் என் சுட்டித் தம்பியாகவும் இருக்கிறான்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் இரவுகளில், வாசலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டே தொடங்கும் எங்களின் கனவு உலகம். அவன் படிப்பிலிருந்து, எனக்கு கிடைக்கப்போகும் வேலை, அப்பாவின் கோபம், அம்மாவின் ருசியான உணவு, ஆத்தாவிடம் பொட்ட சண்டை, அய்யா விடம் வாங்கிய திட்டு, அவன் சைக்கிளில் செய்த சாகசம், புதிதாக வந்திருக்கும் செல்போன், அவனைக் கவர்ந்த விளம்பரங்கள், புதிதாக வந்திருக்கும் திரைப்படங்கள், செய்தித்தாள்களில்ருந்து வெட்டி எடுத்த புது மாடல் கார்கள், எங்கள் சுற்றுலா ஆசைகள், வாங்க ஆசைப்படும் பொருட்கள் வரை பேச பேச ஆயிரம் கனவுகள், லட்சியங்கள் என்று எங்கள் நட்சத்திர உலகம் விரிந்து கொண்டே போகும்.

அவனது கனவுகள் கை கூடவும், மகிழ்ச்சி நிறைந்திருக்கவும், வானம் வசப்படவும், பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்..
அன்பு அக்கா,
ரஞ்சனி.
My last year's birthday wishes to Surya,
Simply WoW akka..nice bro sis! :) :) HBD Surya!
பதிலளிநீக்குThank u, treasurer..!!
நீக்குI ll convey ur wishes to him :)
Convey my wishes to Surya......
பதிலளிநீக்கு