செவ்வாய், ஜூன் 12, 2012

பெண்மையும் சமூகப் பரிணாமங்களும்

பெண்மை. கடவுளுக்குத் தலை வணங்காதவர்கள் கூட மரியாதையுடன் கை கூப்ப வைக்கும் சக்தி பெண்மைக்கே உண்டு. மனித நாகரிகம் வளர வளர, பெண்மைக்கான கண்ணோட்டங்களும் மாறியே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. இந்த கண்ணோட்டங்கள் நான்கு விதமான பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது.

 • கடவுளாக கொண்டாடிய காலம் (ஆதி காலம்)
 • அடிமைகளாக நடத்திய காலம் (1980 வரை)
 • போகப்பொருளாய் பார்த்த காலம் (1980 லிருந்து இன்றும், நாளையும் கூட)
 • இழிவுப்போருளாக சித்தரித்த காலம் (2000 லிருந்து, இன்றும், என்று வரையோ?!)
ஆதி காலத்தில், மனித நாகரிகம் வளர்வதற்கு முன், ஒரு குட்டி மனிதனையே உருவாக்கும் அபூர்வ  சக்தியினை பெண் பெற்றிருந்தமையால், அவள் தெய்வமாகவும், தெய்வத்தினும் மிஞ்சிய சக்தியாகவும் போற்றப்பட்டாள். "நானும் உங்களுள் ஒருத்தி" என்று பெண் புரிய வைக்க முற்பட்டு, அதன் விளைவாக, தோளுக்கு தோளாய் நிற்க வேண்டியவள், ஆண் சமூகத்தின் காலடியில் கிடத்தப்பட் டாள்.
அன்றிலிருந்து ஆணிற்கு சேவகம் செய்வதற்கென்றே வாக்கப் பட்டவள் பெண் என்ற மிதர்ப்பில் ஆண் சமூகம் பெண்களை எள்ளி நகையாடியது. "மகாத்மா" என்று போற்றப்பட்டவர் கூட இதற்கு விதி விலக்கல்ல. பெண்களின் உடல் நலத்திற்காக போடப்பட்ட மலர் படுக்கைகள் யாவும் முட்படுக்கைகளாகவும், கோர மலைப்பாம்புகளாகவும் மாறி, கழுத்தை இறுக்கி, உடலளவிலும் மனதளவிலும் பெண்ணை பலமற்றவளாக மாற்றி இந்த சமுதாயம் அவளை அழகு பார்த்தது. ஆக, சமுதாயத்தில் மிகவும் நலிவற்றவர்கள் என்ற முட்கிரீடம் சூட்டப்பட்டவர்களாக பெண்மை நடத்தப்பட்டது.அடுத்து, பெண்மையை போகப்பொருளாக சித்தரித்த காலம். இது என்று தொடங்கியது என்றே தெரியவில்லை. ஆலிங்கன சிற்பங்களிலும், அரசனின் அந்தப்புரங்களிலும் தொடங்கிய இந்த பரிணாம வளர்ச்சி, இன்று எங்கெங்கோ தொடருகிறது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் எங்கோ ஒரு ஓரத்தில் புதைந்து கிடந்தவைகள், இன்று எல்லாத் திரைப்படங்களில், ஏன், விளம்பரங்களில் கூட வெளிப்படையாகவே பெண்மை மிகக்கேவலமாக சித்தரிக்கப்படுகிறது .
குத்துப்பாடல்கள், ஆபாச சுவரொட்டிகள், இரட்டை அர்த்த வசனங்களை மீறி, இன்று புதிதாக ஒரு பாணியை 'கலை' உலகத்தினர் கடைபிடிக்கின்றனர். பெண்களைக் கேவலப்படுத்தி, அவர்களை 'காதலில் ஏமாற்றுபவர்கள்' என்று பட்டம் கட்டி, தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மதியாமல், மறந்து பாடித்திரிகின்றனர்.
பெண்களைத்திட்டி ஒரு பாடல் இருந்தால், அதுவே போதும் படம் வெற்றி  பெற்று விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் படக்குழுவினர் இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

பெண்களின் கொடுமைகளை ஊருக்கு உரைக்கிறேன் என்ற பெயரில் காதலில் வாழ்க்கையை தொலைத்தவர்கள், கொடுமைக்கார கணவனிடம் சிக்கி கரை ஏற முடியாமல் தவிப்பவர்கள், வேலியே பயிரை மேய்ந்த கதைகள் என்று பெண்மையின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதையும் வெளிச்சம் போட்டுக்காட்டி வியாபாரம் செய்யத்துடிக்கின்றனர்.  பெண்மை அல்லலில் சிக்கி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்  விளம்பர இடைவேளையில் தான், "அடிடா அவள, வேட் றா அவள ..", "எவண்டி உன்ன பெத்தான், கைல கெடைச்ச செத்தான்..", "வொய் திஸ் கொலவெறி  டீ.." என்று குடித்துவிட்டு பாடித்திரிகின்றனர். பெண்மையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்களே வா? ஆணாதிக்கமா? ஆணாதிக்க சமுதாயமா? எவற்றை கூறுவது.. எவற்றை விட்டுத்தள்ளுவது..??

நாளைய சமுதாயத்தில், ஏன் இன்றைய சமுதாயத்திலே கூட, எங்கள் சகோதரர்களின் பார்வையில் பெண்மை எப்படி இருக்கும் என்ற பதை பதைப்புடனும் , பயத்துடனும், மனதில் கனத்துடனும் முடிக்கத் தெரியாமல் முடிக்கிறேன்......

6 கருத்துகள்:

 1. ஆணை விட அதிக சக்தி படைத்தவள் என்பதால்தான் ஆண் சமூகம் பெண்ணை அடிமைப் படுத்த கையாண்ட ஆயுதம் தான் பெண்ணின் உடலியலில் இருந்த பிரச்சினைகள். ஒரு பெண் ஆணை விட உடலளவில் பலம் குன்றியவளாக இருக்கலாம் ஆனால், மனதளவில் ஆணை விட பலமானவள். அதனால் தான் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவளை உடலளவில் அடக்கியாள ஆரம்பித்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருபெண் இந்த இரும்புப்பிடியிளிருந்து வெளியே வர நினைப்பதையே ஒழுக்கக்கேடாக நினைக்கிறது இந்த சமூகம்..
   தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி அண்ணா..

   நீக்கு
 2. ஆனால் இன்றைய கால கட்டத்தில், பெண்களின் வளர்ச்சியை தடுக்க ஆண்கள் அவசியமில்லை. பூப்பெய்திய பெண்ணை வீட்டிற்குள்ளேயே ஒதுக்கி வைப்பதும், மாதா மாதம் மூன்று நாட்கள் அவளை வேற்று கிரக வாசி போல் பாவிப்பதும், குழந்தை பெற்றெடுத்த பெண்ணை குறிப்பிட்ட நாட்களுக்கு தறையிள் மட்டுமே படுக்க வைப்பதும் சக பெண் தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பெண்மையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? பெண்களே வா? ஆணாதிக்கமா? ஆணாதிக்க சமுதாயமா? எவற்றை கூறுவது.. எவற்றை விட்டுத்தள்ளுவது..??..

   இந்தக்கேள்வியே உங்களுக்கு பதிலாகவும், எதிர்க்கேள்வியாகவும்..

   நீக்கு