வெள்ளி, ஜூன் 08, 2012

புகைப்படங்கள் - கருப்பு/வெள்ளை முதல் Digicam வரை


பார்க்க பார்க்க ஆயிரம் கதைகள் சொல்பவை புகைப்படங்கள். கடந்த காலத்தை நாம் என்றுமே நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது. ஆனால், கடந்த கால நினைவுகளை சட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம், புகைப்படங்களாக.

தேடிப்பாருங்கள், வீட்டுப்பரண்களில், அலமாரிகளில் அல்லது பழைய வீட்டின் எங்கோ ஒரு மூலையில், கருப்பு வெள்ளையில் மிடுக்காகத் தோன்றும் தாத்தா, மெழுகு பொம்மை போல் பவ்யமாக நிற்கும் பாட்டி, பூ போட்ட சொக்காயில் அதிக அழகாய் நிற்கும் அத்தை... மனதோரம் ஆச்சரியமும் இதழோரம் சிரிப்பும் தான் வரும். அந்த கருப்பு/வெள்ளைப் படம் கூட வண்ணமயமான பல நினைவுகளைச் சுமந்திருக்கும்.

பெரியப்பா - பெரியம்மா திருமணம் - 1977 


அவ்வளவு பின் நோக்கிக்கூட செல்ல வேண்டாம். நம் ஒரு வயது புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? அது அநேகமாக நம் முதல் மொட்டைக்கு முன்னால் எடுத்ததாக இருக்கும். எண்ணெய் வைக்காமல், பரட்டை தலையோடு, பேந்த பேந்த விழித்துக்கொண்டு, வயிறு வரை தொங்கும் டாலர் செயினும், சிரிக்கவும் தெரியாமல், அழுகையும் வராமல், கிட்டத்தட்ட மோனலிசா மர்மப்புன்னகையுடன் இருப்போம் பாருங்க, செம காமெடி..?!



நானும் என் தம்பி சூர்யாவும் - 1998

நானும் சூர்யாவும் 2011

அதற்குப்பின், பள்ளியில் எடுக்கும் குரூப் போட்டோவிற்கு நடக்கும் அலப்பறை தான் டாப். கைக்குட்டையில் பவுடர் கொட்டிக்கொண்டு, பக்கத்து வீட்டு மல்லிகைப்பூவையும், ரோஜாப்பூவையும் வைத்துக்கொண்டு, என்றைக்கும் போடாத பாலிஷ்-ஐ ஷூ-க்கு இரண்டு முறை போட்டுக்கொண்டு, யார் பக்கத்தில்  உட்காருவது என்று பக்காவாக பிளான் போட்டுவிட்டு போவோம். ஒரு மாதம் கழித்து போட்டோ வந்து பார்த்தால், கண்ணை மூடிக்கொண்டோ, முறைத்துக்கொண்டோ இருப்போம். கடவுளே, விடு, அடுத்த வருடம் கலக்கி விடலாம் என்று கடைசி வரை குரூப் போட்டோக்கள் எல்லாம் சொதப்பலில் தான் முடிந்திருக்கும்.

குரூப் போட்டோ - 1994

7-8 வருடங்களுக்கு முன்பு, ஒரு சில பண்டிகைக்காலங்களில், முக்கியமாக தீபாவளி யில், யாரிடமாவது ஓசி காமிரா வாங்கிக்கொண்டு வந்து, இரண்டு மூன்று ரோல் போட்டு ஆசை தீர எடுக்கலாம் என்றால், அதில் ஒரு ரோல் முழுக்க புஸ்வானத்தையும் சங்கு சக்கரத்தையும் எடுத்து எடுத்தே வீணாய்ப்போயிருக்கும். மிச்சமானவற்றை மஞ்சகள் காட்டிலும், வாழைத் தோப்புகளிலும், நெல் வயல்களிலும் நின்று சேறு அப்பிக்கொண்டும் எறும்புக்கடிகளை பொறுத்துக்கொண்டும் போஸ் குடுத்ததெல்லாம் கொள்ளை அழகு.

புல்லெட் ஓட்டுவது போல், மத்தாப்பு பிடிப்பது போலவும், நான்-நீ என்று போட்டி போட்டுக்கொண்டு எடுத்து, அதில் பாதி போட்டோ க்கள், Shutter open பண்ணாமல், Lens இல் கை வைத்து மறைத்தும், ரோல் தீர்ந்து போயும் விழுந்திருக்கவே விழுந்திருக்காது. இத்தனை ரகளையும் மீறி வந்திருக்கும் புகைப்படங்கள், அவ்வளவு பொக்கிஷங்கள்..!!

தீபாவளி -1999

 தீபாவளி - 2011
இன்றைக்கு போட்டோ எடுப்பதெல்லாம் சகஜமாகி விட்டது. ஏதாவது ஒரு செடி பூ பூத்தால் பக்கத்தில் நின்று ஒரு போஸ் (அது ஒற்றையாக பூத்தாலும் சரி, கொத்தாக பூத்தாலும் ), Cafeteria போனால், ஹாஸ்டல் மெஸ் சில் புதிதாய் ஏதேனும் போட்டால், தோழிகள் யாரவது செமினார் எடுத்தால், வகுப்பில் தூங்கினால் கூட விடுவதில்லை, ஐஸ் கிரீம் சாப்பிட்டாலும் சரி, அதிசயமாக படிச்சாலும் evidence காக இதையெல்லாம் போட்டோ எடுத்து வைக்க வேண்டியது இருக்கு, தோழி யில் ஸ்கூட்டி முதல் கல்லூரி சேர்மனின் பென்ஸ் கார் வரை எல்லா முன்னாலும் ஒரு போஸ், ஒரு க்ளிக், ஒரு ப்ளாஷ்..

சராசரியாக, நம் கணினிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, புகைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நீங்கள் வேண்டுமானால் ஒப்பிட்டுப்பாருங்களேன்,  பத்து வருடத்திற்கு முந்தய புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும், எவை அதிகம் சுவாரஸ்யமான கதைகள் சொல்கிறது என்று உங்களுக்கே புரியும்.

2 கருத்துகள்:

  1. அப்பப்பா எத்தனை அழகான நாட்கள்! ஸ்கூல் க்ரூப் ஃபோட்டோ முதல் அந்த காலத்து கருப்பு வெள்ளை படம் வரை நீ பகிர்ந்து கொண்டவை அனைத்தும் எத்தகைய சந்தோஷமான தருனங்கள்! அதிலும் ஸ்கூல் க்ரூப் ஃபோட்டோக்கு மிஸ் பக்கத்துல யார் உட்காரதுங்கற வரைக்கும் பேச்சுக்கள் வரும் அதையும் குட்டையா இருக்கறவங்கல தான் உட்கார வைப்பாங்க! அருமையான பதிவு. அழகான நினைவூட்டல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி புரட்டிப்பார்த்தால் தானே வாழ்க்கையும் அழகாகும்..?!
      நன்றி யுவா..

      நீக்கு