செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

காலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(

எந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. 

                                   குழந்தை, மழை, இரயில் வண்டி 
இவை மூன்றும் திகட்டாத, என்றும் மாறாத ஆச்சர்யங்கள். ஆனாலுமே, இப்பொது குழந்தைகள் கூட சில சமயம் வயதுக்கு மீறிய பேச்சுக்கள் மூலம் நம்மை திகைக்க வைக்கின்றன. இரயில் வண்டிகளில் கூட இப்போதெல்லாம் ஒரு இயந்திர தனம் குறுக்கிட்டு விட்டது. மழையை இரசிப்பதற்கு கூட நம்மிடம் நேரமில்லை. அப்படி இரசித்தாலுமே, ' இது அமில மழையோ??' என்ற அச்சம் தோன்றி மறைகிறது. காலம் மிகவும் மாறிவிட்டது. 

எங்க ஊரும் அப்படிதான். நான் இளநிலை படிப்புக்காக 5 வருஷம் முன்னாடி எங்க கிராமத்தை விட்டு வெளியே வந்தேன். அப்போ இருந்த சி(ப)ல  விஷயங்கள்,  இப்போ நிச்சயமா இல்லை.

மஞ்சள் காட்டில் அப்போதெல்லாம் இரசாயன பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி எல்லாம் தெளிக்க மாட்டோம்.அதனால, பீட்ரூட், காரட், ஏன் முள்ளங்கி கூட நல்லா விளையும். இப்பவெல்லாம், மணத்தக்காளி கூட செழிப்பா வளரதில்லை. முன்னாடி எல்லாம்,எங்க வீட்ல நெல்லி - 2 மரங்கள், கொய்யா - 3, சப்போட்டா  - 1, ஆரஞ்சு - 1 , கொலுமிச்சை - 1, மாமரம் - 2, பாக்கு மரம் - 7, பப்பாளி - 4 மரங்கள் இருந்துச்சு. இப்ப முறையே 1, 2, 1, 0, 0, 1, 0, 0 மரங்கள் தாங்க இருக்கு. பாசன வசதி, நோய் தாக்குதல், இடப்பற்றாக்குறை ஆகியவற்றினால் அழிந்தும், அழிக்கபட்டும் விட்டன.

வாழைத்தோப்பு எப்பவுமே பசுமையா, தலை வாழை இலையோட, முரட்டு தாரோட இருக்கும். இப்ப எல்லாம், அப்படி கிடைப்பதே அதிசயமா போச்சு.

பன்னீர் ரோஜா, பட்டு ரோஜா, சிமெண்ட் ரோஜா, செவ்வந்தி, முல்லை, குண்டு மல்லி, கனகாம்பரம், மயில் மாணிக்கம், நந்தியாவட்டை,  செம்பருத்தி, மருதாணி, சங்கு பூ னு ஏகப்பட்ட செடி வகைகள் இருக்கும். 

ஆனா, இப்ப எங்க கேட்டாலும், ஊட்டி ரோஸ், பட்டன் ரோஸ், டேபிள் ரோஸ் மட்டும் தான்.

எங்க பாத்தாலும் பசுமையா இருக்க காரணமே அருகம் பில் தான். இப்ப எல்லாம் களைகொல்லி அடிச்சு அடிச்சு, மாட்டுக்கே பசும் பில் கிடையாது. மாட்டுத் தீவனம் தான். ஒரு மூட்டை ரூ. 430. இப்படி தீவனம் போடறது மாட்டை உறிஞ்சி பிழிந்து பால் கறக்கற மாதிரி. எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம்??சாதாரணமாவே, துளசி, திருநீற்று பச்சை, சிறியா/ பெரியா நங்கை எல்லாம் வழி எங்கும் இருக்கும். இப்ப பல் வலின்னு தேடின கூட கிடைப்பதில்லை. (உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா?? என்ன கொடுமை பா இது??)

இன்னொரு விஷயம் பாத்திங்கன்ன, மாட்டு வண்டி. டவுன் ல கூட மாட்டு வண்டி இருக்குங்க. கிராமங்களில் தென்படுறதே இல்லை. அட, மாட்டு வண்டிய விட, சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட் எல்லாம் பார்ப்பதே ரொம்ப அதிசயம் தான்.


நாங்க கூட இப்ப பாரதிராஜா வின் கிராமத்தை அதிசயமா பார்க்கிறோம் ????

மழை காலங்களில் முளைக்கின்ற காளான், சாலை எங்கும் பூக்கும் கமலா பூ, ஆவாரம் பூ , நாரைகள், வெயில் காலத்து தெலுகு, நுங்கு, புது பானை தண்ணீர், பனி காலத்தில் பனங்கிழங்கு சுட்டு சாப்பிடுகின்ற சுகம்... இப்பொது எல்லாமே ஓடி ஒளிந்து விட்டது. நானும் ஒவ்வொரு விடுமுறை களிலும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.. உங்களுக்கேனும் அகப்படுகிறதா??


3 கருத்துகள்:

  1. ரொம்ப வருத்தப்படவேண்டிய விஷயம். பயமுறுத்துகிறது இந்த மாற்றங்கள்! நன்றாக எழுதியுள்ளீர்கள், சிவரஞ்சனி!

    பதிலளிநீக்கு