புதன், மே 16, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும். ஒரு 15 வருடங்களுக்கு முன், நம் பொக்கிஷங்களில் முக்கியப் பங்கு வகித்தவைகள். சலித்துப்போட்ட ஆற்று மணல்களில் குட்டியூண்டு கிளிஞ்சல்களை கண்டுபிடித்து, வராத கடல் அலைகளை காதிற்குள் வைத்துக்கேட்ட சந்தோஷங்கள் சொல்ல சொல்ல குறையாது. அப்போதெல்லாம் மயிலிறகு வைத்திருப்பவர்கள் எல்லாம்  அம்பானிகள். அது குட்டி போடுமா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அந்த மயிலிறகு கொத்திலிருந்து ஒரு மயிலிழையை பெறுவதற்குள் எத்தனை பாடு..? எத்தனை பாசாங்கு..?? 
புது வருடத்து நாணயங்கள், நாய்க்குட்டி படம் போட்ட தீப்பெட்டிகள், சாமி படம் போட்ட கடலை மிட்டாய் லேபில்கள், சீரக மிட்டாய்க்கு வாங்கிய  டப்பாக்கள், ஜவ்வு மிட்டாய் மோதிரங்கள், ஐஸ் குச்சிகள், பூமர் ஸ்டிக்கர்கள்.. விலை மதிக்க முடியாதவைகள் அல்ல, ஆனால் பொக்கிஷமான அதன் நினைவுகள்..!!

இந்த நினைவுகளை எல்லாம் திரட்டி ஒரு தொடர்பதிவு எழுத உள்ளேன். இனி, முதல் பதிவு..,


தொட்டாங்குச்சி நினைவுகள்

எங்கள் பால்ய வயதில், அப்பா தூக்கிப்போட்ட காலி தீப்பெட்டி யையும் அம்மா தூக்கிப்போட்ட தொட்டாங்குச்சியையும் நாடியே எங்கள் விளையாட்டுகள் இருக்கும். நான்கு தீப்பெட்டிகள் சேர்த்து நாற்காலி, சோபா, கட்டில், வண்டி யும், தொட்டாங்குச்சிகள் அரிசி வைக்கும், சமைக்கும் பாத்திரங்களாகவும், சூட டப்பாக்களும், பல் பொடி டப்பாக்களும் இதர பாத்திரங்களாகவும் உருமாறும். மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டிகளில் பத்திரப்படுத்தி, கந்தலான சாக்கினை போட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அட்டாளிகளிலும், கட்டுத்  தறிகளிலும் மறைத்து வைத்த காலங்கள் நினைவிலிருந்து மறையாதவை.
வருடமொருமுறை தேர்க்கடைகளில் தேடிப்பிடித்து வாங்கும் பொம்மைகள் கூட ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விடும்.ஆனால், எங்கள் விளையாட்டுப் பொருள்கள் எங்களுக்கு என்றுமே சலிப்படைந்ததில்லை.

நீர் பாய்ந்து இரண்டு நாட்களான வாய்க்கால்களில் படர்ந்து கிடக்கும் ஈர மணல்களில் சின்ன கொட்டாங்குச்சிகளில் பனியாரங்களும், பெரிய  கொட்டாங்குச்சிகளில் இட்லிகளும் சுடுவது எங்களுக்கு பிடித்தமான விளையாட்டு. அதோடு நின்று விடாமல், மஞ்சள் வயல்களில் விளைந்து கிடக்கும் கீரைகள், மிளகாய்கள், தக்காளிப் பழங்கள், கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கும் கொய்யா பிஞ்சுகள் மா பிஞ்சுகள், வாழை ப்பூக்கள் என்று எதையும் விட்டு வைக்காமல், flavor க்கு வீட்டிலிருக்கும் மஞ்சள் /மிளகா ய்ப்பொடிகளையும் சேர்த்து அட்டகாசமான சமையல் நெருப்பில்லாமல், புகையில்லாமல் தயாராகிவிடும். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மிளகுதக்காளிப்பழகளையும், பெயர் தெரியாத பூக்களையும் கோவைப்பழங்களையும் வைத்து ரசனையுடன் அலங்கரித்து பூவரச இலைகளில் சம்பிரதாயமாக உப்பு வைத்து பரிமாறி, பாசாங்காக உண்டு மகிழ்ந்த தருணங்களை இப்போது நினைத்தாலும் பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

நான்கு ஐந்து செங்கல்களை வைத்து வீடு கட்டி, அதற்கு உள் அலங்காரங்கள், வெளி அலங்காரங்கள் செய்து, கோலம் போட்டு, அதன் மேல் செம்பருத்தியையும் மயில் மாணிக்கத்தையும் படர விட்டு, அதை ஒவ்வொரு கோணங்களிலும் ரசித்து பெருமிதப்பட்ட காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது.

தென்னங் குரும்பைகளில் பூதங்களும்,பனங்கொட்டைகளில் சொட்டை தலை தாத்தாவும், தென்னம் பாலைகளில் பூக்களைக்குமித்து வாய்க்கால்களில் படகு விடுவதும், வண்டு கடித்து மொக்கையாகிப்போகும் பாலைகளில் பேனா stand கள் செய்தும், தினமும் சாப்பிடும் ஐஸ் குச்சிகளில் வீடுகளும், 3 ரோசெஸ் டப்பாக்களில் குருவி கூடுகளும், சொளக்கதிரிற்கு ஜடை பின்னுவதுமாகக்கழிந்தன எங்கள் தொட்டாங்குச்சி காலங்கள்.

மதிய வேளைகளில், ஈர மணல்களில் கால் பாதங்களை புதைத்து வீடுகள் செய்து, அதனை சுற்றியும் தோட்டம் போட்டு, பாசனம் செய்து நாங்களும் விவசாயி என்று பெரியமனுஷத்தனமாக விளையாண்டதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. தென்னை ஓலைக்கடிகாரங்கள் (எங்க ஊர் Rolex) ,கை கால் ஆட்டி ஆட்டி விளையாடும் பொம்மை , பயமுறுத்தும் பாம்புகள் என்று எங்களைச்சுற்றி இருந்த பொம்மை உலகமே வேறு.

Puppet play, Blocks & buildings, Soccer goal, Bingo... என்று ஏதேதோ விளையாட்டுகளைக் கேட்கும் போது எனக்கு ஏக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ வந்ததில்லை. இட்லி சுடுவதில் கற்றுக்கொண்ட நேர்த்தி, நுணுக்கம், வீடு கட்டுவதில் வளர்த்துக்கொண்ட கற்பனைத்திறன், தென்னை மர மட்டைகளில் பொம்மை செய்வதில் கிடைத்த புதுமையான ஐடியாக்கள்.. இன்று வரை கூட தினுசு தினுசாய் பல கற்பனை பொருள்கள் செய்யவும், புதுமையாய் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்தவைகள் கொட்டங்குச்சிகளே..!!