வெள்ளி, மார்ச் 16, 2012

கூட்டை விட்டு வெளியேறுகிறோமா நாம் ??

நத்தை - தன் அலட்சியத்திற்காக கடவுளிடம் சாபம் பெற்று, தன் கூட்டை முதுகில் சுமப்பதாக வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. இன்றைய காலகட்டத்தில், நாமும் நத்தைகள் போலத்தான். நத்தைகள் போல ஒரு சின்ன ஓட்டிற்குள் ஒடுங்கிக்கொண்டு, நம் வீட்டை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறோம்.



நாம் வளர வளர, நம் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, நம் வீட்டிற்கும் குடும்பத்திற்குமான இடைவெளியும் தூரமும் அதிகரிக்கிறது.
3 வயது வரை 24  மணிநேரங்களும் அம்மாவின் செல்லத்திலும், அப்பாவின் வண்டி சவாரிகளிலும் கழிந்த நாட்களெல்லாம் குறைந்து, பள்ளிக்கூடம் என்ற பூதம் வந்து நமது 6 மணி நேரத்தை முத்தாய் அபகரித்துக்கொள்ளும். 14 வருடங்கள்!! ஏறக்குறைய வனவாசம் போல.

இந்தக்காலத்தில் தான் அரைக்கால் சட்டைகள் முழுக்கால் சட்டைகளாகவும், சிண்டுகள் இரட்டைப் பின்னல் களாகவும் பரிமாற்றமடையும். அன்றுவரை, மதிய உணவை இரண்டடுக்கு எவர்சில்வர் டப்பாவில் அடைத்துக்கொடுக்கும் அம்மாவிற்கும், பார்த்து பார்த்து செலவு செய்யும் அப்பாவிற்கும் பொறி தட்டும். எதோ ஒன்று பறிபோகும் உணர்வு, காலமென்னும் கொடிய அரக்கன் நம்மை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு செல்ல, செய்வதறியாது திகைத்து நிற்பார்கள். அன்றெல்லாம், எனக்கு அது பெரிதாகத்தெரியவில்லை.ஆனால், இன்று நான் திகைத்து நிற்கிறேன். கூட்டை விட்டு வெளியேறுகிறோமா நாம் ??

LKG இல் நான் சென்ற பள்ளி வண்டி விபத்துக்குள்ளாகி என் தலையின் காயம் பட்ட பொது, பள்ளியையும் மாற்றி, பள்ளிக்கு தினமும் காலையிலும் மாலையிலும் அழைத்துச்சென்று வந்தார், என் தந்தை. Royal Enfield புல்லட்டில் ஆரம்பித்த இந்தப்பயணம், நாளடைவில் Hero Honda வில் என் தாத்தா வோடும் என் தம்பியோடும் தொடந்தது.


என் 7 வயதில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் சுமார் ஒன்றரை வருடங்கள் மருத்துவமனைக்கு என் அம்மாவுடன் அலைந்த போது உணவின் மகத்துவம் புரியவில்லை, நெடுநெடுவென்று வளர்ந்த தாடி வைத்த மருத்துவர் ஊசியைக்காட்டி பயமுறுத்தியபோது கூட உணவின் அருமை தெரியவில்லை. தோசையின் மொருமொருப்பு பற்றவில்லை, பாட்டியைப்போல சட்னி அரைக்கத்தெறியவில்லை, தோழியின் தாயைப்போல சப்பாத்தி மிருதுவாக செய்யத்தெரியவில்லை என்று அம்மாவிடம் சண்டைபோட்ட போது, அம்மாவின் கைப்பக்குவம் அறியவில்லை. ஐந்தாவது ஆண்டாக விடுதியில் சாப்பிட்டு வரும்போது தான், தோட்டத்தில் விளைந்து கிடக்கும் சுரைக்காயின் ருசியும், தள தளவென்று வளர்ந்து கிடக்கும் கீரையின் அருமையும் இப்பொழுது தான் என் புத்திக்கு உரைக்கிறது.


LKG க்கு முன்.. :)
MCA விற்கு பின்.. :(

பென்சிலுக்கும் மிட்டாய்க்கும் சண்டை போட்ட தம்பியின் பாசம் அன்று எனக்கு பெரிதாய்த் தெரியவில்லை. நான்கு நாட்களுக்கு முன் பறித்த கொய்யாவைக்கூட அக்காவிற்கு பிடிக்கும் என்று ப்ரிஜ்ஜில் வைத்திருந்து கொடுக்கும் போது நெகிழ்ந்து போனேன். 

ஆறு மணிநேரமாக இருந்த தொலைவு, பத்து மணி நேரமாகி, பதினைந்து நாட்களாகி, இப்பொழுது ஒரு மாதத்திற்கும் மேலாகி நிற்கிறது. வளாகத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன் நான். இனி எட்டு மாதங்களில் நான் என் தனி உலகில் வாழப்போகிறேன். இந்த தூரம் இனி மேலும் அதிகமாகலாம்.


வளர்ந்து நிற்கும் ரோஜா செடிகளும், கன்றுக்குட்டிகளும், புதிதாய்  பிறந்திருக்கும் ஆடுக்குட்டிகளுமே எனக்கு அந்நியமாய்த் தோன்றி உறுத்துகிறது. அலமாரிக்குள் உறங்கும் என் பொருள்கள், இரண்டு நாட்கள்  கிடைக்கும் அதீத பாசம்.. ஒரு வாரமாய் அம்மா சேகரித்து வைத்திருக்கும் பூக்கள், ஊட்டி விடச்சொல்லி கெஞ்சும் தம்பி, மதியம் 2 மணிக்கு சரியாய் இளநீர் குடிக்க அழைக்கும் தாத்தா, இளைத்துப்போய் விட்டாய் என்று வாடிக்கையாய்க் கூறும் பாட்டி.. இந்த இரண்டு நாள் உலகம் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்..


6 கருத்துகள்:

  1. இப்பொழுது தான் Shodashi யை Pre K.G க்கு அனுப்ப 2 நாட்களாக பள்ளி யை தேடிக் கொண்டிருக்கிறேன்.

    இப்பொழுதே ஒரு இனம் புரியாத வெருமை எங்கள் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது.

    நீ வேறு இதயக் குளத்தில் கல்லெறிகிறாய்....

    பதிலளிநீக்கு
  2. இப்பொழுதுதான் Shodashi யை Pre.K.G க்கு அனுப்ப பள்ளியை 4 நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறோம்.

    ஓரு விதமான வெருமை இதயத்தை ஆக்ரமிக்கத் தொடங்கி விட்டது.

    நீ வேறு என் இதயக் குளத்தில் கல்லை எறிகிறாய்.

    கண்களின் ஓரம் கண்ணீர் துளி...

    பதிலளிநீக்கு
  3. "Children grow up.sometimes parents must too!!"
    Thanks to Mr.Radhamohan in Abhiyum Naanum :-)

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு குட்டிப் பொண்ணா நீங்க.. இப்போ எந்த வண்டியில் பயணம்? சிறுவயது ஞாபகங்கள் நம்மை மீண்டும் புதிய உலகம் அழைத்துச்செல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே Hero Honda தான் இன்றும், பயணியாக இருந்தவள் இப்பொழுது ஓட்டுனராகவும் மாறிவிட்டேன்...
      என் அப்பாவிற்கு நான் என்றுமே "குட்டி" தான்.. :)
      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு