செவ்வாய், டிசம்பர் 13, 2011

உழவும் கலையும்

சிறப்பான வாழ்விற்கு மனிதனின் வயிறும் மனமும் நிறைய வேண்டும்.வயிறு நிறையும் படி உலகிற்கே படியளக்கும் பெருமை விவசாயிக்கே உண்டு. மன மகிழ்ந்து கொண்டாட வைக்கும் சிறப்பு கலையையே சார்ந்தது.

ஆயினும், ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டின் நோக்கமும் ஒன்றே, நிறைவே. ஊன்றி கவனித்தோமானால் விவசாயியும் கலைஞன் தான்; கலைஞனும் விவசாயி தான். இங்கு உயிரை வளர்க்க கரு, அங்கு கதையை வளர்க்க கரு.


விவசாயி  தன் நிலத்தை உழுது, பதமிட்டு மண்ணின் குணத்திற்கேற்ப பயிரை விதைக்கிறான். சமயத்தில் நீர் பாய்ச்சி, உரமிட்டு, களைகளை கலைத்து, கிட்டத்தட்ட தன் குழந்தை போல, அதன் தேவைக்கேற்ப பயிரை செப்பனிடுகிறான். இவை யாவும் முடிந்த வரை தன் கையாலும், முடியாத பட்சத்தில் தன் மேற்பார்வையிலாலும் பக்குவப்படுத்துகிறான். இதில் ஒட்டுண்ணிகளும், நுண் உயிர்களும் முக்கியப்பங்கு வகிக்கிறது. காலத்திற்கேற்ற ஊடு பயிர்கள், மழைக்கேற்ற பாசன முறைகள், பயிர்களுக்கேற்ற நுண் ஊட்டங்கள் என்று கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டியது, விவசாயம். பயிர் பருவத்தில் அறுவடை செய்து மக்களிடம் உணவு பொருட்களை சேர்க்க வேண்டிய உன்னதமான  பொறுப்பை விவசாயிடம் இயற்கை ஒப்புவித்துள்ளது.


கலை என்பது ஆதிதமிழர் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் என்று பொருள் கொள்ளப்பட்டது. கலையின் மொத்த வடிவே நாடகங்கள் ஆகும். பல பரிணாம வளர்ச்சிக்குப் பின், கால மாறுதலுக்கு உட்பட்டு திரைப்படங்கள் ஆயின.

கலைக்கு முக்கியமானது கதை, அது கலையின் கருவாக கொள்ளப்பட்டது. விவசாயிக்கு விதை போல. இங்கு, மக்களின் மனம், சமூக நிகழ்வுகள், அதன் விளைவுகளை அலசி ஆராய்ந்து, கதை கோணம் தீர்மானிக்கபடுகிறது. ஒரே ஒரு மையப்புள்ளியில் தொடங்கி, செப்பனிட்டு, இடை இடையே பாடல்கள், சண்டை காட்சிகள், நகைச்சுவைகள் என கதையின் வளர்ச்சிக்கேற்ப திரைப்படமாகிய நாடகம் வளரும். இதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கிட்ட  பெருமைகள் இணை இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்றோரையே சாரும். பயிருக்கு நுண் ஊட்டங்கள் போல, திரைப்படத்தை செதுக்குபவர்கள் இவர்களே. விவசாயிக்கு தன் பயிர் குழந்தை போல, இயக்குனருக்கும் அவர் குழுவிற்கும், அவர்களது திரைப்படம் குழந்தையே . பாத்து பார்த்து செதுக்கி, சீராட்டி, ரசித்து, செப்பனிட்டு, ஏறத்தாழ குழந்தைக்கும் - தாய்க்கும் இடையே உள்ள பந்தம் இது.
                                           



இரண்டின் லாப நஷ்டங்களும் மக்களாலேயே தீர்மானிக்கபடுகின்றன. விவசாயிக்கு சூரியனும் மழையும் கடவுளானால், கலைஞனுக்கு  ஒளியும், ஒலியும் கடவுள்கள். விவசாயி சந்தைபடுத்துவது சந்தையில், கலைஞன் சந்தை படுத்துவது திரையரங்குகளில். விவசாயிக்கு வருடம் ஒரு முறை தை மாதம் என்றால், கலைஞனுக்கு, அவன் படைப்புகள் வெளியாகும் மாதங்களெல்லாம் தை மாதங்களே.

அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதில் இருவருமே தன்னிகரற்ற முதலாளிகளே . காலமாற்றத்திற்கேற்ப இரு துறைகளிலும் மாசு நுழைந்து விட்டது.  விவசாயத்தில் இரசாயன உர வடிவில், திரைப்படங்களில் வன்முறை, ஆபாசங்கள் வடிவில். இவைகள் கூட மக்கள் ரசனை என்ற பெயரில்  பூசி மெலுக்கப்படுகின்றன. மாற்றம் தேவை. ஆனால், அந்த மாற்றத்தை துணிந்து செயல் படுத்துபவர்கள்  யார் என்பது , சுழலில் சிக்கிக்கொண்ட  படகின்  நிலையே. 


வியாழன், டிசம்பர் 08, 2011

உணர்வுகளும் விலைபோகிறதா??

நம் மனித பூவுடல் இரத்தம், சதை மட்டும் அல்லாது உணர்வுகளாலும் நிறைந்தது. ரத்தத்திற்கும் உணர்வுக்கும் நெருங்கிய சொந்தமுண்டு. மொத்த மகிழ்ச்சியில் உடல் முழுதும் சீறிப் பாய்ந்து கொண்டாடுவதாகட்டும், கவலைகளிலும் கோபத்திலும் தன ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாகட்டும், அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் உணர்வுகளோடு ஒன்றியே அமையும்.  

உணர்வுகள் பன்முகம் கொண்டது. ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி, நெஞ்சைப் பிழியும் சோகம், வலி, ஆக்ரோஷம், விரக்தி, ஆதங்கம், பயம், இழப்பு.. இப்படி எண்ணற்றவை.சில உணர்வுகள் பகிரக்கூடியவை. சில பகிரக்கூடாதவை. நம் பகிரும் உணர்வுகள் பலரிடம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, மகிழ்ச்சியான உணர்வுகள் மகிழ்ச்சியைப் பரப்பும், சோகம்  மட் றவரை ஆட்கொண்டு விடும், இழப்பு வெறுமையை விதைத்து விடும். சில உணர்வுகள் பகிரக்கூடாதவை. உதாரணம், விரக்தி - அளவுகடந்த விரக்தி தீய எண்ணங்களை மேலெலும்பச்செய்யும், ஆக்ரோஷம் - நல்ல உறவுகளை, ஏன், உயிரைக்கூட கொன்றுவிடும்.

எல்லாம் பணிமயமான இந்த உலகத்தில் உணர்வுகளும் விலை போகின்றன, ஊடகங்களின் வடிவில். மகிழ்ச்சியை கொண்டாடும் ஊடகங்கள் வெகு சிலதே. 

இழப்பின் வலி, வாழ்வின் விரக்தி, அதில் தடுமாறும் நாயகனின் ஆக்ரோஷம், தேவையே இல்லாமல் வரும் நாயகியுடனான காட்சிகள், தன் தீவிரவாதத்தை சரி என்று நிரூபிப்பதில் போய்க்கொண்டிருக்கிறது, இன்றைய சினிமாக்கள்.

தந்தை-மகள், தாய்-மகன் பாசங்களை வியாபாரத்தனமாக எண்ணவில்லை நாங்கள். கவிதைகளாய் விவரித்த ஒரு தாய்க்கும்-கருவுக்கும் இடையே யான உணர்வுகளை கூட ரசித்தோம்.அனால், சிசுவை இழந்த தாயின் வலியை, அந்த உச்ச கட்ட கொதிநிலையை, எதற்காக காட்ட வேண்டும்??

தோல்வியை ஏற்கத்துணிவில்லாத நாயகன் போதையை நாடி செல்லத்தான் வேண்டுமா?

நாயகிகள் தங்கள் சுய மரியாதைகளை விடு விலகித்தான் நாயகர்களை கவர வேண்டுமா?

நகைச்சுவைக்கலைஞர்கள், தங்களையும் இழிவு படுத்தி, தங்கள் குடும்பத்தையும் இழிவுபடுத்தி த்தான் சிரிப்பு மூட்ட முடியுமா?

10 வருடம் முன்பான 'U' தணிக்கை சான்றிதழ் படங்களையும், தற்போதைய 'U' படங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால், உணர்வுகள் எப்படி வியாபாரமாக்கப்பட்டது  என்பது புரியும்.

திரைப்படங்கள் காற்று அடிக்கும் குழாய் போல, ஏற்கனவே பல உணர்வுகளை வெளியிட முடியாமல் திணறும் நம் மனதில், இன்னும் அழுத்தம் சேர்ந்தால், ஒரு நாள் வெடித்தே விடும். ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும் போதும் நம் மனதில் நாம் அறியாமல் பூஞ்சைகள் படர்ந்துவிடும். அது நாளடைவில் விஷக்காலான்களாய் மாறுவதற்குள், ஜாக்கிரதை!!