செவ்வாய், டிசம்பர் 13, 2011

உழவும் கலையும்

சிறப்பான வாழ்விற்கு மனிதனின் வயிறும் மனமும் நிறைய வேண்டும்.வயிறு நிறையும் படி உலகிற்கே படியளக்கும் பெருமை விவசாயிக்கே உண்டு. மன மகிழ்ந்து கொண்டாட வைக்கும் சிறப்பு கலையையே சார்ந்தது.

ஆயினும், ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டின் நோக்கமும் ஒன்றே, நிறைவே. ஊன்றி கவனித்தோமானால் விவசாயியும் கலைஞன் தான்; கலைஞனும் விவசாயி தான். இங்கு உயிரை வளர்க்க கரு, அங்கு கதையை வளர்க்க கரு.


விவசாயி  தன் நிலத்தை உழுது, பதமிட்டு மண்ணின் குணத்திற்கேற்ப பயிரை விதைக்கிறான். சமயத்தில் நீர் பாய்ச்சி, உரமிட்டு, களைகளை கலைத்து, கிட்டத்தட்ட தன் குழந்தை போல, அதன் தேவைக்கேற்ப பயிரை செப்பனிடுகிறான். இவை யாவும் முடிந்த வரை தன் கையாலும், முடியாத பட்சத்தில் தன் மேற்பார்வையிலாலும் பக்குவப்படுத்துகிறான். இதில் ஒட்டுண்ணிகளும், நுண் உயிர்களும் முக்கியப்பங்கு வகிக்கிறது. காலத்திற்கேற்ற ஊடு பயிர்கள், மழைக்கேற்ற பாசன முறைகள், பயிர்களுக்கேற்ற நுண் ஊட்டங்கள் என்று கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டியது, விவசாயம். பயிர் பருவத்தில் அறுவடை செய்து மக்களிடம் உணவு பொருட்களை சேர்க்க வேண்டிய உன்னதமான  பொறுப்பை விவசாயிடம் இயற்கை ஒப்புவித்துள்ளது.


கலை என்பது ஆதிதமிழர் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் என்று பொருள் கொள்ளப்பட்டது. கலையின் மொத்த வடிவே நாடகங்கள் ஆகும். பல பரிணாம வளர்ச்சிக்குப் பின், கால மாறுதலுக்கு உட்பட்டு திரைப்படங்கள் ஆயின.

கலைக்கு முக்கியமானது கதை, அது கலையின் கருவாக கொள்ளப்பட்டது. விவசாயிக்கு விதை போல. இங்கு, மக்களின் மனம், சமூக நிகழ்வுகள், அதன் விளைவுகளை அலசி ஆராய்ந்து, கதை கோணம் தீர்மானிக்கபடுகிறது. ஒரே ஒரு மையப்புள்ளியில் தொடங்கி, செப்பனிட்டு, இடை இடையே பாடல்கள், சண்டை காட்சிகள், நகைச்சுவைகள் என கதையின் வளர்ச்சிக்கேற்ப திரைப்படமாகிய நாடகம் வளரும். இதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கிட்ட  பெருமைகள் இணை இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்றோரையே சாரும். பயிருக்கு நுண் ஊட்டங்கள் போல, திரைப்படத்தை செதுக்குபவர்கள் இவர்களே. விவசாயிக்கு தன் பயிர் குழந்தை போல, இயக்குனருக்கும் அவர் குழுவிற்கும், அவர்களது திரைப்படம் குழந்தையே . பாத்து பார்த்து செதுக்கி, சீராட்டி, ரசித்து, செப்பனிட்டு, ஏறத்தாழ குழந்தைக்கும் - தாய்க்கும் இடையே உள்ள பந்தம் இது.
                                           



இரண்டின் லாப நஷ்டங்களும் மக்களாலேயே தீர்மானிக்கபடுகின்றன. விவசாயிக்கு சூரியனும் மழையும் கடவுளானால், கலைஞனுக்கு  ஒளியும், ஒலியும் கடவுள்கள். விவசாயி சந்தைபடுத்துவது சந்தையில், கலைஞன் சந்தை படுத்துவது திரையரங்குகளில். விவசாயிக்கு வருடம் ஒரு முறை தை மாதம் என்றால், கலைஞனுக்கு, அவன் படைப்புகள் வெளியாகும் மாதங்களெல்லாம் தை மாதங்களே.

அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதில் இருவருமே தன்னிகரற்ற முதலாளிகளே . காலமாற்றத்திற்கேற்ப இரு துறைகளிலும் மாசு நுழைந்து விட்டது.  விவசாயத்தில் இரசாயன உர வடிவில், திரைப்படங்களில் வன்முறை, ஆபாசங்கள் வடிவில். இவைகள் கூட மக்கள் ரசனை என்ற பெயரில்  பூசி மெலுக்கப்படுகின்றன. மாற்றம் தேவை. ஆனால், அந்த மாற்றத்தை துணிந்து செயல் படுத்துபவர்கள்  யார் என்பது , சுழலில் சிக்கிக்கொண்ட  படகின்  நிலையே. 


வியாழன், டிசம்பர் 08, 2011

உணர்வுகளும் விலைபோகிறதா??

நம் மனித பூவுடல் இரத்தம், சதை மட்டும் அல்லாது உணர்வுகளாலும் நிறைந்தது. ரத்தத்திற்கும் உணர்வுக்கும் நெருங்கிய சொந்தமுண்டு. மொத்த மகிழ்ச்சியில் உடல் முழுதும் சீறிப் பாய்ந்து கொண்டாடுவதாகட்டும், கவலைகளிலும் கோபத்திலும் தன ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாகட்டும், அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் உணர்வுகளோடு ஒன்றியே அமையும்.  

உணர்வுகள் பன்முகம் கொண்டது. ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி, நெஞ்சைப் பிழியும் சோகம், வலி, ஆக்ரோஷம், விரக்தி, ஆதங்கம், பயம், இழப்பு.. இப்படி எண்ணற்றவை.சில உணர்வுகள் பகிரக்கூடியவை. சில பகிரக்கூடாதவை. நம் பகிரும் உணர்வுகள் பலரிடம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, மகிழ்ச்சியான உணர்வுகள் மகிழ்ச்சியைப் பரப்பும், சோகம்  மட் றவரை ஆட்கொண்டு விடும், இழப்பு வெறுமையை விதைத்து விடும். சில உணர்வுகள் பகிரக்கூடாதவை. உதாரணம், விரக்தி - அளவுகடந்த விரக்தி தீய எண்ணங்களை மேலெலும்பச்செய்யும், ஆக்ரோஷம் - நல்ல உறவுகளை, ஏன், உயிரைக்கூட கொன்றுவிடும்.

எல்லாம் பணிமயமான இந்த உலகத்தில் உணர்வுகளும் விலை போகின்றன, ஊடகங்களின் வடிவில். மகிழ்ச்சியை கொண்டாடும் ஊடகங்கள் வெகு சிலதே. 

இழப்பின் வலி, வாழ்வின் விரக்தி, அதில் தடுமாறும் நாயகனின் ஆக்ரோஷம், தேவையே இல்லாமல் வரும் நாயகியுடனான காட்சிகள், தன் தீவிரவாதத்தை சரி என்று நிரூபிப்பதில் போய்க்கொண்டிருக்கிறது, இன்றைய சினிமாக்கள்.

தந்தை-மகள், தாய்-மகன் பாசங்களை வியாபாரத்தனமாக எண்ணவில்லை நாங்கள். கவிதைகளாய் விவரித்த ஒரு தாய்க்கும்-கருவுக்கும் இடையே யான உணர்வுகளை கூட ரசித்தோம்.அனால், சிசுவை இழந்த தாயின் வலியை, அந்த உச்ச கட்ட கொதிநிலையை, எதற்காக காட்ட வேண்டும்??

தோல்வியை ஏற்கத்துணிவில்லாத நாயகன் போதையை நாடி செல்லத்தான் வேண்டுமா?

நாயகிகள் தங்கள் சுய மரியாதைகளை விடு விலகித்தான் நாயகர்களை கவர வேண்டுமா?

நகைச்சுவைக்கலைஞர்கள், தங்களையும் இழிவு படுத்தி, தங்கள் குடும்பத்தையும் இழிவுபடுத்தி த்தான் சிரிப்பு மூட்ட முடியுமா?

10 வருடம் முன்பான 'U' தணிக்கை சான்றிதழ் படங்களையும், தற்போதைய 'U' படங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால், உணர்வுகள் எப்படி வியாபாரமாக்கப்பட்டது  என்பது புரியும்.

திரைப்படங்கள் காற்று அடிக்கும் குழாய் போல, ஏற்கனவே பல உணர்வுகளை வெளியிட முடியாமல் திணறும் நம் மனதில், இன்னும் அழுத்தம் சேர்ந்தால், ஒரு நாள் வெடித்தே விடும். ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும் போதும் நம் மனதில் நாம் அறியாமல் பூஞ்சைகள் படர்ந்துவிடும். அது நாளடைவில் விஷக்காலான்களாய் மாறுவதற்குள், ஜாக்கிரதை!!



ஞாயிறு, நவம்பர் 20, 2011

நட்பின் பரிணாமங்கள்

காதலுக்குப் பிறகு கவிதைகளும், பாடல்களும், திரைப்படங்களும் ஏன் விளம்பரங்கள் கூட கொண்டாடும் ஒரு அழகான கரு நட்பு.

'பகிர்தல்' என்ற வார்த்தையின் உட்பொருளே நட்பில் தான் புரிகிறது. ஐம்பது காசு மிட்டயைக்கூட ஐந்து பங்காக போடும் விசித்திரம் நட்பில் மட்டும் தான் இருக்கும். 

நட்பின் ஆரம்பம் 2 வயதில் நாய் குட்டியுடனோ, பூனைக்குட்டியுடனோ அல்லது பொம்மையுடனோ ஆரம்பிக்கும். சிலேட் பென்சில் வாங்குவதில்/தருவதில் தொடங்குகிறது ஒரு ஆத்மார்த்தமான நட்புடனான நம் பயணம். பிறகு அந்த சிலேட் பென்சில் பரிணாம வளர்ச்சி பெற்று மிட்டாய், அழி ரப்பர் பகிர்தலில் தொடங்கி சி(ப)ல சமயம் வாழ்க்கை பகிர்தலுக்கும் வழி வகுக்கும். 


ஆரம்பங்களில் நட்பு புதிய அறிமுகங்களாகவும், விளையாட்டுத் துணைகளாகவும் அடையாளங் கொள்ளப்பட்டது. மூன்றாம் வகுப்பில் வாய் மொழிப் பாடல்களும், ஏழாம் வகுப்பில் பிசிராந்தையார், ஒளவையார்-அதியமான் நட்புகள் நட்பின் சிறப்பை நமக்கு உணர்த்தும் கருவியாக்கப்பட்டது.

அதற்குப்பிறகு, நட்பு 'பகிர்தல்' பரிணாமத்திற்கு வருகிறது. படிப்பு சார்ந்த, உணவு சார்ந்த பகிர்வுகள் பரவலாக நட்பைத் தீர்மானிக்கும் காலம். பின், கருத்துகள் (கிண்டல்களும் தான்) கேட்பதற்கும் , சொல்வதற்கும் உற்ற துணையோ குழுவோ தேவைப்பட்டது. இங்கு தான் நட்பு அதன் முதல் பரிணாமத்தை  அடைகிறது. "பகிர்தல்"

ஆரம்பத்தில் மகிழ்ச்சி, கிண்டல்,  சில சமயம் சோகத்தைக் கூட பகிர்ந்து கொள்ளும் நம் நட்பு வட்டம், சில சமயங்களில் நம் குழப்பத்தையோ பயத்தையோ சரி வரத் தெளித்து வைக்கும் கலையை கையாள முடியாமல் திணறும். அப்பொழுது தான், நமக்கே நமக்கான ஒரு கை நம் குழப்பங்களை தாங்கிடவும், வழிகாட்டவும் தென்படுகிறது. இப்பொழுது  நட்பு அதன் இரண்டாம் பரிணாமத்திற்கு வந்து விட்டது. "ஆத்மார்த்தமான பகிர்வு"

பெரும்பாலும் பலரது நட்பு இந்த பரிணாமத்தை தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தாய்/தந்தையிடம் பகிர முடியாத, நட்பு வட்டத்தில் கூட கிடைக்காத மன நிம்மதியை  நிச்சயம் அந்த நட்பு கொடுக்கும்.

நட்பின் மூன்றாம் பரிணாமம் சுவாரஸ்ய மானது. "Just-A-minute நட்பு"
முன்பெல்லாம் ரயில் சிநேகிதம், கடித வழி சிநேகிதங்கள் நட்பின் ஆழத்தை புரிய வைத்தன. கடிதங்கள் இ-மெயில் களாகின. (காதல் கோட்டை => காதல் தேசம்). இப்பொழுது இணையம் கைக்குள் சுருங்கிய பிறகு வரிகளின் எண்ணிக்கை குறைந்து, வார்த்தைகள் சுருங்கிப்போயின. அனால், நட்பு வட்டம் மட்டும் நீள்கிறது. 


"The Social Networking Era". இது கூட நன்றாகத்தான் உள்ளது. ஒரே ஒரு சொடுக்கு நம் நட்பினை தீர்மானித்து விடுகிறது. பேஸ்புக், டிவிட்டர் வரிசையில் வலைபூத்தளங்களுக்கு என் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். செமஸ்டர் பரிச்சை நடு இரவில் கூட என் கருத்துகளை பகிர்வதற்கு ஒரு வட்டம் இருக்கிறது என்ற நட்புணர்வு என்னை சிறகடிக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் கூட பகிர்தலில் தான் சக்கை போடு போட்டுகொண்டிருக்கின்றன. எனவே, உங்களது அன்றாடத் தேடல்களில் மத்தியில், சந்தோஷங்களையும், துக்கங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தினம் தினம் காலைப்பனி முதல் இரவு நேரத்து வண்டுகளின் ரீங்காரம் வரை ரசித்துப்பகிர்வதர்க்கு  பல விஷயங்கள் உள்ளன. பகிருங்கள், பேஸ்புக் இல் அல்ல, உங்கள் நட்பிடம்.                                                 



வெள்ளி, நவம்பர் 04, 2011

என் விடுதி சாளரமும் மழைத்துளியும்..

அடை மழை வெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறது. சாளரத்தின் வழியே ஏக்கத்துடன் நோக்குகிறேன். நான் இருப்பதோ மூன்றாம் மாடியில். மழை சாரலுக்காக ஏங்கி கையை விட்டு எம்பிப்பார்த்தும் முடியவில்லை. பச்சை பசேல்  செயற்கை புல்வெளி, இரும்பு வேலியில் படர்ந்திருந்த செடியின் குட்டியூண்டு பிங்க் நிற செம்பருத்தி. தொலைவில் பரந்து விரிந்த கால்பந்து மைதானம். தேங்கி நிற்கும் மழை நீர். இதற்கு மேல் எனக்கு வர்ணனை வர வில்லை.

கிராமத்து மழை நாட்கள் எப்படி இருக்கும் தெரியுமா? சூரிய வெளிச்சம்  மங்க ஆரம்பித்த உடனே தாத்தா, பாட்டிகள், கண்ணுக்கு கையால்  குடை பிடித்து வானத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, மழை நிலவரம் கூறுவார். 'மேகம் கலந்ஜிருக்கு, தெக்கால பெய்யுது, வானம் கருக்குது, வெரசா வேலைய முடிங்க' என்று ஏகப்பட்ட வர்ணனைகள், கட்டளைகள். சன் டிவி ரமணன் வாக்கு கூட பொய்க்கும் ங்க, எங்க தாத்தா, பாட்டி வாக்கு நிச்சயம் பொய்க்காது. விறகு எடுத்து வைக்கறது, மாடுகளை தண்ணீர் காட்டி கட்டுவது, ஆடுகளை பட்டிக்குள் அடைப்பது என்று ஒரு பக்கம், ரோஜா செடி மொட்டுக்களை பறித்து வைப்பது ஒரு பக்கம், டிவி, பிரிட்ஜ் வயர் பிடுங்கி விடுவது ஒரு பக்கம், சிம்னி விளக்கு தேடுவது, கப்பல் விட காகிதம் தேடுவது.. இப்படி எத்தனை  களேபரங்கள், எத்தனை பரபரப்புகள்..


மழை தூரலுக்காக தலையில் சாக்கு போர்த்திக்கொண்டு செல்லும் ஒரு கூட்டம், மழை  க்கு ஒதுங்கும் அந்நிய விருந்தாளிகள், அவர்களின் ஏதேனும் ஒரு வழி சொந்தத்தை கண்டுபிடித்து உரிமையோடு பேசும் பாட்டி, 'இந்த பூனையை காணோம், எங்கே குளிருக்கு நடுங்கிக்கொண்டிருகிறதோ' என்று கரிசனப்படும் தாத்தா, கப்பல் விடலாம் அன்று நச்சரிக்கும் தம்பி, சளி பிடிச்சுக்கும் என்று அதட்டும் அப்பா, என்ன வேணும் பஜ்ஜியா, போண்டாவா என்று குறிப்பறிந்து கேட்கும் அம்மா..

வாளியில் மழை நீரைப்பிடித்து முகம் கழுவிய அந்த 'சில்' ஸ்பரிசம், சிம்னி விளக்கில் குளிர் காய்ந்த கதகதப்பு, ஆடு மாடுகளின் வித்யாசமான கூப்பாடுகள், இப்படியே மழை பேஞ்சா ஸ்கூல் லீவ் விட்றுவாங்களோ, தும்மல் வருதே நாளைக்கு காய்ச்சல் வந்துருமோ என்ற சின்ன சின்ன சந்தோஷமான  எதிர்பார்ப்புகள்...



இப்போது இதை எல்லாம்  எங்கோ தொலைத்து விட்டேனா??

நடு இரவில் துண்டிக்கப்படும் மின்சாரம், அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு நிற்கும் குழந்தை போல ஆடு மாடுகள், நிறம் மாறிய பண்ணை தண்ணீர்,  சில்லிட்டு  வரும் குழாய் நீர், தலை துவட்டாமல் நிற்கும் மரங்கள், உரல் நீரை வடித்து மழை அளவைக் கூறும் பாட்டி, இன்றைய வயல் வேலை கெட்டு விட்டது என்று வருந்தும் தாத்தா.. மழையால் தங்கள் வயல் வேலை கெட்டு விட்டது என்று குற்றம் சொல்லும்போது கூட, 'இன்றைய தினம் நமக்கு ஓய்வு' என்று அவர்களின் மனமும், உடலும் நிச்சயம் ஆசுவாசப்பட்டுக்கொள்ளும். 

காலையில் பெர்மிசன் போட்டு விட்டு வரும் சூரியன், தாமதமாக வரும் பள்ளி பேருந்து, வருமா வராதா  என்ற நிலையில் எங்க ஊர் மினி பஸ், மேலும் உற்சாகமாய் வரும் பண்பலை வர்ணனைகள்... அடுத்த நாள் சோம்பல் கூட சுகம் தானே??



இன்று, மழை நாளில் சூடாக பஜ்ஜி சாப்பிடலாம் என்று Cafeteria போனால் தீர்ந்து போயிருக்கும். இன்னும் பல நாட்கள் மழை பெய்ததா இல்லை செடிக்கு தண்ணீர்  விடப்படிருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கும். பின் கைபந்து மைதானம் உண்மையை உரைக்கும். 

சதா சாளரங்களை அடைத்துக்கொண்டு Head-set மாட்டிக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கும் பிடித்து விட்டதா? புரியாமல் எதிர்பார்கிறேன் அடுத்த மழை நாளுக்காக.. 

சனி, அக்டோபர் 29, 2011

விளம்பரங்களில் வாழ்க்கை

ஒரு நகரம் வண்ணமயமாக செழிப்பாக இருப்பது தான் அந்த நகரத்தின் அழகே. எங்கள் ஈரோடு மாநகரில் அந்த செழிப்பும் வண்ணமும் இருக்கிறது என்று பெருமை கொள்கிறேன்.

       'எங்கு நோக்கினும் சக்தியடா' என்பது போல், எங்கு நோக்கினும் விளம்பரத்தட்டிகள். புதிய வரவு சீரியல் முதல் பள்ளிக்கூடம் வரை, ப்ளெக்ஸ் தட்டிகளில் தங்கள் அருமை பெருமைகளை விவரிக்கின்றன.

இப்போதெல்லாம் பேருந்துப் பயணங்களில் புத்தகம் படிப்பதை விடவும் விளம்பரங்களை வேடிக்கை பார்ப்பது என் விருப்பமான பொழுது போக்காகிவிட்டது.

    உங்கள் விருப்பமான நடிகர் அறிமுகப்படுத்தும் செல்போன், வீரர்களின் பைக் சாகசங்கள், விளையாட்டு வீரர்களின் கையெழுத்து சிபாரிசோடு வரும் ஊட்டச்சத்து பானங்கள், நடிகைகள் கொண்டாடும் பட்டுபுடவைகள். இவை அத்தனையும் தாண்டி விளம்பரங்களில் ரசிப்பதற்கு ஓர் விஷயம் உள்ளது. 'குழந்தைகள்'.

முன்பு இருந்ததை விட, இப்போதெல்லாம் விளம்பர உத்திகள் மாறி விட்டன. இட்லி பொடி முதல் TMT கம்பிகள் வரை குழந்தைகள் ராஜ்ஜியமே. 'கறை நல்லது தானே?' என்ற கேள்விகளிலும், 'நான் ரொம்ப பிஸி' என்ற பெரிய மனுஷ தனத்திலும், 'மெசினிற்கு கை ஒட்ட வைக்கும்' சாமர்த்தியத்திலும், 'அப்படியே சாப்பிடுவேன்' என்ற சுட்டித்தனத்திலும், உலகின் அத்தனை அழகும் குழந்தைகளிடமே என்று பொறாமை கொள்ள வைக்கின்றன. அதுவும் CBSE பள்ளி விளம்பரங்களில் குட்டியூண்டு டாக்டர், எஞ்சினீயர் எல்லாம் கொள்ளை அழகு.


ஆனால், இந்த விளம்பரங்களில் தான் எத்தனை முரண்பாடுகள்? 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' விளம்பர தட்டிக்கு அருகில் தான் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளின் விளம்பரங்கள்,கோவில் கும்பாபிஷேக அறிவிப்பு போஸ்டர் களும் ஆபாச பட போஸ்டர் களும் ஒரே சுவற்றில் தான் ஒட்டப்படுகின்றன. 1 ரூபாய் அரிசி விற்கும் அதே தெருவில் தான் organic அரிசி கிலோ 45 என்று விற்பனை ஆகிறது. 

'விபத்தா? உடனடி சேவை' என்ற அரிமா சங்க விளம்பரம் துரு பிடித்த இரும்பு போர்டிலும், மித மிஞ்சிய திறன் கொண்ட புதிய அறிமுக பைக் கின் அறிவிப்பு  பிரமாண்டமாயும் இருக்கின்றன.

நீங்களே கவனித்து பாருங்களேன். காச நோய்க்கோ, தொழு நோய்கோ இலவச சிகிச்சை என்று ஆரம்பிக்கும் விளம்பர அறிவிப்புகள், ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு, 999 ரூபாய்க்கு செல்போன், 777 ரூபாய்க்கு branded சட்டை, 555 ரூபாய்க்கு பட்டுபுடவை, 111 ரூபாய்க்கு முழு டாக்டைம் அன்று பல கதைகள் சொல்லும்.



'ஐ லவ் யு ரஸ்னா' வில் தொடங்கி, 'ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்' என்று சக்கை போடு போடுபவை சந்தேகமே இன்றி தொலைகாட்சி விளம்பரங்கள் தான். ஒரு 15 நிமிட இடைவெளியில் நமது பல வருட கனவுகளை ஆசை காட்டி விட்டு செல்லும். 1.5 லட்சங்களில் ஆரம்பிக்கும் சொகுசு கார்கள், 3000 களில் ஆரம்பிக்கும் தொடு திரை கை பேசிகள், 19,999 களில் வைர ஆபரணங்கள், மாடுலார் சமையல் அறைகள், சீறிப்பாயும் பைக்குகள், சில லட்சங்களில் காலி மனைகள், பல லட்சங்களில் குடியிருப்புகள், வெளிநாட்டு முதலீடுகள், படிப்புகள்.... இப்படி எண்ணற்றவை. இவை ஒவ்வொன்றும் சராசரி இந்திய குடி மகனின் கனவுகள்.

தொலைகாட்சி விளம்பரங்களை விட வானொலி விளம்பரங்கள் சுவாரசியமானவை.பெரும்பாலும் இவை ஏதேனும் திரைப்பட பாடல் மெட்டுக்களாக இருக்கும். அந்த இசை அமைப்பாளரே வந்து மெட்டு போட்டது போல இருக்கும். மிக சாதாரணமான கணவன்,  மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள், இளசுகளின் பகிர்வுகள், இப்படி எதோ ஒன்றை வைத்தே அந்தத் தயாரிப்பை விளம்பரப்படுத்தி விடுவார்கள். 

'வாங்கிடீங்களா வாங்கிடீங்களா மான் மார்க் சீயக்காய் தூள்'

'குஷியான சமையலுக்கு ருசியான சங்கு மார்க் இட்லி பொடி'

'வகை வகையா சாபிடலாம் வயிறு நிறைய சாப்பிடலாம்' 

இதெல்லாம் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்கும் வாசகங்கள்.

சில சமயம் இந்த விளம்பரங்கள் கூட நம்மை கடுப்பேற்றும். கொஞ்சம் ஊன்றி கவனியுங்களேன், நிச்சயம் ஒவ்வொரு விளம்பரங்களிலும் ஒரு சின்ன ஏக்கம், குட்டியூண்டு எதிர்பார்ப்பு, பளிச் கற்பனை, நிறைய சந்தோசம், பொங்கும் உற்சாகம் என நிச்சயம் நிரம்பி இருக்கும்.



வெள்ளி, அக்டோபர் 14, 2011

இவ்வளவு தான் வாழ்க்கையா..?!

வாழ்க்கை - சந்தோஷமாக ஒவ்வொரு நொடியும் அனுபவித்து உற்சாகம் குன்றாமல் வாழவேண்டியது. சுதந்திரத்தில் பறவையாகவும் பொருள் தேடலில் எறும்புகள் போலவும், அனுபவித்தலில் வீட்டு செல்லப் பிராணிகள் போலவும் நாம் வாழும் வாழ்க்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா என்ன??

பள்ளிக்காலம் முழுக்க பெற்றோருக்காக, கல்லூரி காலம் முழுக்க வேலைக்காக , பின் எஞ்சி யுள்ள காலம் முழுவதும்?! -  பணத்திற்காகவா??
எதோ ஒரு வெளிநாட்டு நிறுவனம் நம்மை  வைத்து நம்மை யறியாமல் நம் திறமைகளை உறிஞ்சி பல லட்சங்களை சம்பாதிக்கிறது. அந்த லட்சத்திலிருந்து கிடைக்கும் ஒற்றை இலக்க சதவிததிற்காகவா  இரவும் பகலும் அல்லாடுகிறோம்?


ஆயிரங்களில் சம்பாதித்து படித்த முதலை எல்லாம் எடுத்து பின் அந்த ஆயிரங்களை லட்சமாக்கி அந்த லட்சங்கள் கோடிகளை எட்டும் வரை கண் மூடி உழைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும் போது நரையோடிக்கொண்டிருக்கும். எஞ்சி நிற்பதென்னவோ வருமான வரி கழிவிற்காக நாம் போட்டு வைத்திருந்த காப்பீடுகளும் முதலீடுகளும் தான்.

மகிழ்ச்சி என்பது வார இறுதியில் போகும் சினிமா விலோ , பொழுது போக்கு  பூங்காவிலோ, மாத  இறுதியில் போகும் பார்ட்டி யிலோ கிடைக்காது. ஏறத்தாழ இன்று அனைவரும் ஆர்பரிபிலேயே குதூகலம் அடைகின்றனர். மிரட்டும் ஒளி விளக்குகள்,  இரைச்சல் இசை, நவ நாகரிக கூட்டம், மற்றும் பல. அதில் நிறைவடைகிறதா உங்கள்  மனம்? அதிகாலை தலை வலியும், அடித்துப் போட்ட உடலுமே மிச்சம். இது  ஏதோ இன்றைய (நவ நாகரிக) சாமியார்களின் பிரசங்கம் மாதிரி இருக்கிறது என எண்ண வேண்டாம். உண்மையில் அவர்கள் கூறுவது போல, தேடல் தான் வாழ்க்கை. ஆனால் அது ஒரு போதும் பணத்தேடலாகி விடக் கூடாது.


அதிகாலை மங்கிய வெளிச்சத்தில், நிறைவாக ஒரு நடை, அவ்வப்போது எடுத்து பார்க்க நம்பர்களின் நினைவுகள் கிறுக்கல்களாக, பார்த்து பார்த்து செய்யும் உணவுகள், மிதவேகத்தில் ஊர்ந்து செல்லும் பயணங்கள், நம் பார்வையிலேயே நம்  ஸ்பரிசத்திலயே வளரும் வீட்டு செடிகள், அவசரமின்றி கிளம்பும் திங்கட்கிழமை, ஆவலுடன் எதிர்பார்க்கும் வெள்ளிக்கிழமை கோவில் மணி ஓசைகள், கைக்குட்டையில் நாமே போடும் தையல் பூக்கள், அறைக்கதவில் ரசனையோடு நாம் வரைந்திருக்கும் ஓவியங்கள், தினசரி யில் வரும் பொன் மொழிகள், கவிதைகள், நாள் பழங்கள், விளம்பரங்களில் வரும் குழந்தைகளின் கொஞ்சு மொழிகள், ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள், அனுபவித்து செய்யும் வீட்டு வேலைகள், ரசித்து செய்யும் வீட்டு அலங்காரங்கள், அடிக்கடி நினைவு கூறும் பழைய புகைப்படங்கள், வயதானவர்களோடு பேசும்போது நமக்கே அந்நிய மாகி விடும் நம் உரக்கப்பேச்சுகள், 'அட' போட வைக்கும் குழந்தைகளின் பெரிய மனுஷத்தன மான பேச்சுகள், வாவ் சொல்ல வைக்கும் சாலை ஓர பூக்கள், எண்ணற்ற  ஆச்சர்யங்கள் இருப்பது தானே வாழ்க்கை??


இப்போதெல்லாம், நம் விருப்பங்களை விட நம்மை சுற்றி இருப்பவர்களின் விருப்பங்களையே மதிக்கிறோம், உடை விஷயத்திலும் சரி, கொண்டாட்டங்களிலும் சரி.ஏதோ ஒரு உடை அது நமக்கு பிடிக்காவிடினும் 'Trend' என்ற பெயரில் அதையே நமது விருப்பமாக்கிகொள்கிறோம். இங்கே தான் நம் விருப்பத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுகிறது.

 அந்த இடைவெளியில் தான் ஊடகங்கள் நுழைந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. நிறைய சமயங்களில் விளம்பரங்களின் பின்னே நாம் ஓடுகிறோமா? என்ற எண்ணம் தோன்றும். எது எப்படியோ, நொடி முள்ளோடு ஓடாமல், இனியேனும் மணி முட்களோடு ரசித்துக்கொண்டே துரத்தி விளையாடலாம்.. நான் மிகவும் ரசித்த விளம்பரத்தில் வரும் வாசகம், முத்தாய்ப்பாக, 

" How much you earn should not decide how much you smile! "

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பத்து வயது குழந்தையாக விழைகிறேன்..

கல்லூரி படிக்கும் எந்த இளவட்டத்தையாவது உங்கள் பொழுது போக்கு என்ன என்று கேட்டால், "Reading books, Browsing, Hearing music" னு சீன் போடுவாங்க. தம்பி, ரெசுமே கு எல்லாம் கேக்கல, பொதுவா சொல்லுப்பா' னா, "படம் பாப்போம், கிரிக்கெட் விளையாடுவோம், தூங்குவோம், போன் கடலை, மெசேஜ் கடலை" னு சொல்வாங்க. இப்ப இருக்கின்ற குழந்தைகளை கேட்டால், "activity note' இல் picture ஒட்டுவோம், Play station இல் விளையாடுவோம், CNN பாப்போம்" னு சொல்வாங்க. நான் 10 வயச இருக்கும் போது எங்க உலகமே வேற. சரியான எடக்குநாட்டான் னு நினைக்காதிங்க. எங்க உலகத்திலயும் Amusement park, Activity book... எல்லாமே இருந்துச்சு.. 

இப்பவெல்லாம் பொம்மை களுக்கு கூட brand name பார்த்து தான் வாங்கறோம். அனால், எங்க brand எப்பவுமே களிமண், மணல் தான். ஆனால், நாங்க பீச் ல பொய் மக்(mug) எல்லாம் வச்சு விளையாண்ட தில்லை. கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர் வச்சு இட்லி சுட்டிருக்கிறோம், அதில் கோவைப் பழங்கள், மணத்தக்காளி பழங்கள் வைத்து ரசனையோடு பரிமாறி உள்ளோம். 


நெல் வயல் சேற்று மண்ணைப் பதப்படுத்தி, பிசைந்து, அம்மி, செக்கு, அண்டா, குண்டா என எல்லாமே செய்வோம். சட்டை எல்லாம் சேறு குழப்பி, கை கால் எல்லாம் மண் படிந்து, 'கோவேறு கழுதை' என திட்டு வாங்கிய காலமெல்லாம்,  'Short-term memory loss' வந்த கூட மறக்காது.

இந்த செற்றைஎல்லாம் மோட்டார் தண்ணியில் கழுவி, ஒரு அரை மணி நேரம் ஆட்டம் போட்டு விட்டு கிணற்றில் குதிப்போம். அங்க தான் எங்க ஊரு வாண்டுகள் கூடமே இருக்கும். சுரை புருடை, கயிறு கட்டி பழகு கின்ற கூட்டம், புதுசா நீச்சல் கத்துக்கிட்டு ஒரு ஓரமா நீச்சல் அடிக்கின்ற ஒரு கூட்டம், ஒரு சில எக்ஸ்பேர்ட்ஸ் உயரமான இடத்திற்கு பொய் சாகசம் எல்லாம் பண்ணி வித்தை காட்டுவாங்க. கிட்டதட்ட 2 மணி நேரம், உடம்பெல்லாம் வெளுத்து, விறைத்துப் பொய், கினத்துக்கரர் வந்து திட்டவும், கூட்டம் கலைந்து விடும். வீட்டுக்கு பொய் பழைய சோறில் மோர் கரைத்து வெங்காயம் கடித்து 2-3 டம்ளர்  குடிச்சிட்டு ஆசுவாசமா கட்டில்'ல படுத்துட்டு கொஞ்ச நேரம் டிவி பாப்போம். டிவி னா CNN, Disney லாம் இல்லைங்க, DD1 ல புரியாத பாஷை ல ஏதோ நாடகம் போட்ருப்பான், அதை ஒரு அரை மணி நேரம். அதுக்குள்ள எங்க செக்கு, அம்மி எல்லாம் காய்ந்துருக்கும். அதை எல்லாம் மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டியில் போட்டு பத்திரபடுத்தி விட்டு, அதுக்கு மேல் ஒரு பழைய சாக்கை போட்டு, எவருக்கும் சந்தேகம் வராத படி , நைசாக நழுவி விடுவோம். 

பின், தென்னந் தோப்பிலோ, அல்லது ம மாற நிழலிலோ கட்டில் போட்டு பழைய நோட்டு, கதை புத்தகங்கள், கொண்டு பொய், சிவப்பு பேனாவில், டிக் போட்டு விளையாடுவோம், அதுவும் மிஸ் மாதிரி கையெழுத்து எல்லாம் போட்டு பாப்போம். அதுவும் போர் அடிச்ச, இலையை காய வச்சு, பழைய சோறு போட்டு நோட் ல ஒட்டி கலர் கலர் ஆ கோலம் போட்டு வச்சுப்போம். வீட்டுக்கு வரும் லெட்டர் இன் ஸ்டாம்ப், கடலை மிட்டாயில் வரும் சாமி படம், ஆசை மிட்டாய் காகிதம், பென்சில் சீவி வர இறகு, கோழி இறக்கை, ஐஸ் கிரீம் குச்சி, செய்தித்தாள் நிகழ்வுகள் னு ஏகப்பட்ட activities செய்வோம். அதையெல்லாம் ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட காட்டி குட் வாங்குறதுல அவ்ளோ சந்தோசம் !!!


சிறுவர் மலர் புத்தகத்தில் வரும் செய்து பாருங்கள் எல்லாம் செஞ்சு பார்த்து வீட்டில் அங்கங்கே ஒட்டி திட்டு வாங்குவ தெல்லாம் நினைத்தால் இன்னும் சிறு பிள்ளை யை மாறிடத் தோனும். 

தென்னங்கீற்றில் கடிகாரம் செய்து கடிக்கிறது, இளநீர் ல பப்பாளி தண்டு போட்டு உறிஞ்சுவது, நுங்கு சாப்பிட்டு விட்டு அதில் வண்டி செய்து ஓடுவது, டியர் இல் தூரி கட்டி விளையாடுவது.. இப்படி நான் அனுபவிச்ச விஷயங்கள் எத்தனை எத்தனையோ..