ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பத்து வயது குழந்தையாக விழைகிறேன்..

கல்லூரி படிக்கும் எந்த இளவட்டத்தையாவது உங்கள் பொழுது போக்கு என்ன என்று கேட்டால், "Reading books, Browsing, Hearing music" னு சீன் போடுவாங்க. தம்பி, ரெசுமே கு எல்லாம் கேக்கல, பொதுவா சொல்லுப்பா' னா, "படம் பாப்போம், கிரிக்கெட் விளையாடுவோம், தூங்குவோம், போன் கடலை, மெசேஜ் கடலை" னு சொல்வாங்க. இப்ப இருக்கின்ற குழந்தைகளை கேட்டால், "activity note' இல் picture ஒட்டுவோம், Play station இல் விளையாடுவோம், CNN பாப்போம்" னு சொல்வாங்க. நான் 10 வயச இருக்கும் போது எங்க உலகமே வேற. சரியான எடக்குநாட்டான் னு நினைக்காதிங்க. எங்க உலகத்திலயும் Amusement park, Activity book... எல்லாமே இருந்துச்சு.. 

இப்பவெல்லாம் பொம்மை களுக்கு கூட brand name பார்த்து தான் வாங்கறோம். அனால், எங்க brand எப்பவுமே களிமண், மணல் தான். ஆனால், நாங்க பீச் ல பொய் மக்(mug) எல்லாம் வச்சு விளையாண்ட தில்லை. கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர் வச்சு இட்லி சுட்டிருக்கிறோம், அதில் கோவைப் பழங்கள், மணத்தக்காளி பழங்கள் வைத்து ரசனையோடு பரிமாறி உள்ளோம். 


நெல் வயல் சேற்று மண்ணைப் பதப்படுத்தி, பிசைந்து, அம்மி, செக்கு, அண்டா, குண்டா என எல்லாமே செய்வோம். சட்டை எல்லாம் சேறு குழப்பி, கை கால் எல்லாம் மண் படிந்து, 'கோவேறு கழுதை' என திட்டு வாங்கிய காலமெல்லாம்,  'Short-term memory loss' வந்த கூட மறக்காது.

இந்த செற்றைஎல்லாம் மோட்டார் தண்ணியில் கழுவி, ஒரு அரை மணி நேரம் ஆட்டம் போட்டு விட்டு கிணற்றில் குதிப்போம். அங்க தான் எங்க ஊரு வாண்டுகள் கூடமே இருக்கும். சுரை புருடை, கயிறு கட்டி பழகு கின்ற கூட்டம், புதுசா நீச்சல் கத்துக்கிட்டு ஒரு ஓரமா நீச்சல் அடிக்கின்ற ஒரு கூட்டம், ஒரு சில எக்ஸ்பேர்ட்ஸ் உயரமான இடத்திற்கு பொய் சாகசம் எல்லாம் பண்ணி வித்தை காட்டுவாங்க. கிட்டதட்ட 2 மணி நேரம், உடம்பெல்லாம் வெளுத்து, விறைத்துப் பொய், கினத்துக்கரர் வந்து திட்டவும், கூட்டம் கலைந்து விடும். வீட்டுக்கு பொய் பழைய சோறில் மோர் கரைத்து வெங்காயம் கடித்து 2-3 டம்ளர்  குடிச்சிட்டு ஆசுவாசமா கட்டில்'ல படுத்துட்டு கொஞ்ச நேரம் டிவி பாப்போம். டிவி னா CNN, Disney லாம் இல்லைங்க, DD1 ல புரியாத பாஷை ல ஏதோ நாடகம் போட்ருப்பான், அதை ஒரு அரை மணி நேரம். அதுக்குள்ள எங்க செக்கு, அம்மி எல்லாம் காய்ந்துருக்கும். அதை எல்லாம் மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டியில் போட்டு பத்திரபடுத்தி விட்டு, அதுக்கு மேல் ஒரு பழைய சாக்கை போட்டு, எவருக்கும் சந்தேகம் வராத படி , நைசாக நழுவி விடுவோம். 

பின், தென்னந் தோப்பிலோ, அல்லது ம மாற நிழலிலோ கட்டில் போட்டு பழைய நோட்டு, கதை புத்தகங்கள், கொண்டு பொய், சிவப்பு பேனாவில், டிக் போட்டு விளையாடுவோம், அதுவும் மிஸ் மாதிரி கையெழுத்து எல்லாம் போட்டு பாப்போம். அதுவும் போர் அடிச்ச, இலையை காய வச்சு, பழைய சோறு போட்டு நோட் ல ஒட்டி கலர் கலர் ஆ கோலம் போட்டு வச்சுப்போம். வீட்டுக்கு வரும் லெட்டர் இன் ஸ்டாம்ப், கடலை மிட்டாயில் வரும் சாமி படம், ஆசை மிட்டாய் காகிதம், பென்சில் சீவி வர இறகு, கோழி இறக்கை, ஐஸ் கிரீம் குச்சி, செய்தித்தாள் நிகழ்வுகள் னு ஏகப்பட்ட activities செய்வோம். அதையெல்லாம் ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட காட்டி குட் வாங்குறதுல அவ்ளோ சந்தோசம் !!!


சிறுவர் மலர் புத்தகத்தில் வரும் செய்து பாருங்கள் எல்லாம் செஞ்சு பார்த்து வீட்டில் அங்கங்கே ஒட்டி திட்டு வாங்குவ தெல்லாம் நினைத்தால் இன்னும் சிறு பிள்ளை யை மாறிடத் தோனும். 

தென்னங்கீற்றில் கடிகாரம் செய்து கடிக்கிறது, இளநீர் ல பப்பாளி தண்டு போட்டு உறிஞ்சுவது, நுங்கு சாப்பிட்டு விட்டு அதில் வண்டி செய்து ஓடுவது, டியர் இல் தூரி கட்டி விளையாடுவது.. இப்படி நான் அனுபவிச்ச விஷயங்கள் எத்தனை எத்தனையோ..

சனி, அக்டோபர் 01, 2011

பலப்பம் முதல் பேஸ்புக் வரை..

'பலப்பம்' என்றதும் குழம்ப வேண்டாம். பலப்பம் னா சிலேட் பென்சில். சிலேட் டில் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தொடங்குகிறது, மொழியோடு நாம் கொண்டிருக்கும் பயணம்.(பள்ளி  செல்லும் குழந்தைகளிடம் கூட இப்பவெல்லாம் சிலேட் இல்லைங்க. சிலேட் பென்சில் இருக்கான்னு கேட்டுப் பாருங்க. HB ஆ?? 2 HB ஆ? னு கேட்பாங்க.  )
 'A','B','அ','ஆ' என்று ஒற்றை எழுத்தில் தொடங்கிய நம் எழுத்துக்கள், இன்னும் ' ',' ',' ' என்று வளராமலேயே இருக்கிறதா? அல்லது வளர்ந்து முதிர்ந்து விட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.



'வணக்கம்!! நல்லாருக்கிறீங்களா ? வீட்டில் எல்லோரும் சவுக்கியமா? அப்புறம், எப்படி போய்க்கொண்டிருகிறது வாழ்க்கை??' என்று உறவு கொண்டாடிய கரிசனமான உபசரிப்புகளை 'whats up??' என்ற இரு வார்த்தைகளாய் சுருக்கி, அதையே 'watz ap?' என்று அர்த்தமே இல்லாமல் உருக்கி விட்டோம்.

வார்த்தைகள் மட்டுமா சுருங்கி விட்டன? வாழ்க்கையும் தான். பிறந்த நாளில் இருந்து, பொங்கல், தீபாவளி வரை வாழ்த்துக்கள் எல்லாம் இணையத்திலே தான். குறுந்தகவல்கள் கூட சோடை பொய் விட்டன. இணையத்தில் வாழ்த்துக்கள் தட்டச்சு செய்வது கூட இப்போதேல்லாம் குறைந்து விட்டன. பேஸ்புக் இல் like, ட்விட்டரில் share, கூகுளில் +1 என்று ஒரு சொடுக்கில் எல்லாம் முடிந்துவிட்டது. இதுவேண்டுமானால், இணையத்தின் வளர்ச்சியாக இருக்கலாம், ஆனால், வாழ்க்கையின் வீழ்ச்சியே!!


3 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 150 ரூபாய் வரை வாழ்த்து அட்டைகள் வாங்கி பொங்கல் பானை, கரும்பு, கோலம் எல்லாம் வரைந்து 'பொங்கல் வாழ்த்துக்களை' வித விதமாக எழுதி இப்படிக்கு என்று ஒரு லிஸ்ட் ஐயே எழுதி        கடைசியில் உறையில்  'Open with Smile :) ' என்பதை மறக்காமல் குறிப்பிட்டு பல விதமான தபால் தலைகள் வாங்கி, தாமதமாகி விட்டால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கையோடு தலைமை தபால் நிலையத்திற்கே சென்று அனுப்பிய காலமெல்லாம் மலை ஏறிவிட்டது.

அதுவும் தீபாவளி என்றால் இன்னும் குதூகலம்.வாழ்த்து அட்டைக்குள் சுருள் கேப் வைத்து அனுப்பி அடித்த லூட்டிகள் எல்லாம் பல. தீபாவளி க்கு பட்டாசு வாங்குவதில் ஆரம்பிக்கும், நண்பர்களுக்கும்  நமக்கும் இடையேயான போட்டி. 
அவனிடம் இல்லாத மாதிரி பட்டாசு வாங்க வேண்டும் என்று கடை கடையை ஏறி, மூலை முடுக்கெல்லாம் துலாவி வாங்கி வந்தால், பக்கத்து வீடு பட்டாசு சத்தம் ஊருக்கு வெளியே வரும் போதே கேக்கும். நமக்கு அப்படியே பக்குன்னு ஆய்டும்.

அவசர அவசரமாக பட்டாசு களை பிரித்து வைத்து வெளியே வெயிலில் காய வைத்து, 3 நாளைக்கு தேவையானவற்றை பிரித்து எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அப்புறம், போட்டி போட்டுக்கொண்டு பட்டாசுச் சத்தம் விண்ணை பிளக்கும். போட்டி எல்லாம் முதல் நாள் மட்டும் தான், அப்புறம் என்ன, தேர்தல் கூட்டணிக் கட்சிகள் மாதிரி ஒன்னுசெந்துட்டு அடிக்கிற ரவுசு இருக்கே!! இது தாங்க நெஜ தீபாவளி...



எப்படியும், தீபாவளி க்கு 5 நாள் லீவ் வரும். அம்மாய் வீட்டில் சிக்கன் , மட்டன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு தேம்பாய் பேச ஆயிரம் கதைகள் இருக்கும்..

இப்பவெல்லாம் பேஸ்புக் தீபாவளி தான். 2 நாள் லீவ் ல் 'Am going home town 4diwali.. happy diwali guys..' னு Status போட்டுட்டுபோனோம் னா, மத்தாப்பு பிடிக்கிற மாதிரி 4 போட்டோ எடுத்து போட்டுட்டு, ஷங்கர் பேட்டிய பார்த்துட்டு ட்வீட் பண்ணிட்டு , புது ரிலீஸ் படம் பாத்துட்டு, நல்ல சாப்டுட்டு லீவ் முடிஞ்சு status அப்டேட் போடுவோம், "d most wonderful day, dude!! bac 2 wrk'.. அதையும் 10 பேர் like பண்ணுவாங்க.. 

முடியல ங்க.. :(



ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

சொந்த ஊருக்கு ஒரு நடை போயிட்டு வாங்க..

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், கடைசி வரை சொந்த ஊரிலேயே வாழ்வது   என்பது முடியாத காரியம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம், வேலையில் பணி மாற்றம் என்றால் மட்டும், சொந்த ஊரை விட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த நிலை  கொஞ்சம் மாறி, வேலை என்றாலே வெளியூர் தான் னு ஆரம்பிச்சு இப்பவெல்லாம் ஐந்தாம் வகுப்புக்கே வெளியூரில் விடுதி வாழ்க்கை தான். 

இன்றைய காலகட்டத்தில் எல்லாருமே, புதியவற்றை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். புதிய தேடல், புதிய வாழ்க்கை முறை, புதிய நண்பர்கள்.. இன்னும் பல. ஒரு நாள் ஒரே ஒரு நாள் மட்டும் நாம் தவற விட்ட விஷயங்களை நினைவு கூர்ந்தோம் என்றால், பல நினைவுகள் இறக்கை கட்டி நம் கண் முன்னே வரும்.


வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருப்பவர்கள் ஊருக்கு வரும் வழியைபார்த்தாலே நிறைய மாற்றங்கள். புதுப்பிக்கப்பட்ட அல்லது மிகவும் பழுதடைந்த சாலை, புதிய தெரு விளக்குகள், ஊராட்சி மன்ற கட்டிடத்தில் பெயர் பலகை மாற்றம், புதிய குடிநீர்க் குழாய்கள், வண்ணம் பூசி ஈர்க்கும் ஆரம்பப்பள்ளி, இன்னும் கொஞ்சம் தொப்பையோடு கெத்தாக சிரிக்கும் பிள்ளையார், பளிச்சென்று இருக்கும் வாய்க்கால்கள், புதிக முளைத்துள்ள வீடுகள், வெட்டப்பட்ட மரங்கள், உள்ளூர் சினிமா பட போஸ்டர் கள், வழியெங்கும் சிரிக்கும் சிநேகமான முகங்கள், ஐஸ்வர்யா ராய் சிரிக்கும் ப்ளெக்ஸ் போர்டுகள் இன்னும் எக்கச்சக்கமாய் பல. 

இதில் உறவுகளைத் தான் ரொம்பவே மிஸ் பண்றோம். சொந்த ஊரில் ஏதேனும் விசேஷம்  என்றால் எல்லாம் பார்த்த முகங்களாவே இருக்கும். ஆனால், யாரு பெரியம்மா, யாரு அத்தை முறைன்னே தெரியாது. அதுவும் நிறைய பேர், வாலண்டியரா வந்து, "கண்ணு.., நல்லாருகறியா?? நான் யாருன்னு தெரியுதா?" னு கேட்பாங்க. இன்னார் நீங்க, நல்லாறுகறிங்களா? னு திருப்பிக் கேட்டோம் னா, அவங்க முகம் மலரும் பாருங்க, நமக்கே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
இன்னும் சில பாட்டிகள், "சின்ன புள்ளயா இருக்கும் போது, உங்க அப்பன் (??!!) கூட வண்டியில் காட்டுக்கு வரும் போது பாத்தது, துளியூண்டு இருப்ப, இப்ப நல்ல வளந்துட்ட" னு சொல்லும்போது, பேரரசு படத்தில் வர மாதிரி பிளாஷ் பேக் நமக்குள்ளயே ஓடும்.


அதுவும் விசேஷ வீட்டில் சாப்பிடறது இருக்கே, வாழை இலை போட்டு வரிசையா உட்காந்தால், விசேஷ கவனிப்பு நமக்கு கண்டிப்பா இருக்கும். "ஏம்மா, ஒரம்பறைய கவனிங்க","மாப்பிள்ளைக்கு இனிப்பு சேத்து வைங்க" னு ஆளாளுக்கு உத்தரவு போடுவாங்க. அதுவும் எங்க ஊர் பக்கம் பந்தியில் அப்பளம் போட்டு பழம், சர்க்கரை போட்டு நொறுக்கி பிசைந்து சாப்பிடுவோம். ரொம்ப நல்லாருக்கும். எங்க கல்லூரியில் அதை சொன்னால் சிரிக்கிறாங்கப்பா. நீங்க பப்ஸ் க்கு சாஸ் ஊத்தி சாப்பிடுவதற்கு இது ஒன்னும் மோசம் இல்லை.

அம்மா வோட பருப்பு சாம்பார், அத்தையோட புளிக்கொழம்பு, சித்தி வீட்டில் சிக்கன், அம்மாயி வீட்டில் வடை, பாயசம், பெரியம்மா வீட்டில் முட்டை குருமா ' ன்னு ஸ்பெஷல் சுவை நம்ம ஊர் சாப்பாட்டில் மட்டுமே இருக்கும்.




வாகன நெரிசலே இல்லாத ரோட்டில் குட்டி பசங்களுக்கு சைக்கிள் கத்துக் குடுப்பதாகட்டும், சுரை புருடை கட்டி நீச்சல் கத்துக்குடுப்ப தாகட்டும், நுங்கு இல் வண்டி ஓட்டுவ தாகட்டும், கோவைக்காய்க்கு கண், மூக்கு, மீசை வைத்து விளையாடுவதாகட்டும், தென்னை ஓலையில் கடிகாரம் செய்து கட்டிக்கரதாகட்டும், இளநீர்க்கு பப்பாளி த் தண்டு போட்டு குடிப்பதாகட்டும், நம்ம ஊருக்கு நிகர் நம்ம ஊர் தான்..

இனி இவ்வளவையும் மிஸ் பண்ணுவிங்க?? விடு ஜூட்...........



வியாழன், செப்டம்பர் 15, 2011

சாமானியர்களின் விற்பனைத்தந்திரங்கள்

பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் ஆகியவற்றில் அடிக்கடி விற்பனைத் தந்திரங்களைக் காண்போம். ஆடித் தள்ளுபடி, தீபாவளி டமாக்காக்களைத் தொடர்ந்து இன்றைக்கெல்லாம் வாரக்கடைசிக்குக் கூட தள்ளுபடி கொடுத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். 

இவர்களது விளம்பரங்களுக்கு எல்லையே இல்லை. லோக்கல் டிவி யிலிருந்து சாட்டிலைட் டிவி வரை இவர்கள் ராஜ்யமே. வருங்காலத்தில், கனவுகளுக்குக்  கூட உரிமம் பெற்று அதிலும் விளம்பரங்களை ஒளிபரப்புவார்கள். அவர்களும் பாவம், எத்தனை தந்திரங்களைத்தான்   கையாளுவார்கள்??



உண்டியல் குடுக்கிறோம், மரம் நடுகிறோம் என்றெல்லாம் தொடங்கி கோடைக்கு கூழ் வரை கொடுத்து பார்த்தாவது கூட்டத்தை அள்ளி விடுகின்றனர்.  பளிச்சென நடிகைகள் பளபளக்கும் (அரைகுறை) ஆடைகளுடனும் ஜொலிஜொலிக்கும் நகைகளுடனும் பிரமாண்டமாய் வரவேற்று வாங்கிய பல லட்சத்திற்கு புன்னகைத்து, சிரித்து, ஆர்ப்பரித்து, நடனமாடி, ஆச்சரியப்பட்டெல்லாம் வசீகரித்து கூட்டத்தை வரவேற்பார். பிறகென்ன?? வியாபாரம் கன ஜோர் தான்..

ஆனால், சாமானியர்களின் வியாபாரத்தந்திரங்கள் சுவாரசியமானவை. வீடு வீடாக கீரை விற்பவர், தெரு தெருவாக ஐஸ் கிரீம் விற்பவர், வீதி வீதியாக பொறி விற்பவர், கூவிக் கூவி நடமாடும் பேன்சி கடை வைத்திருப்பவர், பேருந்துகளில் செய்தித்தாள் விற்பவர், அன்னாசி விற்பவர், NH ல் டி-ஷர்ட் விற்பவர், பஞ்சு மிட்டாய் விற்பவர் கூட வியாபாரி தான். அவர்களின் 
வியாபாரத்தந்திரங்களை என்றேனும் கவனித்திருகின்றீர்களா? ?

கீரை விற்கும் பாட்டியிடம் சில்லரைக்கோ அல்லது அதிக விலைக்கு பேரம் பேசுகையில், 'இதில் என்ன  கண்ணு எனக்கு கிடைசுறபோகுது??, நீ என் பொண்ணு மாதிரி' என்று உருகுவார். அவர் மனதாரச் சொன்னாரோ இல்லையோ, அந்த நொடியில் நம் அம்மா முகம் நம் மனதில் பளிச்சிடும். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்காகவாவது  அம்மா நம் நினைவில் இருக்க மாட்டார்கள்? அந்த நினைவிர்க்காகவே அடுத்த நாள் நம் மனம் பாட்டி யை எதிர்பார்க்கும், நம்மை அறியாமல்..



அடுத்து, ஐஸ் கிரீம்!! என்ன தான் இப்ப எல்லாம் ஏ.சி பார்லர் ல ஐஸ் கிரீம் சாப்டாலும், ஐஸ் காரரிடம் வாங்கும் பால் ஐஸ் தான் என்னோட பேவரிட். செமையா இருக்கும். அதுவும் அவரோட ஐஸ் பெட்டி எப்படி இருக்கும் னு எட்டி எட்டி பாப்போம். ஆனா, இருட்டா புகை மட்டும் வரும். சில்லுனு அதை அனுபவிச்ச சந்தோசம், பூரிப்பு எங்க எல்லோர் முகத்திலையும் இருக்கும். சைக்கிளில் அவர் மாட்டி இருக்கும் பல பல வண்ணத்  தோரணங்கள், முன்னே தகர டின்னில் வைத்திருக்கும் கோன்கள், பீப்பி என்று ஷோ ரூம் குரிய அத்தனை அந்தஸ்துகளோடும் வருவார்.

வெள்ளை வெளேர் சாக்கு மூட்டையில், மொரு மொரு பொறிகள். சைக்கிள் முன்னே நாலைந்து பைகளில் பொட்டுக்கடலை, கார பூந்தி, அவல், நிலக்கடலை இத்யாத்திகள். பொறி வாங்க வரும் சுட்டி களின் பிஞ்சுக்கை நிறைய கடலையோ, பூந்தியோ கொடுபார். அடுத்த முறை அந்தக்கடலை காகவே தான் நண்பர் கூட்டத்தோடு பொறி வாங்க நிச்சயம் வாண்டுகள் வரும்.

4 மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஐயே தான் தள்ளு வண்டியில் கொண்டு வந்து விடுவர், எங்க ஊர் நடமாடும் பேன்சி தள்ளு வண்டிக்காரர். அதுவும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு நடிகையின் பெயரோடு, காரணங்கள் வேறு. 'குஷி' ஜோதிகா கிளிப் முதல் 'எங்கேயும் காதல்' ஹன்சிகா வளையல் வரை வைத்திருப்பார். இந்த ரசனையான விளக்கத்திற்காகவே ஏதாவது வாங்கத்தோணும். 


நான் ரொம்ப ஆச்சரியப்பட்டுப் பார்க்கின்ற விஷயம், பேருந்து நிலையத்தில் தினசரிகள் விற்பவர். சடசடன்னு, கம்பீரமா பத்தே நொடிகளில் செய்தி வாசிச்சுட்டு போய்டுவார். சன் டிவி தலைப்புச் செய்திகள் கூட இந்த அளவுக்கு இருக்காது. போஸ்டர் கிடையாது, காட்சிகள் கிடையாது, நடிகை கள் கிடையாது, பிரபலங்கள் கிடையாது, 'ஒன் மேன் ஆர்மி' மாதிரி அட்டகாசமா வித்துட்டு போவார். 

மற்று மோர் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், 'கையேந்தி பவன்' கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு குடம் வச்சு கலர் கலர் ஆ லைட் எல்லாம் போட்டு கல க்கிருபாங்க. இதையும் ரசிப்போமாக..!!

இவங்க வெளி நாடு போய் MBA எல்லாம் படிக்கல, B-ஸ்கூல் லையும் படிக்கல, இவங்க கம்பெனி க்கு மார்க்கெட்டிங் எக்ஸிகுடிவ் கிடையாது. ஆனால், ஒரு நிமிடத்தில் நம்மை ஈர்த்து விடுகின்றனர். 

பெரிய பெரிய விஷயங்களில் ஆடம்பரத்தை அனுபவிப்பதை விட, சின்னஞ்சிறு விஷயங்களில் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உணருங்கள். ஏன், அதிலிருந்து கூட ஏதேனும் ஒரு வாழ்க்கைப்பாடம் நமக்கானதாகவே இருக்கும்.


திங்கள், ஆகஸ்ட் 22, 2011

வணக்கம் தமிழகம்...

சன் டிவி இல் 'வணக்கம் தமிழகம்' னு ஒரு நிகழ்ச்சி வருமே, அதன் நேரடி ஒளிபரப்பை பார்த்து இருக்கீங்களா? எங்க ஊருக்கு வாங்க, நான் நேர்லயே காட்றேன். 
காலைல 5.30 க்கு பால் சொசைட்டி க்கு பால் கொண்டுட்டு போனால், கோவில் திண்ணை, பயணிகள் நிழல்குடை, ஆலமரத்து திண்ணை, வாய்கால் பாலம் நு மேடை ஏதாவது கிடைச்சுறும். முதல் 2 நிமிஷம் எதுவுமே பேசாமல், தொண்டையை செருமிகிட்டு இருப்பாங்க. அப்புறம் பாருங்க, சர வெடி தான்..
பெரும்பாலும் ஆரம்பிக்கின்ற முதல் விஷயம், 'நேத்து மார்க்கெட் ல மஞ்சள் என்ன விலை?', அப்புறம் பால், தக்காளி, தவிடு  னு போய் தங்கம், பெட்ரோல் ல வந்து நிக்கும்.


சும்மா விலையை பத்தி மட்டும் பேசிட்டு விட்ருவாங்க னு நினைக்காதிங்க. பீடி கம்பெனி எது நல்லாருக்கும், யாரு ஒரு நாளைக்கு எத்தனை குடிபாங்கன்னு நிலவரம் பார்த்துட்டு, சந்தைல தக்காளி யார் கிட்ட வாங்கினா நல்லாருக்கும் ஒரு அலசல் நடக்கும்.
அப்புறம், செல் போன். எவ்வளவு போட்டால், இவ்வளவு பணம் (talk value pa) ஏறுது, அதில் கடை காரனுக்கு கமிஷன் எவ்வளவு, யார் யாருக்கு என்ன என்ன, அவன் எப்படி சம்பாதிக்கிறான்'னு கணக்கு போடுவாங்க. வோடபோன் ஓட்டை போன் ஆகறதெல்லாம் இங்க தான்.
அப்புறம், இந்த நிழல் குடை கட்டினத்தில் குத்தகை காரர் எப்படி சம்பாதிக்கிறார் , ஊராட்சி தலைவர் கு என்ன பங்கு, MP, MLA வரைக்கும் கொண்டு பொய், தமிழக முதல்வரையே இழுப்பாங்க. அது கருணாநிதி னாலும் சரி, ஜெயலலிதா  னாலும் சரி, யாரும் தப்ப முடியாது.

அவங்களை விடுங்க, ஒபாமா வே சில சமயம் அல்லாடுவார். அந்த பேச்சு இப்படி ஆரம்பிக்கும், இன்னார் பேரன் போன மாசம் தான் வேளைக்கு போனான் , மாசம் 30,000 சம்பளம் வாங்கறான். அதெப்படி அவங்களுக்கு கட்டுமா? னு ஒரு கேள்வி வரும். அதுக்கு அப்புறம், இன்னார் பையன் அமெரிக்க வில் ஒன்றரை லட்சம் ம் பாங்க. அங்க தான் ஒபாமா அண்ணன் (அண்ணன் வேணாம், சித்தப்பா ) வருவார். அவர் வந்ததினால் வேலை போகுமாம், சம்பளம் குறையுமாம் னு சுவாரஸ்யமா போகும்.
இன்ஜினியரிங் படிச்சுட்டு நம்ம ஊர்ல வேலை கிடைக்காம எந்த பையன் இருக்கான், அவன் படிக்க எவ்வளவு ஆச்சு, நன்கொடை எவ்ளோ குடுத்தாங்க கிறதில் ஆரம்பிச்சு, அந்த கல்லூரி விடுதியில் தோசை சுட மெசின் இருக்கு கிறது வரை பேசுவாங்க. 

அப்புறம் ஒரு 2 நிமிஷம் இடைவேளை. மறுபடியும் தோசை ல வந்து நிக்கும். தோசை சாப்பிட்டா பசி எடுக்கறதில்லை, தேங்காய் சட்னி சாப்பிட்டால் நெஞ்சு கரிக்கிறது, டாக்டர் கிட்ட போனால் ஒன்னும் இல்லைன்னு சொல்றாங்க, நு சின்னதா ஒரு புலம்பல். (என்னங்க, எல்லா டாபிக் உம் வந்துருச்சா??)
இன்னைக்கு இது போதும் னு முடிவு பண்ணி, யாரோ ஒருத்தர் எந்திரிபாங்க, அப்படியே கூட்டமும் கலைந்து விடும்.
அப்புறம் என்ன?? நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 'தமிழ் மாலை' தான்..

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கல்வி - இப்படியும் இருக்கலாமே...

இந்த தலைப்பை பார்த்ததும் தெரிஞ்சிருக்கும், அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியா சமச்சீர் கல்விக்கு வருவாங்கன்னு. சமச்சீர் கல்வியை விமர்சிக்கின்ற அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது, 

ஒரு மாணவர் என்கின்ற முறையில் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்காக, இப்பொதுள்ள கல்வி முறையை நான் குறை கூற வில்லை. வெண் பொங்கலில் உள்ளது போல அங்கங்கே கொஞ்சம் (அதிகமான) மிளகுகள்! அதை விரும்பி உண்பவர்கள் வெகு சிலரே!! மிளகுகளை கலைத்து, இன்னும் கொஞ்சம் முந்திரி சேர்த்து, நெய் விட்டு, திருப்தியாக சுவையாக அளிக்கலாமே??!!


ஐந்தறிவு மிருகங்கள் கூட தன குட்டி களுக்குத் தேவையான வற்றையே முழுமையாக கற்றுக்கொடுக்கின்றன. காக்கை, குருவி கள், பறக்கவும், இரை தேடவும் மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. நீந்துவதற்கோ, ஓடுவதற்கோ கற்றுக்கொடுப்பதில்லை. ஆயினும், அவர்கள் உலகம் அவ்வளவு போட்டி நிறைந்ததல்ல. நம் உலகை சமாளிக்க அனைத்து த்துறையிலும் திறன் அவசியமே. அத்திறன் அரைகுறையாய் புகுத்தபடுகிறது என்பதே எனது வாதம். புகுத்தபடுகிறது என்பதை விட வலுக்கட்டயமாக திணிக்கபடுகிறது என்பதே சாலப் பொருந்தும். இப்போதெல்லாம், கல்லூரி ப்படிப்பு கூட, விருப்பதிற்கேற்ப  இருக்கிறது என்று எண்ணிகொள்ளலாம்.. (எண்ணம் மட்டும் தான்!! அவரவர் கஷ்டம் அவரவருக்கு :) ). ஆனால், பள்ளிபடிப்பு??

ஆக, எப்படி த்தான் இருக்க  வேண்டும் கல்வி?? அப்படி கேளுங்க.. எத்தனை குழு?? துணை வேந்தர், விரிவுரையாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் என் ஆய்வாளர்கள்.. இவர்களை  எல்லாம் கேட்கின்றீர்களே.. எதாவது மாணவர்களை கேட்கலாம் அல்லவா??


இயற்பியலில், பிரஷர் குக்கரில் ஆரம்பித்து, டிவி வரை எப்படி இயங்குகிறது என்று கற்றுக்கொள்கிறோம். 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவரிடம், டிவி எப்படி இயங்குகிறது என்று கேட்டால் விழிப்பார். ஆனால், அவருக்கு சந்தையில் இருக்கும் LCD, LED முதல் புதிய வரவு ஜப்பான் டிவி கள் வரை அத்துபடி. நான் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய வேண்டும் என கூறவில்லை, நான் படித்த அடிப்படை விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்றே கூறுகிறேன். 

வேதியிலில், Acid, Base என்று 2 தடிமனான புத்தகங்கள், பற்றாக்குறைக்கு குறிப்பு புத்தகங்கள் எல்லாம் ஏறத்தாழ 2.5 ஆண்டுகள் படித்து, தேர்வெழுதி, 6 மாதம் கழித்து, ஏதேனும் மருத்துவக்குறிப்பில் இந்த வார்த்தைகளை காண நேரிட்டால், புத்தகத்தின் அட்டையும், தடிமனும் மட்டுமே நினைவில் நிற்கும். அதன் பொருட்டா கற்கிறோம்?? 

எவ்வித கணக்கையும் கால்குலேட்டரிலும், கணினியிலும் ஏன் அபாக்கசிலுமே போடத்தெரிந்த நமக்கு மனக்கணக்குகளை ஏன் போடத்தயங்குகிறோம்?? ஏன் தடுமாறுகிறோம்??? ஏன் கால்குலேட்டரையே நாடுகிறோம்???

இந்த தடுமாற்றத்தை CBSE ஒ  Matric ஒ ஏன் சமசீர் கல்வியோ தர முடியாது. ஒரு மாணவன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறானெனில், அவன் CBSE யிலும், தடுமாறி       
உரையாடு கிறான் என்றால் Matric பள்ளியிலும், ஆங்கிலத்தை லட்சியம் செய்யாமல் , தமிழில் உரையாடு கிறான் என்றால் அரசு பள்ளியிலும் பயின்றவனாக இருக்க வேண்டும். முதற்கட்ட இடைவெளி இங்கு தான் தொடங்கு கிறது. 

ஏறத்தாழ, Matric மற்றும் அரசு பள்ளி படங்கள் ஒன்றுதான் எனினும், பாடத்தின் தரம் மற்றும் ஆழம் வேறுபாடும். CBSE ஐ பொறுத்த மட்டில், அது விரிவு படுத்தப்பட்ட, அதிக செய்முறை விளக்கத்துடன் கூடிய, பளுச்சுமையுடன் கூடியது எனலாம். பாடத்துடன் பிற ஆர்வங்களையும் வளர்த்து விடுவது (கவனிக்க!! வளர்ப்பது வேறு, வளர்த்து விடுவது வேறு) இதன் பலம்.



அதற்காக, '3 இடியட்ஸ்' படத்தில் வருவது போல வேண்டும் என்பதல்ல இதன் முடிவுரை. எந்த வகை கல்வியானாலும் ஈடுபாட்டோடு, நாட்டத்தோடு , சுற்று புறத்தோடு ஒன்றி கற்க வைத்து, இடமறிந்து துணிவுடன் செயல்பட வைத்தலையே எங்கள் இளையதலைமுறைக்கு போதிப்பதை விரும்புகிறோம்.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

காலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(

எந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. 

                                   குழந்தை, மழை, இரயில் வண்டி 




இவை மூன்றும் திகட்டாத, என்றும் மாறாத ஆச்சர்யங்கள். ஆனாலுமே, இப்பொது குழந்தைகள் கூட சில சமயம் வயதுக்கு மீறிய பேச்சுக்கள் மூலம் நம்மை திகைக்க வைக்கின்றன. இரயில் வண்டிகளில் கூட இப்போதெல்லாம் ஒரு இயந்திர தனம் குறுக்கிட்டு விட்டது. மழையை இரசிப்பதற்கு கூட நம்மிடம் நேரமில்லை. அப்படி இரசித்தாலுமே, ' இது அமில மழையோ??' என்ற அச்சம் தோன்றி மறைகிறது. காலம் மிகவும் மாறிவிட்டது. 

எங்க ஊரும் அப்படிதான். நான் இளநிலை படிப்புக்காக 5 வருஷம் முன்னாடி எங்க கிராமத்தை விட்டு வெளியே வந்தேன். அப்போ இருந்த சி(ப)ல  விஷயங்கள்,  இப்போ நிச்சயமா இல்லை.

மஞ்சள் காட்டில் அப்போதெல்லாம் இரசாயன பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி எல்லாம் தெளிக்க மாட்டோம்.அதனால, பீட்ரூட், காரட், ஏன் முள்ளங்கி கூட நல்லா விளையும். இப்பவெல்லாம், மணத்தக்காளி கூட செழிப்பா வளரதில்லை. 



முன்னாடி எல்லாம்,எங்க வீட்ல நெல்லி - 2 மரங்கள், கொய்யா - 3, சப்போட்டா  - 1, ஆரஞ்சு - 1 , கொலுமிச்சை - 1, மாமரம் - 2, பாக்கு மரம் - 7, பப்பாளி - 4 மரங்கள் இருந்துச்சு. இப்ப முறையே 1, 2, 1, 0, 0, 1, 0, 0 மரங்கள் தாங்க இருக்கு. பாசன வசதி, நோய் தாக்குதல், இடப்பற்றாக்குறை ஆகியவற்றினால் அழிந்தும், அழிக்கபட்டும் விட்டன.

வாழைத்தோப்பு எப்பவுமே பசுமையா, தலை வாழை இலையோட, முரட்டு தாரோட இருக்கும். இப்ப எல்லாம், அப்படி கிடைப்பதே அதிசயமா போச்சு.

பன்னீர் ரோஜா, பட்டு ரோஜா, சிமெண்ட் ரோஜா, செவ்வந்தி, முல்லை, குண்டு மல்லி, கனகாம்பரம், மயில் மாணிக்கம், நந்தியாவட்டை,  செம்பருத்தி, மருதாணி, சங்கு பூ னு ஏகப்பட்ட செடி வகைகள் இருக்கும். 

ஆனா, இப்ப எங்க கேட்டாலும், ஊட்டி ரோஸ், பட்டன் ரோஸ், டேபிள் ரோஸ் மட்டும் தான்.

எங்க பாத்தாலும் பசுமையா இருக்க காரணமே அருகம் பில் தான். இப்ப எல்லாம் களைகொல்லி அடிச்சு அடிச்சு, மாட்டுக்கே பசும் பில் கிடையாது. மாட்டுத் தீவனம் தான். ஒரு மூட்டை ரூ. 430. இப்படி தீவனம் போடறது மாட்டை உறிஞ்சி பிழிந்து பால் கறக்கற மாதிரி. எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம்??



சாதாரணமாவே, துளசி, திருநீற்று பச்சை, சிறியா/ பெரியா நங்கை எல்லாம் வழி எங்கும் இருக்கும். இப்ப பல் வலின்னு தேடின கூட கிடைப்பதில்லை. (உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா?? என்ன கொடுமை பா இது??)

இன்னொரு விஷயம் பாத்திங்கன்ன, மாட்டு வண்டி. டவுன் ல கூட மாட்டு வண்டி இருக்குங்க. கிராமங்களில் தென்படுறதே இல்லை. அட, மாட்டு வண்டிய விட, சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட் எல்லாம் பார்ப்பதே ரொம்ப அதிசயம் தான்.


நாங்க கூட இப்ப பாரதிராஜா வின் கிராமத்தை அதிசயமா பார்க்கிறோம் ????

மழை காலங்களில் முளைக்கின்ற காளான், சாலை எங்கும் பூக்கும் கமலா பூ, ஆவாரம் பூ , நாரைகள், வெயில் காலத்து தெலுகு, நுங்கு, புது பானை தண்ணீர், பனி காலத்தில் பனங்கிழங்கு சுட்டு சாப்பிடுகின்ற சுகம்... இப்பொது எல்லாமே ஓடி ஒளிந்து விட்டது. நானும் ஒவ்வொரு விடுமுறை களிலும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.. உங்களுக்கேனும் அகப்படுகிறதா??