வியாழன், செப்டம்பர் 15, 2011

சாமானியர்களின் விற்பனைத்தந்திரங்கள்

பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் ஆகியவற்றில் அடிக்கடி விற்பனைத் தந்திரங்களைக் காண்போம். ஆடித் தள்ளுபடி, தீபாவளி டமாக்காக்களைத் தொடர்ந்து இன்றைக்கெல்லாம் வாரக்கடைசிக்குக் கூட தள்ளுபடி கொடுத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். 

இவர்களது விளம்பரங்களுக்கு எல்லையே இல்லை. லோக்கல் டிவி யிலிருந்து சாட்டிலைட் டிவி வரை இவர்கள் ராஜ்யமே. வருங்காலத்தில், கனவுகளுக்குக்  கூட உரிமம் பெற்று அதிலும் விளம்பரங்களை ஒளிபரப்புவார்கள். அவர்களும் பாவம், எத்தனை தந்திரங்களைத்தான்   கையாளுவார்கள்??உண்டியல் குடுக்கிறோம், மரம் நடுகிறோம் என்றெல்லாம் தொடங்கி கோடைக்கு கூழ் வரை கொடுத்து பார்த்தாவது கூட்டத்தை அள்ளி விடுகின்றனர்.  பளிச்சென நடிகைகள் பளபளக்கும் (அரைகுறை) ஆடைகளுடனும் ஜொலிஜொலிக்கும் நகைகளுடனும் பிரமாண்டமாய் வரவேற்று வாங்கிய பல லட்சத்திற்கு புன்னகைத்து, சிரித்து, ஆர்ப்பரித்து, நடனமாடி, ஆச்சரியப்பட்டெல்லாம் வசீகரித்து கூட்டத்தை வரவேற்பார். பிறகென்ன?? வியாபாரம் கன ஜோர் தான்..

ஆனால், சாமானியர்களின் வியாபாரத்தந்திரங்கள் சுவாரசியமானவை. வீடு வீடாக கீரை விற்பவர், தெரு தெருவாக ஐஸ் கிரீம் விற்பவர், வீதி வீதியாக பொறி விற்பவர், கூவிக் கூவி நடமாடும் பேன்சி கடை வைத்திருப்பவர், பேருந்துகளில் செய்தித்தாள் விற்பவர், அன்னாசி விற்பவர், NH ல் டி-ஷர்ட் விற்பவர், பஞ்சு மிட்டாய் விற்பவர் கூட வியாபாரி தான். அவர்களின் 
வியாபாரத்தந்திரங்களை என்றேனும் கவனித்திருகின்றீர்களா? ?

கீரை விற்கும் பாட்டியிடம் சில்லரைக்கோ அல்லது அதிக விலைக்கு பேரம் பேசுகையில், 'இதில் என்ன  கண்ணு எனக்கு கிடைசுறபோகுது??, நீ என் பொண்ணு மாதிரி' என்று உருகுவார். அவர் மனதாரச் சொன்னாரோ இல்லையோ, அந்த நொடியில் நம் அம்மா முகம் நம் மனதில் பளிச்சிடும். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்காகவாவது  அம்மா நம் நினைவில் இருக்க மாட்டார்கள்? அந்த நினைவிர்க்காகவே அடுத்த நாள் நம் மனம் பாட்டி யை எதிர்பார்க்கும், நம்மை அறியாமல்..அடுத்து, ஐஸ் கிரீம்!! என்ன தான் இப்ப எல்லாம் ஏ.சி பார்லர் ல ஐஸ் கிரீம் சாப்டாலும், ஐஸ் காரரிடம் வாங்கும் பால் ஐஸ் தான் என்னோட பேவரிட். செமையா இருக்கும். அதுவும் அவரோட ஐஸ் பெட்டி எப்படி இருக்கும் னு எட்டி எட்டி பாப்போம். ஆனா, இருட்டா புகை மட்டும் வரும். சில்லுனு அதை அனுபவிச்ச சந்தோசம், பூரிப்பு எங்க எல்லோர் முகத்திலையும் இருக்கும். சைக்கிளில் அவர் மாட்டி இருக்கும் பல பல வண்ணத்  தோரணங்கள், முன்னே தகர டின்னில் வைத்திருக்கும் கோன்கள், பீப்பி என்று ஷோ ரூம் குரிய அத்தனை அந்தஸ்துகளோடும் வருவார்.

வெள்ளை வெளேர் சாக்கு மூட்டையில், மொரு மொரு பொறிகள். சைக்கிள் முன்னே நாலைந்து பைகளில் பொட்டுக்கடலை, கார பூந்தி, அவல், நிலக்கடலை இத்யாத்திகள். பொறி வாங்க வரும் சுட்டி களின் பிஞ்சுக்கை நிறைய கடலையோ, பூந்தியோ கொடுபார். அடுத்த முறை அந்தக்கடலை காகவே தான் நண்பர் கூட்டத்தோடு பொறி வாங்க நிச்சயம் வாண்டுகள் வரும்.

4 மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஐயே தான் தள்ளு வண்டியில் கொண்டு வந்து விடுவர், எங்க ஊர் நடமாடும் பேன்சி தள்ளு வண்டிக்காரர். அதுவும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு நடிகையின் பெயரோடு, காரணங்கள் வேறு. 'குஷி' ஜோதிகா கிளிப் முதல் 'எங்கேயும் காதல்' ஹன்சிகா வளையல் வரை வைத்திருப்பார். இந்த ரசனையான விளக்கத்திற்காகவே ஏதாவது வாங்கத்தோணும். 


நான் ரொம்ப ஆச்சரியப்பட்டுப் பார்க்கின்ற விஷயம், பேருந்து நிலையத்தில் தினசரிகள் விற்பவர். சடசடன்னு, கம்பீரமா பத்தே நொடிகளில் செய்தி வாசிச்சுட்டு போய்டுவார். சன் டிவி தலைப்புச் செய்திகள் கூட இந்த அளவுக்கு இருக்காது. போஸ்டர் கிடையாது, காட்சிகள் கிடையாது, நடிகை கள் கிடையாது, பிரபலங்கள் கிடையாது, 'ஒன் மேன் ஆர்மி' மாதிரி அட்டகாசமா வித்துட்டு போவார். 

மற்று மோர் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், 'கையேந்தி பவன்' கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு குடம் வச்சு கலர் கலர் ஆ லைட் எல்லாம் போட்டு கல க்கிருபாங்க. இதையும் ரசிப்போமாக..!!

இவங்க வெளி நாடு போய் MBA எல்லாம் படிக்கல, B-ஸ்கூல் லையும் படிக்கல, இவங்க கம்பெனி க்கு மார்க்கெட்டிங் எக்ஸிகுடிவ் கிடையாது. ஆனால், ஒரு நிமிடத்தில் நம்மை ஈர்த்து விடுகின்றனர். 

பெரிய பெரிய விஷயங்களில் ஆடம்பரத்தை அனுபவிப்பதை விட, சின்னஞ்சிறு விஷயங்களில் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உணருங்கள். ஏன், அதிலிருந்து கூட ஏதேனும் ஒரு வாழ்க்கைப்பாடம் நமக்கானதாகவே இருக்கும்.


7 கருத்துகள்:

 1. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. இந்த மாதிரி எத்தனையோ சின்ன விஷயங்கள் நம்மை கவராமல் போய் விடுகிறது. கவனிச்சு எழுதியதற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/8102011.html

  பதிலளிநீக்கு
 3. வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன்!
  சுவர்யச்யமான பதிவுகள்.தொடருங்கள்.திடர்கிறேன்!

  பதிலளிநீக்கு