செவ்வாய், டிசம்பர் 13, 2011

உழவும் கலையும்

சிறப்பான வாழ்விற்கு மனிதனின் வயிறும் மனமும் நிறைய வேண்டும்.வயிறு நிறையும் படி உலகிற்கே படியளக்கும் பெருமை விவசாயிக்கே உண்டு. மன மகிழ்ந்து கொண்டாட வைக்கும் சிறப்பு கலையையே சார்ந்தது.

ஆயினும், ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டின் நோக்கமும் ஒன்றே, நிறைவே. ஊன்றி கவனித்தோமானால் விவசாயியும் கலைஞன் தான்; கலைஞனும் விவசாயி தான். இங்கு உயிரை வளர்க்க கரு, அங்கு கதையை வளர்க்க கரு.


விவசாயி  தன் நிலத்தை உழுது, பதமிட்டு மண்ணின் குணத்திற்கேற்ப பயிரை விதைக்கிறான். சமயத்தில் நீர் பாய்ச்சி, உரமிட்டு, களைகளை கலைத்து, கிட்டத்தட்ட தன் குழந்தை போல, அதன் தேவைக்கேற்ப பயிரை செப்பனிடுகிறான். இவை யாவும் முடிந்த வரை தன் கையாலும், முடியாத பட்சத்தில் தன் மேற்பார்வையிலாலும் பக்குவப்படுத்துகிறான். இதில் ஒட்டுண்ணிகளும், நுண் உயிர்களும் முக்கியப்பங்கு வகிக்கிறது. காலத்திற்கேற்ற ஊடு பயிர்கள், மழைக்கேற்ற பாசன முறைகள், பயிர்களுக்கேற்ற நுண் ஊட்டங்கள் என்று கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டியது, விவசாயம். பயிர் பருவத்தில் அறுவடை செய்து மக்களிடம் உணவு பொருட்களை சேர்க்க வேண்டிய உன்னதமான  பொறுப்பை விவசாயிடம் இயற்கை ஒப்புவித்துள்ளது.


கலை என்பது ஆதிதமிழர் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் என்று பொருள் கொள்ளப்பட்டது. கலையின் மொத்த வடிவே நாடகங்கள் ஆகும். பல பரிணாம வளர்ச்சிக்குப் பின், கால மாறுதலுக்கு உட்பட்டு திரைப்படங்கள் ஆயின.

கலைக்கு முக்கியமானது கதை, அது கலையின் கருவாக கொள்ளப்பட்டது. விவசாயிக்கு விதை போல. இங்கு, மக்களின் மனம், சமூக நிகழ்வுகள், அதன் விளைவுகளை அலசி ஆராய்ந்து, கதை கோணம் தீர்மானிக்கபடுகிறது. ஒரே ஒரு மையப்புள்ளியில் தொடங்கி, செப்பனிட்டு, இடை இடையே பாடல்கள், சண்டை காட்சிகள், நகைச்சுவைகள் என கதையின் வளர்ச்சிக்கேற்ப திரைப்படமாகிய நாடகம் வளரும். இதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கிட்ட  பெருமைகள் இணை இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்றோரையே சாரும். பயிருக்கு நுண் ஊட்டங்கள் போல, திரைப்படத்தை செதுக்குபவர்கள் இவர்களே. விவசாயிக்கு தன் பயிர் குழந்தை போல, இயக்குனருக்கும் அவர் குழுவிற்கும், அவர்களது திரைப்படம் குழந்தையே . பாத்து பார்த்து செதுக்கி, சீராட்டி, ரசித்து, செப்பனிட்டு, ஏறத்தாழ குழந்தைக்கும் - தாய்க்கும் இடையே உள்ள பந்தம் இது.
                                           இரண்டின் லாப நஷ்டங்களும் மக்களாலேயே தீர்மானிக்கபடுகின்றன. விவசாயிக்கு சூரியனும் மழையும் கடவுளானால், கலைஞனுக்கு  ஒளியும், ஒலியும் கடவுள்கள். விவசாயி சந்தைபடுத்துவது சந்தையில், கலைஞன் சந்தை படுத்துவது திரையரங்குகளில். விவசாயிக்கு வருடம் ஒரு முறை தை மாதம் என்றால், கலைஞனுக்கு, அவன் படைப்புகள் வெளியாகும் மாதங்களெல்லாம் தை மாதங்களே.

அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதில் இருவருமே தன்னிகரற்ற முதலாளிகளே . காலமாற்றத்திற்கேற்ப இரு துறைகளிலும் மாசு நுழைந்து விட்டது.  விவசாயத்தில் இரசாயன உர வடிவில், திரைப்படங்களில் வன்முறை, ஆபாசங்கள் வடிவில். இவைகள் கூட மக்கள் ரசனை என்ற பெயரில்  பூசி மெலுக்கப்படுகின்றன. மாற்றம் தேவை. ஆனால், அந்த மாற்றத்தை துணிந்து செயல் படுத்துபவர்கள்  யார் என்பது , சுழலில் சிக்கிக்கொண்ட  படகின்  நிலையே. 


வியாழன், டிசம்பர் 08, 2011

உணர்வுகளும் விலைபோகிறதா??

நம் மனித பூவுடல் இரத்தம், சதை மட்டும் அல்லாது உணர்வுகளாலும் நிறைந்தது. ரத்தத்திற்கும் உணர்வுக்கும் நெருங்கிய சொந்தமுண்டு. மொத்த மகிழ்ச்சியில் உடல் முழுதும் சீறிப் பாய்ந்து கொண்டாடுவதாகட்டும், கவலைகளிலும் கோபத்திலும் தன ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாகட்டும், அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் உணர்வுகளோடு ஒன்றியே அமையும்.  

உணர்வுகள் பன்முகம் கொண்டது. ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி, நெஞ்சைப் பிழியும் சோகம், வலி, ஆக்ரோஷம், விரக்தி, ஆதங்கம், பயம், இழப்பு.. இப்படி எண்ணற்றவை.சில உணர்வுகள் பகிரக்கூடியவை. சில பகிரக்கூடாதவை. நம் பகிரும் உணர்வுகள் பலரிடம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, மகிழ்ச்சியான உணர்வுகள் மகிழ்ச்சியைப் பரப்பும், சோகம்  மட் றவரை ஆட்கொண்டு விடும், இழப்பு வெறுமையை விதைத்து விடும். சில உணர்வுகள் பகிரக்கூடாதவை. உதாரணம், விரக்தி - அளவுகடந்த விரக்தி தீய எண்ணங்களை மேலெலும்பச்செய்யும், ஆக்ரோஷம் - நல்ல உறவுகளை, ஏன், உயிரைக்கூட கொன்றுவிடும்.

எல்லாம் பணிமயமான இந்த உலகத்தில் உணர்வுகளும் விலை போகின்றன, ஊடகங்களின் வடிவில். மகிழ்ச்சியை கொண்டாடும் ஊடகங்கள் வெகு சிலதே. 

இழப்பின் வலி, வாழ்வின் விரக்தி, அதில் தடுமாறும் நாயகனின் ஆக்ரோஷம், தேவையே இல்லாமல் வரும் நாயகியுடனான காட்சிகள், தன் தீவிரவாதத்தை சரி என்று நிரூபிப்பதில் போய்க்கொண்டிருக்கிறது, இன்றைய சினிமாக்கள்.

தந்தை-மகள், தாய்-மகன் பாசங்களை வியாபாரத்தனமாக எண்ணவில்லை நாங்கள். கவிதைகளாய் விவரித்த ஒரு தாய்க்கும்-கருவுக்கும் இடையே யான உணர்வுகளை கூட ரசித்தோம்.அனால், சிசுவை இழந்த தாயின் வலியை, அந்த உச்ச கட்ட கொதிநிலையை, எதற்காக காட்ட வேண்டும்??

தோல்வியை ஏற்கத்துணிவில்லாத நாயகன் போதையை நாடி செல்லத்தான் வேண்டுமா?

நாயகிகள் தங்கள் சுய மரியாதைகளை விடு விலகித்தான் நாயகர்களை கவர வேண்டுமா?

நகைச்சுவைக்கலைஞர்கள், தங்களையும் இழிவு படுத்தி, தங்கள் குடும்பத்தையும் இழிவுபடுத்தி த்தான் சிரிப்பு மூட்ட முடியுமா?

10 வருடம் முன்பான 'U' தணிக்கை சான்றிதழ் படங்களையும், தற்போதைய 'U' படங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால், உணர்வுகள் எப்படி வியாபாரமாக்கப்பட்டது  என்பது புரியும்.

திரைப்படங்கள் காற்று அடிக்கும் குழாய் போல, ஏற்கனவே பல உணர்வுகளை வெளியிட முடியாமல் திணறும் நம் மனதில், இன்னும் அழுத்தம் சேர்ந்தால், ஒரு நாள் வெடித்தே விடும். ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும் போதும் நம் மனதில் நாம் அறியாமல் பூஞ்சைகள் படர்ந்துவிடும். அது நாளடைவில் விஷக்காலான்களாய் மாறுவதற்குள், ஜாக்கிரதை!!ஞாயிறு, நவம்பர் 20, 2011

நட்பின் பரிணாமங்கள்

காதலுக்குப் பிறகு கவிதைகளும், பாடல்களும், திரைப்படங்களும் ஏன் விளம்பரங்கள் கூட கொண்டாடும் ஒரு அழகான கரு நட்பு.

'பகிர்தல்' என்ற வார்த்தையின் உட்பொருளே நட்பில் தான் புரிகிறது. ஐம்பது காசு மிட்டயைக்கூட ஐந்து பங்காக போடும் விசித்திரம் நட்பில் மட்டும் தான் இருக்கும். 

நட்பின் ஆரம்பம் 2 வயதில் நாய் குட்டியுடனோ, பூனைக்குட்டியுடனோ அல்லது பொம்மையுடனோ ஆரம்பிக்கும். சிலேட் பென்சில் வாங்குவதில்/தருவதில் தொடங்குகிறது ஒரு ஆத்மார்த்தமான நட்புடனான நம் பயணம். பிறகு அந்த சிலேட் பென்சில் பரிணாம வளர்ச்சி பெற்று மிட்டாய், அழி ரப்பர் பகிர்தலில் தொடங்கி சி(ப)ல சமயம் வாழ்க்கை பகிர்தலுக்கும் வழி வகுக்கும். 


ஆரம்பங்களில் நட்பு புதிய அறிமுகங்களாகவும், விளையாட்டுத் துணைகளாகவும் அடையாளங் கொள்ளப்பட்டது. மூன்றாம் வகுப்பில் வாய் மொழிப் பாடல்களும், ஏழாம் வகுப்பில் பிசிராந்தையார், ஒளவையார்-அதியமான் நட்புகள் நட்பின் சிறப்பை நமக்கு உணர்த்தும் கருவியாக்கப்பட்டது.

அதற்குப்பிறகு, நட்பு 'பகிர்தல்' பரிணாமத்திற்கு வருகிறது. படிப்பு சார்ந்த, உணவு சார்ந்த பகிர்வுகள் பரவலாக நட்பைத் தீர்மானிக்கும் காலம். பின், கருத்துகள் (கிண்டல்களும் தான்) கேட்பதற்கும் , சொல்வதற்கும் உற்ற துணையோ குழுவோ தேவைப்பட்டது. இங்கு தான் நட்பு அதன் முதல் பரிணாமத்தை  அடைகிறது. "பகிர்தல்"

ஆரம்பத்தில் மகிழ்ச்சி, கிண்டல்,  சில சமயம் சோகத்தைக் கூட பகிர்ந்து கொள்ளும் நம் நட்பு வட்டம், சில சமயங்களில் நம் குழப்பத்தையோ பயத்தையோ சரி வரத் தெளித்து வைக்கும் கலையை கையாள முடியாமல் திணறும். அப்பொழுது தான், நமக்கே நமக்கான ஒரு கை நம் குழப்பங்களை தாங்கிடவும், வழிகாட்டவும் தென்படுகிறது. இப்பொழுது  நட்பு அதன் இரண்டாம் பரிணாமத்திற்கு வந்து விட்டது. "ஆத்மார்த்தமான பகிர்வு"

பெரும்பாலும் பலரது நட்பு இந்த பரிணாமத்தை தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தாய்/தந்தையிடம் பகிர முடியாத, நட்பு வட்டத்தில் கூட கிடைக்காத மன நிம்மதியை  நிச்சயம் அந்த நட்பு கொடுக்கும்.

நட்பின் மூன்றாம் பரிணாமம் சுவாரஸ்ய மானது. "Just-A-minute நட்பு"
முன்பெல்லாம் ரயில் சிநேகிதம், கடித வழி சிநேகிதங்கள் நட்பின் ஆழத்தை புரிய வைத்தன. கடிதங்கள் இ-மெயில் களாகின. (காதல் கோட்டை => காதல் தேசம்). இப்பொழுது இணையம் கைக்குள் சுருங்கிய பிறகு வரிகளின் எண்ணிக்கை குறைந்து, வார்த்தைகள் சுருங்கிப்போயின. அனால், நட்பு வட்டம் மட்டும் நீள்கிறது. 


"The Social Networking Era". இது கூட நன்றாகத்தான் உள்ளது. ஒரே ஒரு சொடுக்கு நம் நட்பினை தீர்மானித்து விடுகிறது. பேஸ்புக், டிவிட்டர் வரிசையில் வலைபூத்தளங்களுக்கு என் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். செமஸ்டர் பரிச்சை நடு இரவில் கூட என் கருத்துகளை பகிர்வதற்கு ஒரு வட்டம் இருக்கிறது என்ற நட்புணர்வு என்னை சிறகடிக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் கூட பகிர்தலில் தான் சக்கை போடு போட்டுகொண்டிருக்கின்றன. எனவே, உங்களது அன்றாடத் தேடல்களில் மத்தியில், சந்தோஷங்களையும், துக்கங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தினம் தினம் காலைப்பனி முதல் இரவு நேரத்து வண்டுகளின் ரீங்காரம் வரை ரசித்துப்பகிர்வதர்க்கு  பல விஷயங்கள் உள்ளன. பகிருங்கள், பேஸ்புக் இல் அல்ல, உங்கள் நட்பிடம்.                                                 வெள்ளி, நவம்பர் 04, 2011

என் விடுதி சாளரமும் மழைத்துளியும்..

அடை மழை வெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறது. சாளரத்தின் வழியே ஏக்கத்துடன் நோக்குகிறேன். நான் இருப்பதோ மூன்றாம் மாடியில். மழை சாரலுக்காக ஏங்கி கையை விட்டு எம்பிப்பார்த்தும் முடியவில்லை. பச்சை பசேல்  செயற்கை புல்வெளி, இரும்பு வேலியில் படர்ந்திருந்த செடியின் குட்டியூண்டு பிங்க் நிற செம்பருத்தி. தொலைவில் பரந்து விரிந்த கால்பந்து மைதானம். தேங்கி நிற்கும் மழை நீர். இதற்கு மேல் எனக்கு வர்ணனை வர வில்லை.

கிராமத்து மழை நாட்கள் எப்படி இருக்கும் தெரியுமா? சூரிய வெளிச்சம்  மங்க ஆரம்பித்த உடனே தாத்தா, பாட்டிகள், கண்ணுக்கு கையால்  குடை பிடித்து வானத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, மழை நிலவரம் கூறுவார். 'மேகம் கலந்ஜிருக்கு, தெக்கால பெய்யுது, வானம் கருக்குது, வெரசா வேலைய முடிங்க' என்று ஏகப்பட்ட வர்ணனைகள், கட்டளைகள். சன் டிவி ரமணன் வாக்கு கூட பொய்க்கும் ங்க, எங்க தாத்தா, பாட்டி வாக்கு நிச்சயம் பொய்க்காது. விறகு எடுத்து வைக்கறது, மாடுகளை தண்ணீர் காட்டி கட்டுவது, ஆடுகளை பட்டிக்குள் அடைப்பது என்று ஒரு பக்கம், ரோஜா செடி மொட்டுக்களை பறித்து வைப்பது ஒரு பக்கம், டிவி, பிரிட்ஜ் வயர் பிடுங்கி விடுவது ஒரு பக்கம், சிம்னி விளக்கு தேடுவது, கப்பல் விட காகிதம் தேடுவது.. இப்படி எத்தனை  களேபரங்கள், எத்தனை பரபரப்புகள்..


மழை தூரலுக்காக தலையில் சாக்கு போர்த்திக்கொண்டு செல்லும் ஒரு கூட்டம், மழை  க்கு ஒதுங்கும் அந்நிய விருந்தாளிகள், அவர்களின் ஏதேனும் ஒரு வழி சொந்தத்தை கண்டுபிடித்து உரிமையோடு பேசும் பாட்டி, 'இந்த பூனையை காணோம், எங்கே குளிருக்கு நடுங்கிக்கொண்டிருகிறதோ' என்று கரிசனப்படும் தாத்தா, கப்பல் விடலாம் அன்று நச்சரிக்கும் தம்பி, சளி பிடிச்சுக்கும் என்று அதட்டும் அப்பா, என்ன வேணும் பஜ்ஜியா, போண்டாவா என்று குறிப்பறிந்து கேட்கும் அம்மா..

வாளியில் மழை நீரைப்பிடித்து முகம் கழுவிய அந்த 'சில்' ஸ்பரிசம், சிம்னி விளக்கில் குளிர் காய்ந்த கதகதப்பு, ஆடு மாடுகளின் வித்யாசமான கூப்பாடுகள், இப்படியே மழை பேஞ்சா ஸ்கூல் லீவ் விட்றுவாங்களோ, தும்மல் வருதே நாளைக்கு காய்ச்சல் வந்துருமோ என்ற சின்ன சின்ன சந்தோஷமான  எதிர்பார்ப்புகள்...இப்போது இதை எல்லாம்  எங்கோ தொலைத்து விட்டேனா??

நடு இரவில் துண்டிக்கப்படும் மின்சாரம், அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு நிற்கும் குழந்தை போல ஆடு மாடுகள், நிறம் மாறிய பண்ணை தண்ணீர்,  சில்லிட்டு  வரும் குழாய் நீர், தலை துவட்டாமல் நிற்கும் மரங்கள், உரல் நீரை வடித்து மழை அளவைக் கூறும் பாட்டி, இன்றைய வயல் வேலை கெட்டு விட்டது என்று வருந்தும் தாத்தா.. மழையால் தங்கள் வயல் வேலை கெட்டு விட்டது என்று குற்றம் சொல்லும்போது கூட, 'இன்றைய தினம் நமக்கு ஓய்வு' என்று அவர்களின் மனமும், உடலும் நிச்சயம் ஆசுவாசப்பட்டுக்கொள்ளும். 

காலையில் பெர்மிசன் போட்டு விட்டு வரும் சூரியன், தாமதமாக வரும் பள்ளி பேருந்து, வருமா வராதா  என்ற நிலையில் எங்க ஊர் மினி பஸ், மேலும் உற்சாகமாய் வரும் பண்பலை வர்ணனைகள்... அடுத்த நாள் சோம்பல் கூட சுகம் தானே??இன்று, மழை நாளில் சூடாக பஜ்ஜி சாப்பிடலாம் என்று Cafeteria போனால் தீர்ந்து போயிருக்கும். இன்னும் பல நாட்கள் மழை பெய்ததா இல்லை செடிக்கு தண்ணீர்  விடப்படிருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கும். பின் கைபந்து மைதானம் உண்மையை உரைக்கும். 

சதா சாளரங்களை அடைத்துக்கொண்டு Head-set மாட்டிக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கும் பிடித்து விட்டதா? புரியாமல் எதிர்பார்கிறேன் அடுத்த மழை நாளுக்காக.. 

சனி, அக்டோபர் 29, 2011

விளம்பரங்களில் வாழ்க்கை

ஒரு நகரம் வண்ணமயமாக செழிப்பாக இருப்பது தான் அந்த நகரத்தின் அழகே. எங்கள் ஈரோடு மாநகரில் அந்த செழிப்பும் வண்ணமும் இருக்கிறது என்று பெருமை கொள்கிறேன்.

       'எங்கு நோக்கினும் சக்தியடா' என்பது போல், எங்கு நோக்கினும் விளம்பரத்தட்டிகள். புதிய வரவு சீரியல் முதல் பள்ளிக்கூடம் வரை, ப்ளெக்ஸ் தட்டிகளில் தங்கள் அருமை பெருமைகளை விவரிக்கின்றன.

இப்போதெல்லாம் பேருந்துப் பயணங்களில் புத்தகம் படிப்பதை விடவும் விளம்பரங்களை வேடிக்கை பார்ப்பது என் விருப்பமான பொழுது போக்காகிவிட்டது.

    உங்கள் விருப்பமான நடிகர் அறிமுகப்படுத்தும் செல்போன், வீரர்களின் பைக் சாகசங்கள், விளையாட்டு வீரர்களின் கையெழுத்து சிபாரிசோடு வரும் ஊட்டச்சத்து பானங்கள், நடிகைகள் கொண்டாடும் பட்டுபுடவைகள். இவை அத்தனையும் தாண்டி விளம்பரங்களில் ரசிப்பதற்கு ஓர் விஷயம் உள்ளது. 'குழந்தைகள்'.

முன்பு இருந்ததை விட, இப்போதெல்லாம் விளம்பர உத்திகள் மாறி விட்டன. இட்லி பொடி முதல் TMT கம்பிகள் வரை குழந்தைகள் ராஜ்ஜியமே. 'கறை நல்லது தானே?' என்ற கேள்விகளிலும், 'நான் ரொம்ப பிஸி' என்ற பெரிய மனுஷ தனத்திலும், 'மெசினிற்கு கை ஒட்ட வைக்கும்' சாமர்த்தியத்திலும், 'அப்படியே சாப்பிடுவேன்' என்ற சுட்டித்தனத்திலும், உலகின் அத்தனை அழகும் குழந்தைகளிடமே என்று பொறாமை கொள்ள வைக்கின்றன. அதுவும் CBSE பள்ளி விளம்பரங்களில் குட்டியூண்டு டாக்டர், எஞ்சினீயர் எல்லாம் கொள்ளை அழகு.


ஆனால், இந்த விளம்பரங்களில் தான் எத்தனை முரண்பாடுகள்? 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' விளம்பர தட்டிக்கு அருகில் தான் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளின் விளம்பரங்கள்,கோவில் கும்பாபிஷேக அறிவிப்பு போஸ்டர் களும் ஆபாச பட போஸ்டர் களும் ஒரே சுவற்றில் தான் ஒட்டப்படுகின்றன. 1 ரூபாய் அரிசி விற்கும் அதே தெருவில் தான் organic அரிசி கிலோ 45 என்று விற்பனை ஆகிறது. 

'விபத்தா? உடனடி சேவை' என்ற அரிமா சங்க விளம்பரம் துரு பிடித்த இரும்பு போர்டிலும், மித மிஞ்சிய திறன் கொண்ட புதிய அறிமுக பைக் கின் அறிவிப்பு  பிரமாண்டமாயும் இருக்கின்றன.

நீங்களே கவனித்து பாருங்களேன். காச நோய்க்கோ, தொழு நோய்கோ இலவச சிகிச்சை என்று ஆரம்பிக்கும் விளம்பர அறிவிப்புகள், ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு, 999 ரூபாய்க்கு செல்போன், 777 ரூபாய்க்கு branded சட்டை, 555 ரூபாய்க்கு பட்டுபுடவை, 111 ரூபாய்க்கு முழு டாக்டைம் அன்று பல கதைகள் சொல்லும்.'ஐ லவ் யு ரஸ்னா' வில் தொடங்கி, 'ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்' என்று சக்கை போடு போடுபவை சந்தேகமே இன்றி தொலைகாட்சி விளம்பரங்கள் தான். ஒரு 15 நிமிட இடைவெளியில் நமது பல வருட கனவுகளை ஆசை காட்டி விட்டு செல்லும். 1.5 லட்சங்களில் ஆரம்பிக்கும் சொகுசு கார்கள், 3000 களில் ஆரம்பிக்கும் தொடு திரை கை பேசிகள், 19,999 களில் வைர ஆபரணங்கள், மாடுலார் சமையல் அறைகள், சீறிப்பாயும் பைக்குகள், சில லட்சங்களில் காலி மனைகள், பல லட்சங்களில் குடியிருப்புகள், வெளிநாட்டு முதலீடுகள், படிப்புகள்.... இப்படி எண்ணற்றவை. இவை ஒவ்வொன்றும் சராசரி இந்திய குடி மகனின் கனவுகள்.

தொலைகாட்சி விளம்பரங்களை விட வானொலி விளம்பரங்கள் சுவாரசியமானவை.பெரும்பாலும் இவை ஏதேனும் திரைப்பட பாடல் மெட்டுக்களாக இருக்கும். அந்த இசை அமைப்பாளரே வந்து மெட்டு போட்டது போல இருக்கும். மிக சாதாரணமான கணவன்,  மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள், இளசுகளின் பகிர்வுகள், இப்படி எதோ ஒன்றை வைத்தே அந்தத் தயாரிப்பை விளம்பரப்படுத்தி விடுவார்கள். 

'வாங்கிடீங்களா வாங்கிடீங்களா மான் மார்க் சீயக்காய் தூள்'

'குஷியான சமையலுக்கு ருசியான சங்கு மார்க் இட்லி பொடி'

'வகை வகையா சாபிடலாம் வயிறு நிறைய சாப்பிடலாம்' 

இதெல்லாம் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்கும் வாசகங்கள்.

சில சமயம் இந்த விளம்பரங்கள் கூட நம்மை கடுப்பேற்றும். கொஞ்சம் ஊன்றி கவனியுங்களேன், நிச்சயம் ஒவ்வொரு விளம்பரங்களிலும் ஒரு சின்ன ஏக்கம், குட்டியூண்டு எதிர்பார்ப்பு, பளிச் கற்பனை, நிறைய சந்தோசம், பொங்கும் உற்சாகம் என நிச்சயம் நிரம்பி இருக்கும்.வெள்ளி, அக்டோபர் 14, 2011

இவ்வளவு தான் வாழ்க்கையா..?!

வாழ்க்கை - சந்தோஷமாக ஒவ்வொரு நொடியும் அனுபவித்து உற்சாகம் குன்றாமல் வாழவேண்டியது. சுதந்திரத்தில் பறவையாகவும் பொருள் தேடலில் எறும்புகள் போலவும், அனுபவித்தலில் வீட்டு செல்லப் பிராணிகள் போலவும் நாம் வாழும் வாழ்க்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா என்ன??

பள்ளிக்காலம் முழுக்க பெற்றோருக்காக, கல்லூரி காலம் முழுக்க வேலைக்காக , பின் எஞ்சி யுள்ள காலம் முழுவதும்?! -  பணத்திற்காகவா??
எதோ ஒரு வெளிநாட்டு நிறுவனம் நம்மை  வைத்து நம்மை யறியாமல் நம் திறமைகளை உறிஞ்சி பல லட்சங்களை சம்பாதிக்கிறது. அந்த லட்சத்திலிருந்து கிடைக்கும் ஒற்றை இலக்க சதவிததிற்காகவா  இரவும் பகலும் அல்லாடுகிறோம்?


ஆயிரங்களில் சம்பாதித்து படித்த முதலை எல்லாம் எடுத்து பின் அந்த ஆயிரங்களை லட்சமாக்கி அந்த லட்சங்கள் கோடிகளை எட்டும் வரை கண் மூடி உழைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும் போது நரையோடிக்கொண்டிருக்கும். எஞ்சி நிற்பதென்னவோ வருமான வரி கழிவிற்காக நாம் போட்டு வைத்திருந்த காப்பீடுகளும் முதலீடுகளும் தான்.

மகிழ்ச்சி என்பது வார இறுதியில் போகும் சினிமா விலோ , பொழுது போக்கு  பூங்காவிலோ, மாத  இறுதியில் போகும் பார்ட்டி யிலோ கிடைக்காது. ஏறத்தாழ இன்று அனைவரும் ஆர்பரிபிலேயே குதூகலம் அடைகின்றனர். மிரட்டும் ஒளி விளக்குகள்,  இரைச்சல் இசை, நவ நாகரிக கூட்டம், மற்றும் பல. அதில் நிறைவடைகிறதா உங்கள்  மனம்? அதிகாலை தலை வலியும், அடித்துப் போட்ட உடலுமே மிச்சம். இது  ஏதோ இன்றைய (நவ நாகரிக) சாமியார்களின் பிரசங்கம் மாதிரி இருக்கிறது என எண்ண வேண்டாம். உண்மையில் அவர்கள் கூறுவது போல, தேடல் தான் வாழ்க்கை. ஆனால் அது ஒரு போதும் பணத்தேடலாகி விடக் கூடாது.


அதிகாலை மங்கிய வெளிச்சத்தில், நிறைவாக ஒரு நடை, அவ்வப்போது எடுத்து பார்க்க நம்பர்களின் நினைவுகள் கிறுக்கல்களாக, பார்த்து பார்த்து செய்யும் உணவுகள், மிதவேகத்தில் ஊர்ந்து செல்லும் பயணங்கள், நம் பார்வையிலேயே நம்  ஸ்பரிசத்திலயே வளரும் வீட்டு செடிகள், அவசரமின்றி கிளம்பும் திங்கட்கிழமை, ஆவலுடன் எதிர்பார்க்கும் வெள்ளிக்கிழமை கோவில் மணி ஓசைகள், கைக்குட்டையில் நாமே போடும் தையல் பூக்கள், அறைக்கதவில் ரசனையோடு நாம் வரைந்திருக்கும் ஓவியங்கள், தினசரி யில் வரும் பொன் மொழிகள், கவிதைகள், நாள் பழங்கள், விளம்பரங்களில் வரும் குழந்தைகளின் கொஞ்சு மொழிகள், ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள், அனுபவித்து செய்யும் வீட்டு வேலைகள், ரசித்து செய்யும் வீட்டு அலங்காரங்கள், அடிக்கடி நினைவு கூறும் பழைய புகைப்படங்கள், வயதானவர்களோடு பேசும்போது நமக்கே அந்நிய மாகி விடும் நம் உரக்கப்பேச்சுகள், 'அட' போட வைக்கும் குழந்தைகளின் பெரிய மனுஷத்தன மான பேச்சுகள், வாவ் சொல்ல வைக்கும் சாலை ஓர பூக்கள், எண்ணற்ற  ஆச்சர்யங்கள் இருப்பது தானே வாழ்க்கை??


இப்போதெல்லாம், நம் விருப்பங்களை விட நம்மை சுற்றி இருப்பவர்களின் விருப்பங்களையே மதிக்கிறோம், உடை விஷயத்திலும் சரி, கொண்டாட்டங்களிலும் சரி.ஏதோ ஒரு உடை அது நமக்கு பிடிக்காவிடினும் 'Trend' என்ற பெயரில் அதையே நமது விருப்பமாக்கிகொள்கிறோம். இங்கே தான் நம் விருப்பத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுகிறது.

 அந்த இடைவெளியில் தான் ஊடகங்கள் நுழைந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. நிறைய சமயங்களில் விளம்பரங்களின் பின்னே நாம் ஓடுகிறோமா? என்ற எண்ணம் தோன்றும். எது எப்படியோ, நொடி முள்ளோடு ஓடாமல், இனியேனும் மணி முட்களோடு ரசித்துக்கொண்டே துரத்தி விளையாடலாம்.. நான் மிகவும் ரசித்த விளம்பரத்தில் வரும் வாசகம், முத்தாய்ப்பாக, 

" How much you earn should not decide how much you smile! "

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பத்து வயது குழந்தையாக விழைகிறேன்..

கல்லூரி படிக்கும் எந்த இளவட்டத்தையாவது உங்கள் பொழுது போக்கு என்ன என்று கேட்டால், "Reading books, Browsing, Hearing music" னு சீன் போடுவாங்க. தம்பி, ரெசுமே கு எல்லாம் கேக்கல, பொதுவா சொல்லுப்பா' னா, "படம் பாப்போம், கிரிக்கெட் விளையாடுவோம், தூங்குவோம், போன் கடலை, மெசேஜ் கடலை" னு சொல்வாங்க. இப்ப இருக்கின்ற குழந்தைகளை கேட்டால், "activity note' இல் picture ஒட்டுவோம், Play station இல் விளையாடுவோம், CNN பாப்போம்" னு சொல்வாங்க. நான் 10 வயச இருக்கும் போது எங்க உலகமே வேற. சரியான எடக்குநாட்டான் னு நினைக்காதிங்க. எங்க உலகத்திலயும் Amusement park, Activity book... எல்லாமே இருந்துச்சு.. 

இப்பவெல்லாம் பொம்மை களுக்கு கூட brand name பார்த்து தான் வாங்கறோம். அனால், எங்க brand எப்பவுமே களிமண், மணல் தான். ஆனால், நாங்க பீச் ல பொய் மக்(mug) எல்லாம் வச்சு விளையாண்ட தில்லை. கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர் வச்சு இட்லி சுட்டிருக்கிறோம், அதில் கோவைப் பழங்கள், மணத்தக்காளி பழங்கள் வைத்து ரசனையோடு பரிமாறி உள்ளோம். 


நெல் வயல் சேற்று மண்ணைப் பதப்படுத்தி, பிசைந்து, அம்மி, செக்கு, அண்டா, குண்டா என எல்லாமே செய்வோம். சட்டை எல்லாம் சேறு குழப்பி, கை கால் எல்லாம் மண் படிந்து, 'கோவேறு கழுதை' என திட்டு வாங்கிய காலமெல்லாம்,  'Short-term memory loss' வந்த கூட மறக்காது.

இந்த செற்றைஎல்லாம் மோட்டார் தண்ணியில் கழுவி, ஒரு அரை மணி நேரம் ஆட்டம் போட்டு விட்டு கிணற்றில் குதிப்போம். அங்க தான் எங்க ஊரு வாண்டுகள் கூடமே இருக்கும். சுரை புருடை, கயிறு கட்டி பழகு கின்ற கூட்டம், புதுசா நீச்சல் கத்துக்கிட்டு ஒரு ஓரமா நீச்சல் அடிக்கின்ற ஒரு கூட்டம், ஒரு சில எக்ஸ்பேர்ட்ஸ் உயரமான இடத்திற்கு பொய் சாகசம் எல்லாம் பண்ணி வித்தை காட்டுவாங்க. கிட்டதட்ட 2 மணி நேரம், உடம்பெல்லாம் வெளுத்து, விறைத்துப் பொய், கினத்துக்கரர் வந்து திட்டவும், கூட்டம் கலைந்து விடும். வீட்டுக்கு பொய் பழைய சோறில் மோர் கரைத்து வெங்காயம் கடித்து 2-3 டம்ளர்  குடிச்சிட்டு ஆசுவாசமா கட்டில்'ல படுத்துட்டு கொஞ்ச நேரம் டிவி பாப்போம். டிவி னா CNN, Disney லாம் இல்லைங்க, DD1 ல புரியாத பாஷை ல ஏதோ நாடகம் போட்ருப்பான், அதை ஒரு அரை மணி நேரம். அதுக்குள்ள எங்க செக்கு, அம்மி எல்லாம் காய்ந்துருக்கும். அதை எல்லாம் மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டியில் போட்டு பத்திரபடுத்தி விட்டு, அதுக்கு மேல் ஒரு பழைய சாக்கை போட்டு, எவருக்கும் சந்தேகம் வராத படி , நைசாக நழுவி விடுவோம். 

பின், தென்னந் தோப்பிலோ, அல்லது ம மாற நிழலிலோ கட்டில் போட்டு பழைய நோட்டு, கதை புத்தகங்கள், கொண்டு பொய், சிவப்பு பேனாவில், டிக் போட்டு விளையாடுவோம், அதுவும் மிஸ் மாதிரி கையெழுத்து எல்லாம் போட்டு பாப்போம். அதுவும் போர் அடிச்ச, இலையை காய வச்சு, பழைய சோறு போட்டு நோட் ல ஒட்டி கலர் கலர் ஆ கோலம் போட்டு வச்சுப்போம். வீட்டுக்கு வரும் லெட்டர் இன் ஸ்டாம்ப், கடலை மிட்டாயில் வரும் சாமி படம், ஆசை மிட்டாய் காகிதம், பென்சில் சீவி வர இறகு, கோழி இறக்கை, ஐஸ் கிரீம் குச்சி, செய்தித்தாள் நிகழ்வுகள் னு ஏகப்பட்ட activities செய்வோம். அதையெல்லாம் ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட காட்டி குட் வாங்குறதுல அவ்ளோ சந்தோசம் !!!


சிறுவர் மலர் புத்தகத்தில் வரும் செய்து பாருங்கள் எல்லாம் செஞ்சு பார்த்து வீட்டில் அங்கங்கே ஒட்டி திட்டு வாங்குவ தெல்லாம் நினைத்தால் இன்னும் சிறு பிள்ளை யை மாறிடத் தோனும். 

தென்னங்கீற்றில் கடிகாரம் செய்து கடிக்கிறது, இளநீர் ல பப்பாளி தண்டு போட்டு உறிஞ்சுவது, நுங்கு சாப்பிட்டு விட்டு அதில் வண்டி செய்து ஓடுவது, டியர் இல் தூரி கட்டி விளையாடுவது.. இப்படி நான் அனுபவிச்ச விஷயங்கள் எத்தனை எத்தனையோ..

சனி, அக்டோபர் 01, 2011

பலப்பம் முதல் பேஸ்புக் வரை..

'பலப்பம்' என்றதும் குழம்ப வேண்டாம். பலப்பம் னா சிலேட் பென்சில். சிலேட் டில் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தொடங்குகிறது, மொழியோடு நாம் கொண்டிருக்கும் பயணம்.(பள்ளி  செல்லும் குழந்தைகளிடம் கூட இப்பவெல்லாம் சிலேட் இல்லைங்க. சிலேட் பென்சில் இருக்கான்னு கேட்டுப் பாருங்க. HB ஆ?? 2 HB ஆ? னு கேட்பாங்க.  )
 'A','B','அ','ஆ' என்று ஒற்றை எழுத்தில் தொடங்கிய நம் எழுத்துக்கள், இன்னும் ' ',' ',' ' என்று வளராமலேயே இருக்கிறதா? அல்லது வளர்ந்து முதிர்ந்து விட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.'வணக்கம்!! நல்லாருக்கிறீங்களா ? வீட்டில் எல்லோரும் சவுக்கியமா? அப்புறம், எப்படி போய்க்கொண்டிருகிறது வாழ்க்கை??' என்று உறவு கொண்டாடிய கரிசனமான உபசரிப்புகளை 'whats up??' என்ற இரு வார்த்தைகளாய் சுருக்கி, அதையே 'watz ap?' என்று அர்த்தமே இல்லாமல் உருக்கி விட்டோம்.

வார்த்தைகள் மட்டுமா சுருங்கி விட்டன? வாழ்க்கையும் தான். பிறந்த நாளில் இருந்து, பொங்கல், தீபாவளி வரை வாழ்த்துக்கள் எல்லாம் இணையத்திலே தான். குறுந்தகவல்கள் கூட சோடை பொய் விட்டன. இணையத்தில் வாழ்த்துக்கள் தட்டச்சு செய்வது கூட இப்போதேல்லாம் குறைந்து விட்டன. பேஸ்புக் இல் like, ட்விட்டரில் share, கூகுளில் +1 என்று ஒரு சொடுக்கில் எல்லாம் முடிந்துவிட்டது. இதுவேண்டுமானால், இணையத்தின் வளர்ச்சியாக இருக்கலாம், ஆனால், வாழ்க்கையின் வீழ்ச்சியே!!


3 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 150 ரூபாய் வரை வாழ்த்து அட்டைகள் வாங்கி பொங்கல் பானை, கரும்பு, கோலம் எல்லாம் வரைந்து 'பொங்கல் வாழ்த்துக்களை' வித விதமாக எழுதி இப்படிக்கு என்று ஒரு லிஸ்ட் ஐயே எழுதி        கடைசியில் உறையில்  'Open with Smile :) ' என்பதை மறக்காமல் குறிப்பிட்டு பல விதமான தபால் தலைகள் வாங்கி, தாமதமாகி விட்டால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கையோடு தலைமை தபால் நிலையத்திற்கே சென்று அனுப்பிய காலமெல்லாம் மலை ஏறிவிட்டது.

அதுவும் தீபாவளி என்றால் இன்னும் குதூகலம்.வாழ்த்து அட்டைக்குள் சுருள் கேப் வைத்து அனுப்பி அடித்த லூட்டிகள் எல்லாம் பல. தீபாவளி க்கு பட்டாசு வாங்குவதில் ஆரம்பிக்கும், நண்பர்களுக்கும்  நமக்கும் இடையேயான போட்டி. 
அவனிடம் இல்லாத மாதிரி பட்டாசு வாங்க வேண்டும் என்று கடை கடையை ஏறி, மூலை முடுக்கெல்லாம் துலாவி வாங்கி வந்தால், பக்கத்து வீடு பட்டாசு சத்தம் ஊருக்கு வெளியே வரும் போதே கேக்கும். நமக்கு அப்படியே பக்குன்னு ஆய்டும்.

அவசர அவசரமாக பட்டாசு களை பிரித்து வைத்து வெளியே வெயிலில் காய வைத்து, 3 நாளைக்கு தேவையானவற்றை பிரித்து எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அப்புறம், போட்டி போட்டுக்கொண்டு பட்டாசுச் சத்தம் விண்ணை பிளக்கும். போட்டி எல்லாம் முதல் நாள் மட்டும் தான், அப்புறம் என்ன, தேர்தல் கூட்டணிக் கட்சிகள் மாதிரி ஒன்னுசெந்துட்டு அடிக்கிற ரவுசு இருக்கே!! இது தாங்க நெஜ தீபாவளி...எப்படியும், தீபாவளி க்கு 5 நாள் லீவ் வரும். அம்மாய் வீட்டில் சிக்கன் , மட்டன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு தேம்பாய் பேச ஆயிரம் கதைகள் இருக்கும்..

இப்பவெல்லாம் பேஸ்புக் தீபாவளி தான். 2 நாள் லீவ் ல் 'Am going home town 4diwali.. happy diwali guys..' னு Status போட்டுட்டுபோனோம் னா, மத்தாப்பு பிடிக்கிற மாதிரி 4 போட்டோ எடுத்து போட்டுட்டு, ஷங்கர் பேட்டிய பார்த்துட்டு ட்வீட் பண்ணிட்டு , புது ரிலீஸ் படம் பாத்துட்டு, நல்ல சாப்டுட்டு லீவ் முடிஞ்சு status அப்டேட் போடுவோம், "d most wonderful day, dude!! bac 2 wrk'.. அதையும் 10 பேர் like பண்ணுவாங்க.. 

முடியல ங்க.. :(ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

சொந்த ஊருக்கு ஒரு நடை போயிட்டு வாங்க..

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், கடைசி வரை சொந்த ஊரிலேயே வாழ்வது   என்பது முடியாத காரியம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம், வேலையில் பணி மாற்றம் என்றால் மட்டும், சொந்த ஊரை விட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த நிலை  கொஞ்சம் மாறி, வேலை என்றாலே வெளியூர் தான் னு ஆரம்பிச்சு இப்பவெல்லாம் ஐந்தாம் வகுப்புக்கே வெளியூரில் விடுதி வாழ்க்கை தான். 

இன்றைய காலகட்டத்தில் எல்லாருமே, புதியவற்றை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். புதிய தேடல், புதிய வாழ்க்கை முறை, புதிய நண்பர்கள்.. இன்னும் பல. ஒரு நாள் ஒரே ஒரு நாள் மட்டும் நாம் தவற விட்ட விஷயங்களை நினைவு கூர்ந்தோம் என்றால், பல நினைவுகள் இறக்கை கட்டி நம் கண் முன்னே வரும்.


வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருப்பவர்கள் ஊருக்கு வரும் வழியைபார்த்தாலே நிறைய மாற்றங்கள். புதுப்பிக்கப்பட்ட அல்லது மிகவும் பழுதடைந்த சாலை, புதிய தெரு விளக்குகள், ஊராட்சி மன்ற கட்டிடத்தில் பெயர் பலகை மாற்றம், புதிய குடிநீர்க் குழாய்கள், வண்ணம் பூசி ஈர்க்கும் ஆரம்பப்பள்ளி, இன்னும் கொஞ்சம் தொப்பையோடு கெத்தாக சிரிக்கும் பிள்ளையார், பளிச்சென்று இருக்கும் வாய்க்கால்கள், புதிக முளைத்துள்ள வீடுகள், வெட்டப்பட்ட மரங்கள், உள்ளூர் சினிமா பட போஸ்டர் கள், வழியெங்கும் சிரிக்கும் சிநேகமான முகங்கள், ஐஸ்வர்யா ராய் சிரிக்கும் ப்ளெக்ஸ் போர்டுகள் இன்னும் எக்கச்சக்கமாய் பல. 

இதில் உறவுகளைத் தான் ரொம்பவே மிஸ் பண்றோம். சொந்த ஊரில் ஏதேனும் விசேஷம்  என்றால் எல்லாம் பார்த்த முகங்களாவே இருக்கும். ஆனால், யாரு பெரியம்மா, யாரு அத்தை முறைன்னே தெரியாது. அதுவும் நிறைய பேர், வாலண்டியரா வந்து, "கண்ணு.., நல்லாருகறியா?? நான் யாருன்னு தெரியுதா?" னு கேட்பாங்க. இன்னார் நீங்க, நல்லாறுகறிங்களா? னு திருப்பிக் கேட்டோம் னா, அவங்க முகம் மலரும் பாருங்க, நமக்கே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
இன்னும் சில பாட்டிகள், "சின்ன புள்ளயா இருக்கும் போது, உங்க அப்பன் (??!!) கூட வண்டியில் காட்டுக்கு வரும் போது பாத்தது, துளியூண்டு இருப்ப, இப்ப நல்ல வளந்துட்ட" னு சொல்லும்போது, பேரரசு படத்தில் வர மாதிரி பிளாஷ் பேக் நமக்குள்ளயே ஓடும்.


அதுவும் விசேஷ வீட்டில் சாப்பிடறது இருக்கே, வாழை இலை போட்டு வரிசையா உட்காந்தால், விசேஷ கவனிப்பு நமக்கு கண்டிப்பா இருக்கும். "ஏம்மா, ஒரம்பறைய கவனிங்க","மாப்பிள்ளைக்கு இனிப்பு சேத்து வைங்க" னு ஆளாளுக்கு உத்தரவு போடுவாங்க. அதுவும் எங்க ஊர் பக்கம் பந்தியில் அப்பளம் போட்டு பழம், சர்க்கரை போட்டு நொறுக்கி பிசைந்து சாப்பிடுவோம். ரொம்ப நல்லாருக்கும். எங்க கல்லூரியில் அதை சொன்னால் சிரிக்கிறாங்கப்பா. நீங்க பப்ஸ் க்கு சாஸ் ஊத்தி சாப்பிடுவதற்கு இது ஒன்னும் மோசம் இல்லை.

அம்மா வோட பருப்பு சாம்பார், அத்தையோட புளிக்கொழம்பு, சித்தி வீட்டில் சிக்கன், அம்மாயி வீட்டில் வடை, பாயசம், பெரியம்மா வீட்டில் முட்டை குருமா ' ன்னு ஸ்பெஷல் சுவை நம்ம ஊர் சாப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
வாகன நெரிசலே இல்லாத ரோட்டில் குட்டி பசங்களுக்கு சைக்கிள் கத்துக் குடுப்பதாகட்டும், சுரை புருடை கட்டி நீச்சல் கத்துக்குடுப்ப தாகட்டும், நுங்கு இல் வண்டி ஓட்டுவ தாகட்டும், கோவைக்காய்க்கு கண், மூக்கு, மீசை வைத்து விளையாடுவதாகட்டும், தென்னை ஓலையில் கடிகாரம் செய்து கட்டிக்கரதாகட்டும், இளநீர்க்கு பப்பாளி த் தண்டு போட்டு குடிப்பதாகட்டும், நம்ம ஊருக்கு நிகர் நம்ம ஊர் தான்..

இனி இவ்வளவையும் மிஸ் பண்ணுவிங்க?? விடு ஜூட்...........வியாழன், செப்டம்பர் 15, 2011

சாமானியர்களின் விற்பனைத்தந்திரங்கள்

பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் ஆகியவற்றில் அடிக்கடி விற்பனைத் தந்திரங்களைக் காண்போம். ஆடித் தள்ளுபடி, தீபாவளி டமாக்காக்களைத் தொடர்ந்து இன்றைக்கெல்லாம் வாரக்கடைசிக்குக் கூட தள்ளுபடி கொடுத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். 

இவர்களது விளம்பரங்களுக்கு எல்லையே இல்லை. லோக்கல் டிவி யிலிருந்து சாட்டிலைட் டிவி வரை இவர்கள் ராஜ்யமே. வருங்காலத்தில், கனவுகளுக்குக்  கூட உரிமம் பெற்று அதிலும் விளம்பரங்களை ஒளிபரப்புவார்கள். அவர்களும் பாவம், எத்தனை தந்திரங்களைத்தான்   கையாளுவார்கள்??உண்டியல் குடுக்கிறோம், மரம் நடுகிறோம் என்றெல்லாம் தொடங்கி கோடைக்கு கூழ் வரை கொடுத்து பார்த்தாவது கூட்டத்தை அள்ளி விடுகின்றனர்.  பளிச்சென நடிகைகள் பளபளக்கும் (அரைகுறை) ஆடைகளுடனும் ஜொலிஜொலிக்கும் நகைகளுடனும் பிரமாண்டமாய் வரவேற்று வாங்கிய பல லட்சத்திற்கு புன்னகைத்து, சிரித்து, ஆர்ப்பரித்து, நடனமாடி, ஆச்சரியப்பட்டெல்லாம் வசீகரித்து கூட்டத்தை வரவேற்பார். பிறகென்ன?? வியாபாரம் கன ஜோர் தான்..

ஆனால், சாமானியர்களின் வியாபாரத்தந்திரங்கள் சுவாரசியமானவை. வீடு வீடாக கீரை விற்பவர், தெரு தெருவாக ஐஸ் கிரீம் விற்பவர், வீதி வீதியாக பொறி விற்பவர், கூவிக் கூவி நடமாடும் பேன்சி கடை வைத்திருப்பவர், பேருந்துகளில் செய்தித்தாள் விற்பவர், அன்னாசி விற்பவர், NH ல் டி-ஷர்ட் விற்பவர், பஞ்சு மிட்டாய் விற்பவர் கூட வியாபாரி தான். அவர்களின் 
வியாபாரத்தந்திரங்களை என்றேனும் கவனித்திருகின்றீர்களா? ?

கீரை விற்கும் பாட்டியிடம் சில்லரைக்கோ அல்லது அதிக விலைக்கு பேரம் பேசுகையில், 'இதில் என்ன  கண்ணு எனக்கு கிடைசுறபோகுது??, நீ என் பொண்ணு மாதிரி' என்று உருகுவார். அவர் மனதாரச் சொன்னாரோ இல்லையோ, அந்த நொடியில் நம் அம்மா முகம் நம் மனதில் பளிச்சிடும். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்காகவாவது  அம்மா நம் நினைவில் இருக்க மாட்டார்கள்? அந்த நினைவிர்க்காகவே அடுத்த நாள் நம் மனம் பாட்டி யை எதிர்பார்க்கும், நம்மை அறியாமல்..அடுத்து, ஐஸ் கிரீம்!! என்ன தான் இப்ப எல்லாம் ஏ.சி பார்லர் ல ஐஸ் கிரீம் சாப்டாலும், ஐஸ் காரரிடம் வாங்கும் பால் ஐஸ் தான் என்னோட பேவரிட். செமையா இருக்கும். அதுவும் அவரோட ஐஸ் பெட்டி எப்படி இருக்கும் னு எட்டி எட்டி பாப்போம். ஆனா, இருட்டா புகை மட்டும் வரும். சில்லுனு அதை அனுபவிச்ச சந்தோசம், பூரிப்பு எங்க எல்லோர் முகத்திலையும் இருக்கும். சைக்கிளில் அவர் மாட்டி இருக்கும் பல பல வண்ணத்  தோரணங்கள், முன்னே தகர டின்னில் வைத்திருக்கும் கோன்கள், பீப்பி என்று ஷோ ரூம் குரிய அத்தனை அந்தஸ்துகளோடும் வருவார்.

வெள்ளை வெளேர் சாக்கு மூட்டையில், மொரு மொரு பொறிகள். சைக்கிள் முன்னே நாலைந்து பைகளில் பொட்டுக்கடலை, கார பூந்தி, அவல், நிலக்கடலை இத்யாத்திகள். பொறி வாங்க வரும் சுட்டி களின் பிஞ்சுக்கை நிறைய கடலையோ, பூந்தியோ கொடுபார். அடுத்த முறை அந்தக்கடலை காகவே தான் நண்பர் கூட்டத்தோடு பொறி வாங்க நிச்சயம் வாண்டுகள் வரும்.

4 மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஐயே தான் தள்ளு வண்டியில் கொண்டு வந்து விடுவர், எங்க ஊர் நடமாடும் பேன்சி தள்ளு வண்டிக்காரர். அதுவும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு நடிகையின் பெயரோடு, காரணங்கள் வேறு. 'குஷி' ஜோதிகா கிளிப் முதல் 'எங்கேயும் காதல்' ஹன்சிகா வளையல் வரை வைத்திருப்பார். இந்த ரசனையான விளக்கத்திற்காகவே ஏதாவது வாங்கத்தோணும். 


நான் ரொம்ப ஆச்சரியப்பட்டுப் பார்க்கின்ற விஷயம், பேருந்து நிலையத்தில் தினசரிகள் விற்பவர். சடசடன்னு, கம்பீரமா பத்தே நொடிகளில் செய்தி வாசிச்சுட்டு போய்டுவார். சன் டிவி தலைப்புச் செய்திகள் கூட இந்த அளவுக்கு இருக்காது. போஸ்டர் கிடையாது, காட்சிகள் கிடையாது, நடிகை கள் கிடையாது, பிரபலங்கள் கிடையாது, 'ஒன் மேன் ஆர்மி' மாதிரி அட்டகாசமா வித்துட்டு போவார். 

மற்று மோர் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், 'கையேந்தி பவன்' கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு குடம் வச்சு கலர் கலர் ஆ லைட் எல்லாம் போட்டு கல க்கிருபாங்க. இதையும் ரசிப்போமாக..!!

இவங்க வெளி நாடு போய் MBA எல்லாம் படிக்கல, B-ஸ்கூல் லையும் படிக்கல, இவங்க கம்பெனி க்கு மார்க்கெட்டிங் எக்ஸிகுடிவ் கிடையாது. ஆனால், ஒரு நிமிடத்தில் நம்மை ஈர்த்து விடுகின்றனர். 

பெரிய பெரிய விஷயங்களில் ஆடம்பரத்தை அனுபவிப்பதை விட, சின்னஞ்சிறு விஷயங்களில் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உணருங்கள். ஏன், அதிலிருந்து கூட ஏதேனும் ஒரு வாழ்க்கைப்பாடம் நமக்கானதாகவே இருக்கும்.


திங்கள், ஆகஸ்ட் 22, 2011

வணக்கம் தமிழகம்...

சன் டிவி இல் 'வணக்கம் தமிழகம்' னு ஒரு நிகழ்ச்சி வருமே, அதன் நேரடி ஒளிபரப்பை பார்த்து இருக்கீங்களா? எங்க ஊருக்கு வாங்க, நான் நேர்லயே காட்றேன். 
காலைல 5.30 க்கு பால் சொசைட்டி க்கு பால் கொண்டுட்டு போனால், கோவில் திண்ணை, பயணிகள் நிழல்குடை, ஆலமரத்து திண்ணை, வாய்கால் பாலம் நு மேடை ஏதாவது கிடைச்சுறும். முதல் 2 நிமிஷம் எதுவுமே பேசாமல், தொண்டையை செருமிகிட்டு இருப்பாங்க. அப்புறம் பாருங்க, சர வெடி தான்..
பெரும்பாலும் ஆரம்பிக்கின்ற முதல் விஷயம், 'நேத்து மார்க்கெட் ல மஞ்சள் என்ன விலை?', அப்புறம் பால், தக்காளி, தவிடு  னு போய் தங்கம், பெட்ரோல் ல வந்து நிக்கும்.


சும்மா விலையை பத்தி மட்டும் பேசிட்டு விட்ருவாங்க னு நினைக்காதிங்க. பீடி கம்பெனி எது நல்லாருக்கும், யாரு ஒரு நாளைக்கு எத்தனை குடிபாங்கன்னு நிலவரம் பார்த்துட்டு, சந்தைல தக்காளி யார் கிட்ட வாங்கினா நல்லாருக்கும் ஒரு அலசல் நடக்கும்.
அப்புறம், செல் போன். எவ்வளவு போட்டால், இவ்வளவு பணம் (talk value pa) ஏறுது, அதில் கடை காரனுக்கு கமிஷன் எவ்வளவு, யார் யாருக்கு என்ன என்ன, அவன் எப்படி சம்பாதிக்கிறான்'னு கணக்கு போடுவாங்க. வோடபோன் ஓட்டை போன் ஆகறதெல்லாம் இங்க தான்.
அப்புறம், இந்த நிழல் குடை கட்டினத்தில் குத்தகை காரர் எப்படி சம்பாதிக்கிறார் , ஊராட்சி தலைவர் கு என்ன பங்கு, MP, MLA வரைக்கும் கொண்டு பொய், தமிழக முதல்வரையே இழுப்பாங்க. அது கருணாநிதி னாலும் சரி, ஜெயலலிதா  னாலும் சரி, யாரும் தப்ப முடியாது.

அவங்களை விடுங்க, ஒபாமா வே சில சமயம் அல்லாடுவார். அந்த பேச்சு இப்படி ஆரம்பிக்கும், இன்னார் பேரன் போன மாசம் தான் வேளைக்கு போனான் , மாசம் 30,000 சம்பளம் வாங்கறான். அதெப்படி அவங்களுக்கு கட்டுமா? னு ஒரு கேள்வி வரும். அதுக்கு அப்புறம், இன்னார் பையன் அமெரிக்க வில் ஒன்றரை லட்சம் ம் பாங்க. அங்க தான் ஒபாமா அண்ணன் (அண்ணன் வேணாம், சித்தப்பா ) வருவார். அவர் வந்ததினால் வேலை போகுமாம், சம்பளம் குறையுமாம் னு சுவாரஸ்யமா போகும்.
இன்ஜினியரிங் படிச்சுட்டு நம்ம ஊர்ல வேலை கிடைக்காம எந்த பையன் இருக்கான், அவன் படிக்க எவ்வளவு ஆச்சு, நன்கொடை எவ்ளோ குடுத்தாங்க கிறதில் ஆரம்பிச்சு, அந்த கல்லூரி விடுதியில் தோசை சுட மெசின் இருக்கு கிறது வரை பேசுவாங்க. 

அப்புறம் ஒரு 2 நிமிஷம் இடைவேளை. மறுபடியும் தோசை ல வந்து நிக்கும். தோசை சாப்பிட்டா பசி எடுக்கறதில்லை, தேங்காய் சட்னி சாப்பிட்டால் நெஞ்சு கரிக்கிறது, டாக்டர் கிட்ட போனால் ஒன்னும் இல்லைன்னு சொல்றாங்க, நு சின்னதா ஒரு புலம்பல். (என்னங்க, எல்லா டாபிக் உம் வந்துருச்சா??)
இன்னைக்கு இது போதும் னு முடிவு பண்ணி, யாரோ ஒருத்தர் எந்திரிபாங்க, அப்படியே கூட்டமும் கலைந்து விடும்.
அப்புறம் என்ன?? நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 'தமிழ் மாலை' தான்..

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கல்வி - இப்படியும் இருக்கலாமே...

இந்த தலைப்பை பார்த்ததும் தெரிஞ்சிருக்கும், அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியா சமச்சீர் கல்விக்கு வருவாங்கன்னு. சமச்சீர் கல்வியை விமர்சிக்கின்ற அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது, 

ஒரு மாணவர் என்கின்ற முறையில் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்காக, இப்பொதுள்ள கல்வி முறையை நான் குறை கூற வில்லை. வெண் பொங்கலில் உள்ளது போல அங்கங்கே கொஞ்சம் (அதிகமான) மிளகுகள்! அதை விரும்பி உண்பவர்கள் வெகு சிலரே!! மிளகுகளை கலைத்து, இன்னும் கொஞ்சம் முந்திரி சேர்த்து, நெய் விட்டு, திருப்தியாக சுவையாக அளிக்கலாமே??!!


ஐந்தறிவு மிருகங்கள் கூட தன குட்டி களுக்குத் தேவையான வற்றையே முழுமையாக கற்றுக்கொடுக்கின்றன. காக்கை, குருவி கள், பறக்கவும், இரை தேடவும் மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. நீந்துவதற்கோ, ஓடுவதற்கோ கற்றுக்கொடுப்பதில்லை. ஆயினும், அவர்கள் உலகம் அவ்வளவு போட்டி நிறைந்ததல்ல. நம் உலகை சமாளிக்க அனைத்து த்துறையிலும் திறன் அவசியமே. அத்திறன் அரைகுறையாய் புகுத்தபடுகிறது என்பதே எனது வாதம். புகுத்தபடுகிறது என்பதை விட வலுக்கட்டயமாக திணிக்கபடுகிறது என்பதே சாலப் பொருந்தும். இப்போதெல்லாம், கல்லூரி ப்படிப்பு கூட, விருப்பதிற்கேற்ப  இருக்கிறது என்று எண்ணிகொள்ளலாம்.. (எண்ணம் மட்டும் தான்!! அவரவர் கஷ்டம் அவரவருக்கு :) ). ஆனால், பள்ளிபடிப்பு??

ஆக, எப்படி த்தான் இருக்க  வேண்டும் கல்வி?? அப்படி கேளுங்க.. எத்தனை குழு?? துணை வேந்தர், விரிவுரையாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் என் ஆய்வாளர்கள்.. இவர்களை  எல்லாம் கேட்கின்றீர்களே.. எதாவது மாணவர்களை கேட்கலாம் அல்லவா??


இயற்பியலில், பிரஷர் குக்கரில் ஆரம்பித்து, டிவி வரை எப்படி இயங்குகிறது என்று கற்றுக்கொள்கிறோம். 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவரிடம், டிவி எப்படி இயங்குகிறது என்று கேட்டால் விழிப்பார். ஆனால், அவருக்கு சந்தையில் இருக்கும் LCD, LED முதல் புதிய வரவு ஜப்பான் டிவி கள் வரை அத்துபடி. நான் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய வேண்டும் என கூறவில்லை, நான் படித்த அடிப்படை விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்றே கூறுகிறேன். 

வேதியிலில், Acid, Base என்று 2 தடிமனான புத்தகங்கள், பற்றாக்குறைக்கு குறிப்பு புத்தகங்கள் எல்லாம் ஏறத்தாழ 2.5 ஆண்டுகள் படித்து, தேர்வெழுதி, 6 மாதம் கழித்து, ஏதேனும் மருத்துவக்குறிப்பில் இந்த வார்த்தைகளை காண நேரிட்டால், புத்தகத்தின் அட்டையும், தடிமனும் மட்டுமே நினைவில் நிற்கும். அதன் பொருட்டா கற்கிறோம்?? 

எவ்வித கணக்கையும் கால்குலேட்டரிலும், கணினியிலும் ஏன் அபாக்கசிலுமே போடத்தெரிந்த நமக்கு மனக்கணக்குகளை ஏன் போடத்தயங்குகிறோம்?? ஏன் தடுமாறுகிறோம்??? ஏன் கால்குலேட்டரையே நாடுகிறோம்???

இந்த தடுமாற்றத்தை CBSE ஒ  Matric ஒ ஏன் சமசீர் கல்வியோ தர முடியாது. ஒரு மாணவன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறானெனில், அவன் CBSE யிலும், தடுமாறி       
உரையாடு கிறான் என்றால் Matric பள்ளியிலும், ஆங்கிலத்தை லட்சியம் செய்யாமல் , தமிழில் உரையாடு கிறான் என்றால் அரசு பள்ளியிலும் பயின்றவனாக இருக்க வேண்டும். முதற்கட்ட இடைவெளி இங்கு தான் தொடங்கு கிறது. 

ஏறத்தாழ, Matric மற்றும் அரசு பள்ளி படங்கள் ஒன்றுதான் எனினும், பாடத்தின் தரம் மற்றும் ஆழம் வேறுபாடும். CBSE ஐ பொறுத்த மட்டில், அது விரிவு படுத்தப்பட்ட, அதிக செய்முறை விளக்கத்துடன் கூடிய, பளுச்சுமையுடன் கூடியது எனலாம். பாடத்துடன் பிற ஆர்வங்களையும் வளர்த்து விடுவது (கவனிக்க!! வளர்ப்பது வேறு, வளர்த்து விடுவது வேறு) இதன் பலம்.அதற்காக, '3 இடியட்ஸ்' படத்தில் வருவது போல வேண்டும் என்பதல்ல இதன் முடிவுரை. எந்த வகை கல்வியானாலும் ஈடுபாட்டோடு, நாட்டத்தோடு , சுற்று புறத்தோடு ஒன்றி கற்க வைத்து, இடமறிந்து துணிவுடன் செயல்பட வைத்தலையே எங்கள் இளையதலைமுறைக்கு போதிப்பதை விரும்புகிறோம்.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

காலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(

எந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. 

                                   குழந்தை, மழை, இரயில் வண்டி 
இவை மூன்றும் திகட்டாத, என்றும் மாறாத ஆச்சர்யங்கள். ஆனாலுமே, இப்பொது குழந்தைகள் கூட சில சமயம் வயதுக்கு மீறிய பேச்சுக்கள் மூலம் நம்மை திகைக்க வைக்கின்றன. இரயில் வண்டிகளில் கூட இப்போதெல்லாம் ஒரு இயந்திர தனம் குறுக்கிட்டு விட்டது. மழையை இரசிப்பதற்கு கூட நம்மிடம் நேரமில்லை. அப்படி இரசித்தாலுமே, ' இது அமில மழையோ??' என்ற அச்சம் தோன்றி மறைகிறது. காலம் மிகவும் மாறிவிட்டது. 

எங்க ஊரும் அப்படிதான். நான் இளநிலை படிப்புக்காக 5 வருஷம் முன்னாடி எங்க கிராமத்தை விட்டு வெளியே வந்தேன். அப்போ இருந்த சி(ப)ல  விஷயங்கள்,  இப்போ நிச்சயமா இல்லை.

மஞ்சள் காட்டில் அப்போதெல்லாம் இரசாயன பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி எல்லாம் தெளிக்க மாட்டோம்.அதனால, பீட்ரூட், காரட், ஏன் முள்ளங்கி கூட நல்லா விளையும். இப்பவெல்லாம், மணத்தக்காளி கூட செழிப்பா வளரதில்லை. முன்னாடி எல்லாம்,எங்க வீட்ல நெல்லி - 2 மரங்கள், கொய்யா - 3, சப்போட்டா  - 1, ஆரஞ்சு - 1 , கொலுமிச்சை - 1, மாமரம் - 2, பாக்கு மரம் - 7, பப்பாளி - 4 மரங்கள் இருந்துச்சு. இப்ப முறையே 1, 2, 1, 0, 0, 1, 0, 0 மரங்கள் தாங்க இருக்கு. பாசன வசதி, நோய் தாக்குதல், இடப்பற்றாக்குறை ஆகியவற்றினால் அழிந்தும், அழிக்கபட்டும் விட்டன.

வாழைத்தோப்பு எப்பவுமே பசுமையா, தலை வாழை இலையோட, முரட்டு தாரோட இருக்கும். இப்ப எல்லாம், அப்படி கிடைப்பதே அதிசயமா போச்சு.

பன்னீர் ரோஜா, பட்டு ரோஜா, சிமெண்ட் ரோஜா, செவ்வந்தி, முல்லை, குண்டு மல்லி, கனகாம்பரம், மயில் மாணிக்கம், நந்தியாவட்டை,  செம்பருத்தி, மருதாணி, சங்கு பூ னு ஏகப்பட்ட செடி வகைகள் இருக்கும். 

ஆனா, இப்ப எங்க கேட்டாலும், ஊட்டி ரோஸ், பட்டன் ரோஸ், டேபிள் ரோஸ் மட்டும் தான்.

எங்க பாத்தாலும் பசுமையா இருக்க காரணமே அருகம் பில் தான். இப்ப எல்லாம் களைகொல்லி அடிச்சு அடிச்சு, மாட்டுக்கே பசும் பில் கிடையாது. மாட்டுத் தீவனம் தான். ஒரு மூட்டை ரூ. 430. இப்படி தீவனம் போடறது மாட்டை உறிஞ்சி பிழிந்து பால் கறக்கற மாதிரி. எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம்??சாதாரணமாவே, துளசி, திருநீற்று பச்சை, சிறியா/ பெரியா நங்கை எல்லாம் வழி எங்கும் இருக்கும். இப்ப பல் வலின்னு தேடின கூட கிடைப்பதில்லை. (உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா?? என்ன கொடுமை பா இது??)

இன்னொரு விஷயம் பாத்திங்கன்ன, மாட்டு வண்டி. டவுன் ல கூட மாட்டு வண்டி இருக்குங்க. கிராமங்களில் தென்படுறதே இல்லை. அட, மாட்டு வண்டிய விட, சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட் எல்லாம் பார்ப்பதே ரொம்ப அதிசயம் தான்.


நாங்க கூட இப்ப பாரதிராஜா வின் கிராமத்தை அதிசயமா பார்க்கிறோம் ????

மழை காலங்களில் முளைக்கின்ற காளான், சாலை எங்கும் பூக்கும் கமலா பூ, ஆவாரம் பூ , நாரைகள், வெயில் காலத்து தெலுகு, நுங்கு, புது பானை தண்ணீர், பனி காலத்தில் பனங்கிழங்கு சுட்டு சாப்பிடுகின்ற சுகம்... இப்பொது எல்லாமே ஓடி ஒளிந்து விட்டது. நானும் ஒவ்வொரு விடுமுறை களிலும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.. உங்களுக்கேனும் அகப்படுகிறதா??


வெள்ளி, ஜூலை 29, 2011

நம்ம ஊரும் மொபைல் போனும் :)

 நம்ம ஊருகள்-ல பாத்திங்கன்னா நான்-ஸ்டாப்-ஆ ஒளிசுட்டே இருக்கற விஷயங்கள் இரண்டு..
  • பண்பலை 
  • கை பேசி யாகிய  செல் போன் 
பெரும்பாலும் நோக்கியா டோன் தான், சில சமயம் "சரவணப் பொய்கையில் நீராடி.." னு பரவசத்தோட ஒலிக்கும். 'அல்லோ' னு தெக்காலா பாத்து பேச ஆரம்பிச்சாங்கன்ன, 'கேக்குல கண்ணு'-னு கஸ்டமர் கேர் அக்கா கிட்டையே ஒரு நிமிஷம் பேசுவாங்க. பேசற சத்தத்துல தென்ன மரத்து காக்கா, குருவி கூட பயந்து ஓடும். அது பதிவு பண்ணப்பட்ட குரல் னு அப்புறம் தான் புரியும். கம்பெனி காரன் னு அசட்டு சிரிப்பு சிரிச்சுட்டு போவாங்க பாருங்க, கொள்ளை அழகு..!!


மாட்டுக்கு கறவை போடறாங்களோ இல்லையோ, தினமும் 15 நிமிஷம் சார்ஜ் 
கரெக்ட் -ஆ போட்ருவாங்க. வயல் வேலை செய்யும்போதெல்லாம் பொறி காகிதத்துல பேக் பண்ணி  முண்டாசுல வச்சுப்பாங்க.

அதுலயும் அந்த ஸ்பீட் டயல் - னு ஒரு அம்சம் இருக்கு பாருங்க,
1 - பொண்ணு வீட்டுக்கு 
2 - மாபிள்ளைக்கு
3 - மகனுக்கு 
4 - பேத்திக்கு.. னு காலெண்டர் ல எழுதி வச்சு மனபாடம் பண்ணி, நர்செரி ரைம்ஸ் மாதிரி அடிகடி சொல்லி காட்டிட்டே இருப்பாங்க, அதுல ஒரு சந்தோசம்.. : ) . அது கரெக்ட் ஆ வேலை செய்யுதா  னு டெஸ்ட் கால் வேற பண்ணி பாப்பாங்க. 


பண்ணயத்து வேலை ஆளுகளுக்கு எல்லாம் போன் வாங்கி கொடுத்து, 'தண்ணி பாஞ்சா மோட்டார் - அ நிறுத்திட்டு வா, மாட்டுக்கு தட்டு  போட்டியா ??,  செவல மாடு தண்ணி குடிச்சுதா??, வெள்ளாட்ட நல்லா கட்டுனியா??, கோழிய அடைச்சிரு...." னு நம்ம ஆளுக போடற உத்தரவு இருக்கே.. வேலை வாங்கறதுல பில் கேட்ஸ் நம்ம கிட்ட பிச்சை கேக்கணும்..

போன் வாங்கின புதுசுல எங்க ஐயா (அப்பா வின் அப்பா), "இதுவும் மோட்டார் விடுற மாதிரி தான், பச்சைய அழுத்தினா பேசலாம், செவப்புன்னா நிறுத்திற்லாம்" னு சொன்னது இன்னும் என் காதுல ஒலிசுட்டே இருக்கு..

போன் பேசவே மாட்டேன் னு பிடிவாதமா இருந்த எங்க ஆத்தா (அப்பா வின் அம்மா), ஒரு நாள் மருத்துவ மனை ல அட்மிட் ஆனப்ப, எனக்கு போன் போட்டு தர சொல்லி பேசின நாளை நான் இன்னும் "மறக்க முடியாத" நாள் னு என் டைரி ல குறிச்சு வச்சுருக்கேன். இப்ப எல்லாம் வாரத்தில் 3 முறை பேசிடுவேன்.

இத படிக்கற நெறைய பேர், அவங்க தாத்தா கோ, பாட்டி கோ, போன் வாங்கி குடுத்திருபீங்க, அடிக்கடி சந்தோஷமா பேசுவிங்க.. என்ன தான் சொன்னாலும், அவங்க ளோட வெகுளி பேச்சும், மழலை பேச்சு தாங்க..திங்கள், ஜூலை 25, 2011

என் ஆசைகளை அசைபோடுகிறேன் ..


ஒவ்வொருதற்கும் ஆசைகள், கனவுகள் நிறைய இருக்கு.. ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் ரொம்ப தூரம் வித்தியாசம் இருக்கு. ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத உயரம். உதாரணத்துக்கு, குழந்தைகளை வைத்து பேசுவோம். இன்றைய குழந்தைகளுடைய ஆசைகள் சட்டுன்னு நிறைவேறிவிடும். ஆனால், கனவுகள்??? தொடர்ந்துட்டு தான் இருக்கு. எதுவரைக்கும்?? அது அவங்களுக்கே தெரியாது..


ஒரு குழந்தை கிடார் கத்துக்கணும் னு சொன்னா ஏத்துக்கற பெற்றோர்கள், தான் கிடாரிஸ்ட் ஆகணும் னு சொன்னா ஏத்துக்கறதில்லை. இங்க தான் ஒவ்வொருத்தரோட கனவுகள் சிதைக்கக்கபடுகிறது. ஆனாலும் அந்தக்கனவுகள் அடி மனசின் ஆழத்தில் புதைந்து போய்விடும் . அந்த புதைந்து போன கனவுகளின் விளைவுகள் இப்படி தான் இருக்கும், 
  • சில கனவுகள் மக்கி வேறு சில ஆசைகளுக்கு உரமாகலாம்.
  • சில கனவுகள் இறுகி போய் மதிப்புள்ள வைரமாய் மாறலாம்.
  • சில கனவுகள் பிளாஸ்டிக் மாதிரி, தானும் அழியாம மற்ற கனவுகளையும் செழிக்க விடாமல் செய்யும். 

என்னோட கனவுகள் முதல் இரு விளைவுகளையும் சந்தித்தது. என்னோட கனவுகள் ல மிக முக்கியமானது, பத்திரிகையாளர் ஆகணும்கிறது. ஆனாலும், வேற யாருக்காகவும் இல்லாமல், சூழ்நிலை, சுதந்திரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, என் ஆசைகளை மனதினுள் புதைத்து விட்டு, M .C .A ., படிக்கிறேன். ஆனாலும் என் கனவு உரமாகி என்னை வலுவாக்கியது. 
 
நான் கணினித் துறையில் இருப்பதால், என் துறை சார்ந்த ஊடகப்பணிகளில் பங்கு பெறுவேன். வலைப்பூ வில் கவிதை கள் மட்டுமே இட்டு வந்த எனக்கு, எதோ ஒரு விஷயம் உந்து சக்தியா இருந்து கருத்துகளையும் பரிமாற வச்சிருக்கு. சில சமயங்களில் பல விஷயங்கள் என்னையும் ஒரு பத்திரிகையாளரா உணர வச்சிருக்கு. அந்த விஷயங்களை இனி எல்லோரிடமும் பரிமாறலாம் னு இருக்கேன். புதைந்து போன ஆசைகள் ஒவ்வொன்றையும் தட்டி எழுப்புங்கள். இனி, இது நம்ம உலகம். பூக்கள் பூத்து குலுங்கட் டுமே.. !!

 

ஞாயிறு, ஜூலை 24, 2011

இது புதுசு (PART II) - ஆர்ப்பரிக்கும் மழைச்சாரல் நினைவுகள்..

.... 
" அப்பொழு திலும் என் கண்ணீர் துளிகளைத் 
தாங்கிட உன் கரங்கள் நீண்டபோது - அதை
நான் என்ன வென்று சொல்ல...??

சிறு பிள்ளையாய் உன் அருகாமைக்கும் 
பச்சிளம் குழந்தையாய் உன் அரவணைபிற்கும் 
ஏங்குவதை  வெக்கத்தை விட்டு எப்படி சொல்வேன்??

வரிவரியாய் பதித்து விட்ட என் ஆசைகளையும் கனவுகளையும் 
என் காதலையும் உன் அருகில் கவிதைகளாய் 
படித்து காட்டவே எத்தனை முறை தவித்திருப்பேன்..உன் கண்ணில் படும்படி வைத்துவிட்டு 
நீ படிப்பதற்காக திருட்டுத்தனமாய் கவனித்திருப்பேன்..

நீ கவனிக்காமல் செல்லும்போதும் 
ஏமாறிய இதயம் வலித்தாலும் 
இதமாகத்தான் இருந்தது...

அந்த வெள்ளை காகிதத்தில் முழுமையாய் 
நிறைந்திருந்தது நீ மட்டுமே - என்
இதயம் போல..

இப்படி சின்னச்சின்ன ஏமாற்றங்களை 
வேண்டுமென்றே நீ தந்துவிட்டு..
மொட்டை மாடி இருளில் பனி மட்டுமே 
ஊடுருவ முடியும் இடைவெளியில் 
உன் காதருகே படிக்கச் சொல்லி ரசிப்பாயே..இப்படி சுகமான நினைவுகளுடன் 
தினம் தினம் செத்து பிழைக்கவே விழைகிறேன்..


*******

நோட் : திஸ் பார்ட் இஸ் டெடிக்கேடேட் டு அவர் செகண்ட் செமஸ்டர் தியரி, பிரக்டிகல், ஆடிட் அண்ட் அதர் கோர்செஸ்..

வியாழன், ஜூலை 07, 2011

இது புதுசு...

முதல் படத்துல இருக்கறது இசை இரட்டயர்கள் சபேஷ்-முரளி, அடுத்த படம் தமிழ் நாவல் உலக மன்னர்கள் சுபா, அதெல்லாம் சரி, மூன்றவதா ஒரு படம் இருக்கே.. யாரு பா அது???
வேற யாரு??
நானும் யுவராணி யும் தான்...
சரி அவங்களுக்கும் எங்களுக்கும் ஏனடா சம்பந்தம் னு பாக்க றீங்களா??
நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து காலேஜ் ல (கிளாஸ் அவர்ஸ் ல தான்) எழுதின கவிதை இதோ..
நான் ஒரு வரி, யுவா ஒரு வரி...
அதுக்கு முன்னாடி யுவா வ பத்தி சொல்லனுமே.. அவளை பற்றி ஒரு தனி இடுகை ல சொல்றேன்.. இபோதை க்கு, இரத்தின சுருக்கமா சொல்லணும் னா, யுவா தான் என் உயிர் தோழி, என் ஆலோசகர், என்னை அடிக்கடி ஆறுதல் சொல்லி , அரவணைத்து, தூண்டி விட்டு, அடிக்கடி இன்ப அதிர்ச்சி குடுக்கற என் செல்ல தோழி... அவளுடைய பதிவுகள், http://www.enuyirthuli.blog.com/http://www.tomysweetmom.blog.com/....

இனி எங்க கவிதை..

முத்து முத்தாக சொட்டியது மழைத்துளி - என் காதலை போல..
என் கள்வனவன் அதில் நனைந்து வந்து சிலிர்த்து கொண்டதில் சிதறியது நீர்த்துளிகள்..

அதில் கண்டு கொண்டேன் என் வாழ்கையின் அர்த்தங்களை..
உலகிலுள்ள அனைத்து வண்ணங்களையும் ஒரே துளியில் கண்டேனே..

உன் முழுமையான காதலைத் தாங்கிய அந்த ஒற்றை துளி யை
 ஏந்திட என்னைஅறியாமல் என் தேகம் 
உன்னை நெருங்குவதை நீ அறிந்தாயோ??


என்னை அறியாமல் உன் வசிய வலையில் சிக்கி கொண்டன என் கண்கள்...
குளிரால் சில்லிட்ட என் விரல்களுடன்
 காதலால் வெப்பமான உன் விரல்கள் உரசுகையில் 
மின்சாரம் பாய்ந்தது என் னுள்...

சளைக்காத தென்றலும் - திகட்டாத மழைச்சாரலும் 
ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள, சிதறிய தீப்பொறியில்...
பொசுங்காமல் பொசுங்கி மீண்டும் உயிர்தெழுகிறேனே - இனி 
ஒவ்வொரு மழை நாளிலும் உன்னை உருகி உருகி நேசிக்கவே..

கலைந்துள்ள உன் கேசத்தை - நான் 
மீண்டும் கலைக்காமல் கலைத்துவிட 
உன் விழிகள் என்னில் பதிவதை 
ஓரக்கண்னால் பார்த்து விட்டு வெட்கத்தில் மூழ்கி 
நான்  தடுமாறியதை நீ அறிந்தாயோ???

இப்படி எத்தனையோ தடுமாற்றங்கள் என்னுள்..
தடுமாறி தடுமாறி தடுக்கி விழுந்தாலும் 
தாங்கிபிடிக்க நீ இருக்கியே என்ற எண்ணத்தில் 
கோடி முறை தடுமாறி தவிக்கிறேன் நான்..எதனை தவிப்புகள் என்னுள்??
உன் விழிகளை நேராய் சந்திக்கத் 
தடுமாறிய பொழுதுகள் எத்தனை எத்தனையோ..

அத்தவிப்புகளுக்கு சாட்சியாகத் தானோ விண்மீன்களும் ஆமொதிக்கின்றனவோ..
கலங்கிய என் நெஞ்சு கூட்டில் புகுந்து வரும் உதிரம் தான் கண்ணீராக வெளிப்படுகின்றானவோ...??!!!

****

கொஞ்சம் பிரேக் எடுத்துக்கறோமே...

நோட்: திஸ் பார்ட் இஸ் டெடிக்கேடேட் டு அவர் யுனிக்ஸ் அண்ட் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பேப்பர்ஸ்.. :)

எங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்

நான் பிறந்தது ஈரோட்ல, வளர்ந்தது கோரக்காட்டுபுதூர் - ல, வளர்ந்துட்டு  இருக்கறது சத்தியமங்கலத்தில் (இப்போ தற்காலிகமா 3 வருஷத்துக்கு).

அதாவது 11.12°N 77.80°E இருக்கற எங்க ஊரோட பெருமைய பாப்போம். நான் படிச்சது ஸ்ரீ சங்கர வித்யாசாலா, சுருக்கமா எஸ்.எஸ்.வி. சிவகிரி ஒரு சின்ன டவுன். நான் படிக்கும் போது ஸ்பெஷல் னா, செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், இப்போ சூர்யா பேக்கரி, ஆதவன் மெஸ். கோவில் னா வேலாயுதசுவாமி கோவில், சித்திரை ல தேர் வரும் அது ரொம்ப விசேஷமா இருக்கும்.
 முன்னாடி எல்லாம் வருஷம் தவறாம போவேன், இப்ப பெரிய படிப்பு எல்லாம் படிக்கறது னால போக முடியறுதில்லை. ஆனாலும் அம்மா, தம்பி எல்லாம்  போறதுனால அலமாரி ல வைக்க பொம்மை, வால் போஸ்டர், வளையல் னு ஏதாது கிடைக்கும். ரங்கநாதன்  தெருவே எங்க ஊர்ல தான்னா பாத்துகோங்க (கொஞ்சம் ஓவர் ஒ ??!!). நாடகம், ஆர்கெஸ்ட்ரா னு ஒரே கலக்கலா இருக்கும்.

எங்க ஊர்ல தீரன் சின்னமலை சிலை இருக்கு. கம்பிரமா இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். சிவகிரி ல இருந்து ஏழு கி.மீ. ல எங்க ஊர் கோரக்காட்டுபுதூர் இருக்கு. 
ரொம்ப பசுமையான ஊருங்க. மஞ்சள், கரும்பு, தென்னை, குச்சி கிழங்கு, கடலை, நெல், எள் தான் முக்கியமான சாகுபடிகள். கற்பக விநாயகர் கோவில் ஒன்னு இருக்கு எங்க ஊர்ல. அது போக மேட்டுசாமி கோவில் ஒன்னு இருக்கு. மாசம் மாசம் விநாயகர் கோவில் ல சங்கடற சதுர்த்திக்கு விசேஷமா இருக்கும். அப்புறம் சித்ரா பௌர்ணமி னா மையாரு பூஜை நடக்கும். அந்த நாள் ல, மதியம் மூன்று மணி வரை வெயிட் பண்ணி, ரெண்டாவது பந்தில சாப்பிடற தெல்லாம் தனி சுகம் ப்பா.சின்னதா ஒரு பால் சோசைடி, ஒரு பயணிகள் நிழல் குடை, அதுல வர தினமலர் பேப்பர், வழியெல்லாம் தென் படுற கிணறுகள், ட்ரான்ஸ்பார்மர் கள், ரோடு ல காஞ்சு போய் கிடக்கின்ற மாட்டு சாணம், அங்கங்க போற மண் பாதைகள், எருக்களை செடிகள், வீட்டுக்கு வீடு இருக்கற முல்லை கொடிகள், ரோஜா செடிகள், அம்மா னு கத்தற மாடுகள், எருமைகள், கண்ணு குட்டிகள், ஆடுகள், அக்குவாபினா பாட்டில் ல கெணத்து தண்ணி கொண்டுகிட்டு வேலைக்கு போற ஜனங்கள், டிவிஎஸ் எக்ஸ்ஸல் ல சீமை பில், செம்மண் தலை கொண்டு போற மாமா கள், பெரியப்பா கள், சித்தப்பா கள் னு நெறஞ்சு இருக்கற ஊரு தாங்க எங்க ஊரு.சின்ன செயற்கை தனம் கூட இல்லாமல், இயற்கையா, பசுமையா, ஏதோ ஒரு பந்தத்தோட சிநேகமான ஊரு தாங்க எங்க ஊரு.லீவ் ல வீட்டுக்கு போன வழி எல்லாம் எத்தன நாள் லீவ் னு கேக்கற பரிச்சயமான சில சமயம் பரிச்சயம் ஆகாதவங்க, ஹாஸ்டல் சாப்பாடு பரவா இல்லையா னு கேக்கற உறவுகள், ரெண்டு மணிக்கு வர ஐஸ்காரர், எப்பவாச்சும் வர பஞ்சு மிட்டாய், வெள்ளி கிழமை வர பொறி காரர், நான் ஸ்கூல் படிச்சப்பவே எனக்கு ப்ரோமோசன் கார்டு கொடுத்த, இன்னும் என் தம்பிக்கும் கொடுக்கற அதே போஸ்ட் மேன், காலைல ஏழரை க்கு தூக்கு போசிஓட வேலைக்கு போற ஜனங்கள், ஜோடி ஆ பக்கத்துக்கு ஊருக்கு வேளைக்கு போறவங்க, மதியம் நான் கொண்டு போற மொக்க டீ க்கே, 'கொங்கு பொடிசு டீ தான் சூப்பர் னு' சொல்லிட்டு வேலை செய்ற மக்கள், நீங்க எதுக்கு வெயில் ல வரிங்க? அம்மா எங்க னு கேக்கற அந்த அக்கறை, கரிசனம் சத்தியமா வேற எங்கியும் கிடைக்காதுங்க.வாங்க, ஒரு நடை வந்துட்டு போங்க....!!