வெள்ளி, ஜனவரி 20, 2012

சொக்காய்களும், Branded சட்டைகளும்

சொக்காய்கள். நிச்சயம் பரணில் கண்டிருப்பீர்கள். நம் தாத்தாக்கள் அல்லது நம் அப்பாக்களின் கம்பீரத்தை, சாந்தத்தை பறைசாற்றியவைகள் இப்பொழுது அலமாரிகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்கு அவற்றை அணிந்து அழகு பார்க்க ஆசை ஏற்பட்டதுண்டா? நிச்சயம் யோசித்து பதில் சொல்லவேண்டியிருக்கும் . சட்டைகளுக்கும் சொக்காய்களுக்கும்  வித்தியாசங்கள் பெயரளவில் மட்டுமே. அன்று கை முட்டி வரையும்  கால் முட்டி வரையும் தொங்கிய சொக்காய்கள், இன்று 'Slim fit' ஆக மாறி விட்டன. மற்றபடி, சொக்காய்களைப் போல  இரு பக்க வளைவுகளும், குறுக்கு வெட்டுகளும் இன்று branded என்ற பெயரால் சக்கை போடு போட்டுக்கொண்டிருகின்றன. உண்மையில், பேஷன் என்பதை உற்று நோக்கினால் பழமையும் தொன்று தொட்ட பழமையும் புரியும்.

உண்மையில், இந்த தலைப்பின் உட்கருத்தே தலைமுறை இடைவெளி தான். இந்த இடைவெளி என்பதே ஒரு மாயை. வெள்ளை அல்லது  பளீர் நிறங்களில் சொக்காய் அணிந்தவர்களும், கட்டம், கொடு போட்ட சட்டையும், கண்டபடி கிறுக்கிய டி-சர்ட் அணிந்த நாமும் வேகத்தினாலேயே மாறுபடுகிறோம். இதனை வேகம் என்று சொல்வதை விட விவேகம், நிதானம் என்றே கூற வேண்டும். 

நம் முன்னோர்கள் மணிக்கு 15 மைல் வேகத்தில் பயணித்தாலும், சாலையின் இரு புறம் உள்ள மூலிகைகளை பற்றி தெரிந்து கொண்டும், உலக ஞானத்தை வளர்த்துக்கொண்டும், மக்களோடு மக்களாக பயணித்தார்கள். நாம் அப்படியா?!
மணிக்கு 144 கி.மீ., பறக்கும் இரு சக்கர வாகனங்களும், 250 கி.மீ., வேகத்தில் சீறிப்பாயும் சொகுசு கார்களும் நம் வேகத்திற்கு ஈடு குடுக்காமல் திணறித்தான் போகின்றன. சாலையோர மைல் கால்களைக்கூட காண முடியாத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். நமக்கு வழி காட்ட செயற்கை கோள்களும், உலக ஞானம் அறிய கூகுள்-ம், மக்கள் தொடர்புகளுக்கு facebook ம், கைக்குள்ளேயே  சுருண்டு கிடக்கிறது. உண்மையில், நாம் தான் அதற்குள் சுருண்டு கிடக்கிறோம்.

எங்கள் தாத்தா, இளையப்பகவுண்டர் முன்னால் நான் பல முறை வெட்கி தலை குனிந்துள்ளேன். அவரது அனுபவத்தில் முன்னால் அல்ல. அவரது அனுபவத்திற்கு முன்னால் என்றால் கூட பெருமையே பட்டிருப்பேன்.  அவரது புத்திக்கூர்மை மற்றும் நினைவாற்றல்  முன்னால் அல்லவா தினம் தினம் தோற்றுப்போய் கொண்டிருகிறேன்? இந்த வருடம் சரஸ்வதி பூஜை யின் போது அவர் என்னை சரஸ்வதி துதி பாடச்சொல்லிய போது, சுத்தமாக என் நினைவில் பாடல் இல்லை. இத்தனைக்கும், 12 வருடங்கள் என் பள்ளியில் வாரமொரு முறை பாடிய பாடல் அது. ஆனால், அதே பாடலை, தன் 7- ம் வயதில் கற்ற அதே பாடலை எங்கள் தாத்தா,  இப்போதும் பிறழாமல் பாடினார். தினமும் காலை ஒரு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என்று காதுக்குள் வழியும் இசையோடு தான் என் பொழுதுகள் கழிகின்றன. எங்கே தடுமாறுகிறோம் நாம்? 

ஏறக்குறைய 35 ஆண்டுகள் பழமையான அவரது பெண்டுலம் கடிகாரத்திற்கு தினமும் தவறாது சாவி குடுத்து  ஓடவைத்துக்கொண்டிருக்கிறார், தன் 72 வயதிலும். ஆனால், எனக்கோ இரண்டு வருடங்களாக நான் செய்து வரும் அன்றாட வேலைகளைச்  செய்யவே எனக்கு sticky notes தேவைப்படுகிறது. 

இத்தனைக்கும் அவர் படிக்கும் அத்தனை புத்தகங்களையும், நானும் படித்து பார்த்து விட்டேன், ஜோதிட நூல்களைத் தவிர. பெரிய புத்தகங்கள் எல்லாம் இல்லை, தமிழ் நாளிதல்களோடு வரும் பக்தி இணைப்புகள், செய்தித்தாள்கள், அவ்வப்போது நான் வாங்கும் கல்கி, சிறு இயற்கை வைத்திய குறிப்புகள் கொண்ட புத்தகங்கள்,  சென்ற வருடம் நான் வாங்கிக்கொடுத்த பகவத்கீதை, அவ்வளவே அவரின் கருவூலங்கள். சொல்லப்போனால், அவரை விட எனக்கு புத்தகம் படிக்க வாய்ப்புகளும் அதிகம், விரல் நுனியில் இணையமும் இருக்கிறது. என்னால் அவரைப்போல இருக்க முடியவில்லையே? எங்கே தடுமாறுகிறோம் நாம்?

உண்மையில், கூகுள்-ளிடம் நாம் தடுமாறிக்கொண்டிருகிறோம். ஒரு மணி நேரம் அவர்களிடம் இணைய உலகை ஒப்படைத்துப்பாருங்கள். கூகுள் ஏ அவர்களிடம் தடுமாறும். பாதம் தொட்டு வணங்குவோம், நம் வீட்டுப் பரணில் தூங்கும் சொக்காய்களின் சொந்தக்காரர்களை...!!

சனி, ஜனவரி 07, 2012

உங்களுக்குள்ளும் ஓர் குழந்தை

உலகில் ரசிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. இயற்கையும் இயற்கையின் ஆச்சர்யங்களும், வாழ்க்கையும் வாழ்க்கையின் சுவாரசியங்களும், மனிதனும் மனிதனின் பரிணாமங்களும்.. மனிதர்களின் பரிணாமங்கள் விநோதமானவை. பூக்களின் மெல்லிய ஸ்பரிசத்துடனும், வெண் பஞ்சு மேகங்களின் எடையிலும் ஜீவித்த நாம், காலச்சக்கரத்தில் சுழன்று, வாழ்க்கையால் உரமேற்றப்பட்டு, அனுபவங்களால் பலப்பட்டு, தேடல்களை லட்சியமாக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு பரிணாமங்களிலும் நமது தனிப்பட்ட அடையாளங்களையும் லட்சியங்களையும் தொலைத்துவிட்டு/ புதைத்துவிட்டு/ பறிகொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறோம். சின்னச் சின்ன சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள், அந்தந்த பருவத்திற்கே உரிய துள்ளல்கள், ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள்.. கொஞ்சம் நினைவு கூர்ந்து பாருங்களேன், சம்பளம், வேலை நேரம், சாலை நெரிசல், வாடிக்கையாளர்கள், வங்கிக்கணக்கு, வருமான வரி பரபரப்புகளிலிருந்து விலகி செல்ல செல்ல நம் உலகம், நமக்கே நமக்கான உலகம் விரியும்.
ஒரு காலத்தில் ஐந்து ருபாய் கோன் ஐஸ் வாங்குவதே உச்சகட்ட லட்சியமாக இருக்கும், கோவிலில் போட்ட ஒரு ரூபாயில் பெருமிதம் மிதக்கும், பிறந்த நாளின் 25 பைசா மிட்டாயிலும் விண்ணளவு சந்தோசம் இருக்கும், பாகு மிட்டாய்க்கு இனாமாக கிடைக்கும் மோதிரத்தில் உலகையே வென்று விட்ட திருப்தி ஏற்படும். அந்த சந்தோஷங்கள் இப்போது நிச்சயம் கிடைக்காது. ஏனெனில், அன்று நம் பாதைகளில் பட்டாம்பூச்சிகளும், பலப்பங்களும், பெட்டிக்கடைகளும், சைக்கிள்களுமே  அதிகம். இன்று அப்படி இல்லை. நம் பாதைகள் முழுவதும் பளபளக்கும் கட்டிடங்களும், குளிரூட்டி ஏற்றப்பட்ட கண்ணாடிகளும் தான்.

வாழ்க்கையில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை. இதன் மூலம் புதைந்து போன நம் உலகை மீட்கலாம். பால்ய வயதில் நமக்கென்றே ஒரு சுட்டித்தனத்தை வைத்திருப்போம். விரல் சூப்புவது, சோப்பு நுரையில் விளையாடுவது, பென்சிலால் கிறுக்குவது, குச்சி மிட்டாயை எச்சில் வழிய சாப்பிடுவது, சாப்பிடும் பொழுது கை முழுக்க அப்பிக்கொண்டு விளையாடுவது, சிறு முறுக்குகளை விரலில் மாட்டிக்கொண்டு கடித்து சாபிடுவது, வேண்டுமென்றே காலணிகளை மாற்றிப்போட்டுக்கொண்டு ஓடுவது, ரொட்டிகளை பாலில் உடைத்துபோட்டு சிறு கரண்டியை கொண்டு ரசித்து ரசித்து சாப்பிடுவது, தண்ணீரை குழாய் போட்டு உறிஞ்சி உறிஞ்சி குடிப்பது, பாலில் வரும் வெள்ளை நுரைக்ககவே ஆற்றி ஆற்றி குடிப்பது.. ஏதேனும் குழந்தையிடம் இதைக்கண்டாலே நம் உள்ளம் ஆர்ப்பரிக்கும். அந்த ஒரு நொடியில் குழந்தையாகவே மாறி விடத்தோணும். மாறுவோம், குழந்தையாகவே மாறிப் பார்ப்போமா?? இது நம் உலகம், நம் வாழ்வு, நம் சந்தோசம். காலையில் காபி யின் நுரையை அனுபவிப்பது முதல் இரவு டிவி ரிமோட்டின் சிகப்பு பட்டனை அழுத்துவது வரை, நம் ராஜ்யமே..கொஞ்சம் உங்கள் அடி மனசின் ஆசைகளை வெளி கொண்டு வாருங்களேன்.. சின்ன வயதில் 1, 2, 3, A, B, C அன்று வித விதமாக சுட்டு உண்ட தோசையை இப்போது உண்ண ஆவல் பிறக்கவில்லையா, குட்டியூண்டு தோசையை ஒரே வாயில் விழுங்கிய நாட்கள் நினைவிற்கு வர வில்லையா?, புள்ளி வைத்து வரைந்து பழகிய விளக்குகள், சங்குகள், கட்டம் போட்டு எழுதி பழகிய எழுத்துக்கள், எப்பொழுதும் வரையத்தூண்டும் ஓட்டு வீடு, பார்த்து பார்த்து வரையும் புகை போக்கி, கதவின் கைப்பிடி, ஆண்டனா, 2 புள்ளி  2 வரிசை கோலம், இரண்டு மலைகளின் நடுவே உதிக்கும் சூரியன், அதனடியில் ஓடும் நதி, நதியின் நடுவே பரிசல் போடும் படகோட்டி.. இதழோரம் சிரிப்பையும், மனதில் மகிழ்ச்சியையும் பரவச்செய்யும்.


அலுவலக இறுக்கத்தை குறைக்கவும், நம்மை நாமே ரசிக்கவும், வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்கவும், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்  கொண்டு வாருங்கள். 4 வரிக்கொடுகளில் cursive writing எழுதுவதில் கிடைக்கும் தளர்வு, ஓட்டு வீடு வரைவதில் வரும் கற்பனை எண்ணங்கள், நுரை பொங்கும் காபி'யில் கிடைக்கும் ருசி, சோப்பு நுரையில் வரும் மொட்டுகளை ரசிப்பதில் வரும் குதூகலம், விரல் சூப்புவதில் கிடைக்கும் சுகம், கப்பல் செய்து விடுவதில் கிடைக்கும் துள்ளல், நூடில்ஸ் ஐ உயரத் தூக்கி சாப்பிடுவது, உறிஞ்சி டம்ப்ளரில் தண்ணீர் குடிப்பது, ஒரு வட்டத்திற்கு கண், காத்து, கொஞ்சு, வால் எல்லாம் வரைந்து பூனையாக கற்பனை செய்து பார்ப்பது, பேப்பர்'இல் புத்தகத்தில் வரும் படத்திற்கு மீசை, பொட்டு, வளையல் அணிவித்து ரசிப்பது... இன்னும் எத்தனை எத்தனையோ... அனுபவிப்போம், நம் புது உலகத்தை, ஒரு குழந்தையின் ஆர்பரிப்புடனும்  துள்ளலுடனும்.